PUBLISHED ON : ஏப் 03, 2022

இந்த தேசத்தின் கதாநாயகன், ராமபிரான். பரம்பொருளான விஷ்ணுவே ராமனாக அவதாரம் எடுத்தார். அப்படியானால், அவரைப் பெற்ற தாய் கோசலை எத்தகைய புண்ணியவதியாக இருந்திருக்க வேண்டும். ராமனைப் பெற்றவள் பற்றிய வரலாறையும், அவளது கோவில் இருக்குமிடத்தையும் தெரிந்து கொள்வோமா!
கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி. இன்றைய உத்தர பிரதேசத்தின் அயோத்தி, லக்னோ, பிரயாக் போன்ற முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது. இந்த நாட்டின் பட்டத்து ராணிகளில் மூத்தவள், கோசலை.
சத்தீஸ்கர் மாநில தலைநகர், ராய்ப்பூர் அருகிலுள்ள சாந்த்குரி தான், கோசலை பிறந்த ஊர். இவள் முற்பிறப்பில், உலகின் முதல் மனிதன் மனுவின் மனைவியாக, சத்ரூபா என்ற பெயரில் இருந்தாள். சத்ரூபா என்றால், அழகான தோற்றமுள்ளவள் என்பது பொருள். இவளே உலகப் பெண்களில் முதலாமவள். இவர்களில் இருந்தே உலகம் விருத்தியடைந்ததாக நம் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
திருமால் மீது அதீத பக்தி கொண்டிருந்தாள், சத்ரூபா. சத்ரூபாவின் பக்தியைப் பாராட்டிய திருமால், அவளுக்கு காட்சி தந்து, 'என்ன வரம் வேண்டும்...' என்றார். 'மாயவா, தாங்கள் என் வயிற்றில் பிறக்க வேண்டும். என் குழந்தையாக வேண்டும். உங்களை நான் பாலுாட்டி, சீராட்டி வளர்க்க வேண்டும்...' என்று கேட்டாள்.
'அம்மா, இப்பிறவியில் இது உனக்கு சாத்தியமில்லை. அடுத்த பிறப்பில் நீ, கோசல நாட்டில் பிறப்பாய். அந்நாட்டு மன்னர் தசரதரை மணம் முடிப்பாய். அப்போது, சில நிபந்தனைகளுடன் உன் ஆசை நிறைவேறும். நான் உன் வயிற்றில் கருவாக உருவெடுப்பேன். ஆனால், அது ஆண் தொடர்பின்றி இருக்கும். ஒரு யாக குண்டத்தில் இருந்து கிடைக்கும் பாயாசமே, கருவாக மலரும்...' என்றார்.
அதன்படியே அவள், சாந்த்குரியில் பிறந்தாள். அவளது பெற்றோர் பற்றி உறுதியான தகவல் இல்லை. அவள், தெற்கு கோசல அரசர் சுகவுசல் மற்றும் ராணி அமிர்தபிரபாவின் மகள் என்கின்றனர். தசரதர் அவளை மணந்தார். குழந்தை இல்லை.
தெய்வத்தைப் பெறப் போகும் தெய்வத்தாய், தனக்கு குழந்தை இல்லையே என்ற கவலையில் இருந்தாள். ஆனால், கொடுத்த வாக்கை காப்பாற்ற, திருமால், கோசலை வயிற்றில் மகனாகப் பிறந்தாக வேண்டும். இதன்படி விதி விளையாடியது.
ஒருமுறை தசரதர் வேட்டைக்கு சென்ற போது. மிருகம் என நினைத்து, பார்வையற்ற பெற்றோரைக் கொண்ட சிரவணகுமாரன் என்ற சிறுவன் மீது அம்பெய்து கொன்று விட்டார். அந்த பெற்றோரின் சாபத்துக்கு ஆளானார்.
'என் பிள்ளையை பறித்த நீ, உன் பிள்ளையையும் இழந்து உயிர் நீப்பாய். புத்திர சோகமே நாங்கள் உனக்கு விடுக்கும் சாபம்...' என்றபடியே, அவர்களும் உயிர் விட்டனர்.
தசரதனுக்கு இந்த சாபம் துன்பத்தை தந்தாலும், தனக்கு குழந்தை பிறப்பது உறுதியாகி விட்டது என, நினைத்து மகிழ்ந்தார். அதன்படி, புத்திரகாமேஷ்டி யாக குண்டத்தில் கிடைத்த பாயாசத்தை கோசலை பருக, ராமன் பிறந்தார்.
ராமனைப் பெற்ற கோசலைக்கு, அவள் பிறந்த ஊரான சாந்தக்குரியில் கோவில் உள்ளது. ராய்ப்பூரில் இருந்து, 27 கி.மீ., துாரத்தில், ஒரு குளத்தின் நடுவில் கோவில் உள்ளதால், அனுமன் புல் என்ற பாலத்தின் வழியே செல்ல வேண்டும். தன் மடியில் ராமனை வைத்த நிலையில், கோசலையை இங்கு தரிசிக்கலாம்.
தி. செல்லப்பா
