PUBLISHED ON : பிப் 06, 2022

குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி சிவலிங்கம் மீது படும் அதிசயம், தமிழக கோவில்கள் சிலவற்றில் உண்டு. ஆனால், தினமும் கடலில் மூழ்கும் சிவன் கோவில், குஜராத் மாநிலம், கவி கம்போய் எனும் ஊரில் இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.தினமும் சிறிது நேரம், கடல் வற்றும்போது, பக்தர்கள் அங்கு சென்று சிவனைத் தரிசிக்கின்றனர்.சுவாமியின் பெயர் ஸ்தம்பேஸ்வர் மகாதேவ். அதாவது, தம்பேஸ்வரர். அகமதாபாத்திலிருந்து, 160 கி.மீ., வதோதராவிலிருந்து (முந்தைய பரோடா) 75 கி.மீ., சென்றால், கவி கம்போயை அடையலாம்.கடலுக்குள் துாண்கள் நட்டு, அதன் மேல் கோவிலை அமைத்துள்ளனர். இங்கே, அலைகள் அதிகமாக இருக்கும்போது, கோவில் மூழ்கி விடும். குறையும் நேரத்தில் கோபுரம் தெரியும். படிப்படியாக தண்ணீர் இறங்கி, கடலுக்குள் பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக பாதை தெரியும். பிறகு, முழு கோவிலும் வழிபாட்டுக்கு தயாராகி விடும்.பிரதமை முதல் அமாவாசை அல்லது பவுர்ணமி வரையான, 15 திதிகளில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் கோவில் தெரியும்; நேரம் மாறுபடும். தினமும் இரண்டு முறை மட்டுமே, கடல் வற்றும். அநேகமாக காலை அல்லது மாலை நேரத்தில் வழிபாட்டுக்கு செல்லலாம்.இதற்கான கால அட்டவணையை தன் இணைய தளத்தில் கோவில் நிர்வாகம் வெளியிடும். அதைப்பொறுத்து, பயணத்திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். இங்குள்ள சிவலிங்கத்தை, கார்த்திகேயன் - முருகப்பெருமான் வடித்து வழிபட்டதாக, தல வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. தாரகாசுரன் என்பவன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். தேவர்களைக் காக்க, அவனை வதம் செய்தார், முருகப்பெருமான்.ஒரு உயிரைக் கொன்றது பாவம் என்ற உணர்வு, அவருக்கு ஏற்பட்டது. தன் பாவம் நீங்க, மாமனார் விஷ்ணுவிடம் வழி கேட்டார். 'இதில், பாவம் ஏதும் இல்லை. மக்களுக்கு துன்பம் கொடுப்பவனைக் கொல்வதால் பாவம் ஏற்படாது...' என கூறி விட்டார், விஷ்ணு. ஆனாலும், மனம் சரிவராத முருகன், தன் தந்தையிடமே வழி கேட்டார். 'விஷ்ணு சொன்னது சரியே. இருப்பினும், உன் மன சாந்திக்காக யார் கண்ணிலும் படாத இடத்தில் அமர்ந்து, சிவலிங்கம் வடித்து, பூஜை செய். பாவம் நீங்கும்...' என்றார், சிவன். இதையடுத்து ஒரு கடலுக்கடியில் மறைந்த முருகன், அங்கேயே சிவலிங்கம் வடித்து, பூஜித்தார். 150 ஆண்டுகளுக்கு முன், கடல் வற்றியபோது, இந்த லிங்கம் தெரிய வந்தது. அதன் பின் கடல் வற்றுவதும், நிறைவதுமாக இருந்தது. பிறகு, கோவில் கட்டப்பட்டது. லிங்கத்தின் உயரம், 4 அடி. அரபிக்கடலின் காம்போய் வளைகுடாவில் கோவில் இருக்கிறது. ஏழு நதிகள் இந்தக் கடலில் கலக்கிறது. இவ்விடத்தை மஹிசாகர் என்கின்றனர். கங்கையில் குளிப்பதை விட பல மடங்கு பலன், மஹிசாகரில் குளித்தால் கிடைக்கிறது.சிவராத்திரி, அமாவாசை, சனிக்கிழமைகளில் அதிக கூட்டம் இருக்கும்.தொடர்புக்கு: 91 94087 07508.
தி. செல்லப்பா
