தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தங்கவேலு என்ற காந்தி பக்தர்!

தங்கவேலு என்ற காந்தி பக்தர்!

தங்கவேலு என்ற காந்தி பக்தர்!


PUBLISHED ON : செப் 29, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விடிந்தும் விடியாத காலைப்பொழுது... கதர் ஆடை அணிந்த பெரியவர் ஒருவர், 'பளீர்' தோற்றத்துடன் நடந்து செல்கிறார்.

அவர் கால்கள் சென்று நின்ற இடம், கோவை, சரவணம்பட்டியில் உள்ள ஒரு கோவில். அங்கு சென்றவுடன், கோவில் வாசல் மற்றும் சுற்றுப் புறத்தை கூட்டி, தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்கிறார்.

பின், பூஜைக்குரிய தேங்காய், பழம், சந்தனம், விபூதி, ஊதுபத்தி போன்ற பொருட்களுடன் கோவிலை திறக்கிறார். உள்ளே, மகாத்மா காந்தியின் உருவச்சிலை! அவரைப் பொறுத் தவரை, காந்திஜிதான் கடவுள். காந்திஜிக்கு மாலை அணிவித்து, ஊதுபத்தி ஏற்றி, வந்தே மாதரம் பாடல்கள் பாடி, 'மகாத்மா காந்திக்கு ஜே' என்ற, கோஷத்தை, மந்திரம் போல சத்தம் போட்டு சொன்னபடி, கற்பூர ஆரத்தி காட்டுவதற்கும், வெளியே பொதுமக்கள் வந்து நிற்பதற்கும் சரியாக இருக்கிறது.

அன்று, சுதந்திர தினம் என்பதால், ஜிலேபி, கடலை உருண்டை, சாக்லெட் போன்ற, இனிப்புகளும், காந்திஜியின் சத்திய சோதனை புத்தகமும், தேசிய கொடியும் வழங்கப்பட்டது. இது முடிந்ததும், மனிதர், தன் இரண்டு சக்கர வாகனத்தில், ஆயிரக்கணக்கான தேசிய கொடிகளை யும், காந்தி படத்தையும், சத்திய சோதனை புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார். அவரது இருசக்கர வாகனத்தை, சிறிய தேர் போல செய்து, அதனுள், காந்தி சிலையை வைத்திருந்தார். அவரது வாகனம் முதலில் போய் நின்ற இடம், காந்தி மார்க்கெட்.

அங்கு, பொதுமக்கள் முன், சுதந்திர தினத்தின் சிறப்பையும், காந்திஜியின் போதனைகளையும் எடுத்துச் சொல்லி, தேசிய கொடி, காந்தி படம், சத்திய சோதனை புத்தகத்தை வழங்கிவிட்டு, அடுத்த இடத்திற்கு விரைகிறார். இவர் பெயர் தங்கவேலு. 67 வயதாகும் இவர், கோவையில், 1947ல் பிறந்தவர். சுதந்திரம் வாங்கு வதற்கு பட்ட கஷ்டங்கள் குறித்து பெரியவர்கள் பேசுவதை, கேட்டு வளர்ந்ததால், காந்திஜி மீது அளவுகடந்த பாசமும், பக்தியும் ஏற்பட்டது.

காந்திஜியின் போதனைப்படி, எளிய வாழ்க்கை வாழ்ந்த தங்கவேலு, திருமணமான பின், மும்பை சென்றார். அங்கு, தன் கடுமையான உழைப்பின் மூலம் உயர்வுக்கு வந்த இவர், வருமானத்தில் பெரும்பகுதியை சமூக சேவை, பார்வையற்றோர், ஊனமுற்றோர்களுக்கு உதவி, அவர்களுக்கு பக்க பலமாக இருந்தார். இவரின், எளிமை மற்றும் சமூக பணியின் காரணமாக, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின், நண்பரானார்.

இவரது வளர்ச்சி பிடிக்காத, சிவசேனாவின் பால்தாக்கரே, 'தமிழன்' என்று, இனம் சார்ந்த, பிரித்தாளும் அரசியலில் இறங்கினார். 'இந்தியர் அனைவரும், ஒரு தாய் மக்கள்' என்ற எண்ணம் கொண்ட தங்கவேலு, இதனால், மனம் வேதனையடைந்து, கோவையை வந்தடைந்தார். இங்கு, தீவிர காந்திய பிரசாரத்தில் இறங்கியவர், காந்திஜிக்கு, கோவில் கட்ட முடிவு செய்து, தன் சொத்தை விற்று, கோவில் கட்டினார். காந்தி கோவிலில், தினமும் வழிபாடு உண்டு. பிற்சேர்க்கையாக, இவரை ஈர்த்த திருவள்ளுவர் மற்றும் காம ராஜரும் தற்போது, தெய்வமாக கோவிலுனுள் காந்தி அருகே இருக்கின்றனர்.

ஊரும், உறவும் ஆரம்பத்தில், இவரை, ஒரு மாதிரியாக பார்த்தாலும், இப்போது, 'இப்படி ஒரு அபூர்வ மனிதர் நம்மிடையே இருக்கிறாரே...' என்று, மரியாதையுடன் பார்க்கின்றனர். வாழ்வாதாரத்திற்கு, பல்பொருள் அங்காடி வைத்திருக்கும் இவர், நேரம் கிடைக்கும் போதெல்லாம், பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களுக்கு சென்று, காந்தியின் கொள்கைகளை பிரசாரம் செய்கிறார். நேர்மையும், எளிமை<யும் கொண்ட, ஒரு உண்மையான காந்தியவாதியாக வாழும் இவர், நம்மிடம், 'ஏனுங்க... மத்தவங்க பார்வையிலே, நான் எப்படியோ இருந்துட்டு போறேன். நீங்க சொல்லுங்க, என்னை பத்தி என்ன நினைக்கிறீங்க?'' என்றார்.

'திருவள்ளுவரும், காந்தியும், காமராஜரும் கோவிலினுள் சிலையாக, பேசாமல் நின்று கொண்டு இருக்கின்றனர். கோவிலுக்கு வெளியே, நீங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள்...' என்றேன் நான்.

இவரை, தொடர்பு கொள்ள மொபைல் எண் : 90425 96956.

***

எல். காந்திதாசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us