PUBLISHED ON : செப் 29, 2013

பிறரைக் கெடுக்க வேண்டாமே... ப்ளீஸ்!
சக பணியாளர்களிடம், 'ஜாலி'யாகப் பேசி, வேலை வாங்கும் தனியார் நிறுவன அதிகாரி நான். அதனால், எல்லாரிடமும் நல்ல பெயர். அண்மையில், ஒரு மாலை நேரத்தில், என் பியூனை அழைத்து, 'உ.பா., போட்டுட்டு வரலாம்... வா' எனக் கூறினேன். அவன் மறுக்க, நான் தொடர்ந்து நிர்பந்தித்தேன், உடனே, அவன் தன் மணிபர்சை, ஒரு கணம் திறந்து பார்த்து விட்டு, 'சாரி சார்... நான் வரலே...' என்று, உறுதியாக மறுத்து விட்டான்.
பணம் இல்லாததால், அவன் தயங்குவதாக எண்ணி, 'டேய்... உனக்கெல்லாம் பர்ஸ் எதுக்குடா... நான் தானே பணம் குடுக்கப் போறேன். ஏன் வரமாட்டேங்குறே...' என, அவனை கேலி செய்தேன்.
'பர்சுல வச்சுக்கிற அளவுக்கு, எங்கிட்ட பணம் இல்ல தான்... ஆனா, அதை விட விலை உயர்ந்த, என் பொண்டாட்டி, மகள், மகன் சேர்ந்து இருக்கிற, போட்டோவை வச்சிருக்கேன். நான் சபலப்படும் போதெல்லாம், இவங்க போட்டோவை தான் பார்ப்பேன். குடும்பத்துக்காக, நான் கெட்டுப் போக கூடாதுங்கிற மன உறுதி, உடனே கிடைச்சிடும்...' என்று அவன் சொல்ல, 'ரொம்ப சாரிப்பா...' என்று கூறி, என் தவறுக்கு வருந்தினேன்.
— ஆர்.மணிகண்டன், புதுச்சேரி.
தேவை பொது இடத்தில் மருத்துவசேவை!
சமீபத்தில், என் தோழியின் திருமணத்திற்காக, ராஜபாளையம் செல்ல வேண்டியிருந்தது. அதற்காக, என் ஊரில் இருந்து கிளம்பி, திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இறங்கி, அடுத்த பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். அப் போது, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், திடீரென்று மயக்கம் போட்டு, கீழே விழுந்து விட்டார்.
உடனே, பொதுமக்கள் சிலரும், பணியில் இருந்த ஒரு காவலரும், அவரை சுற்றி கூடி விட்டனர். அந்த செய்தியை, 108க்கு தகவல் சொல்லி, ஆம்புலன்ஸ் வரும் வரை, அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனரே தவிர, யாரும் அவருக்கு முதலுதவி செய்யவில்லை. இக்காலத்தில், இது ஒரு சாதாரண விஷயம் என்றாலும், அவ்வளவு பெரிய பஸ் நிலையத்தில், மக்களின் நன்மைக்காக, ஏன் மருத்துவ சேவை மையம் ஒன்றை அமைக்க கூடாது? பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிறிய அளவிலாவது மருத்துவ சேவை மையம் இருந்தால், இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகளில், பொதுமக்களுக்கு முதலுதவி செய்ய முடியுமே!
அரசாங்கம், இதுபோன்ற மையங்களை, முக்கியமான இடங்களில் நிறுவலாமே!
— சரவணன், மார்த்தாண்டம்.
மருமகளை குற்றம் சுமத்தலாமா?
சில குடும்பங்களில், குழந்தைகள் மீது காட்டும் பாரபட்சமான பாசமும், கவனிப்புமே, பிளவுக்கு வழி வகுக்கிறது. தங்கள் தவறை உணராத பெற்றோர், குடும்பம் சீர்குலைய, வீட்டிற்கு வந்த மருமகள் தான் காரணம் என்று, யோசிக்காமல், குற்றம் கூறி விடுகின்றனர். மூத்தவனுக்கு அதிகப்படியான சலுகைகள் அல்லது கடைக்குட்டிக்கு அபரிமிதமான செல்லம் என்று, பாரபட்சம் காட்டும் சூழ்நிலையில், இடைப்பட்ட குழந்தைகள், தத்துக் குழந்தைகளோ என்ற ரீதியில் தத்தளிக்கும்.
சிறுவர்களாக இருந்த போது, கவனத்தில்படாத இந்தக் குறை, அவர்கள் வளர்ந்து, குடும்பஸ்தர்களாக மாறும் சமயம், விஸ்வரூபம் எடுத்து, குடும்பத்தில் பெரும் பிளவை ஏற்படுத்தி விடுகிறது. குடும்ப ஒற்றுமையை கட்டிக் காப்பதில், மருமகள் தான் ஈடு கொடுக்க வேண்டும் என்று வரையறுக்காமல், அனைவரும் பொறுப்பு ஏற்று நில்லுங்கள். இதற்கு, அஸ்திவாரத்தை பலமாகப் போட வேண்டியது, பெற்றோரின் கடமை.
— எம்.தேவராஜன், விழுப்புரம்.
