தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஞானிகளின் செயல் நன்மைக்கே!

ஞானிகளின் செயல் நன்மைக்கே!

ஞானிகளின் செயல் நன்மைக்கே!


PUBLISHED ON : ஆக 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 11, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எதையும் விடுவதில்லை. எல்லாவற்றையும் எடுத்து அப்பிக் கொள்கிறோம். அதனால், பாதகம் வருவது தெரிந்ததும், அவற்றை தள்ள முயல்கிறோம். அவை, நகர மாட்டோம் என்று அழுத்தமாக இருக்கும்போது, யாராவது ஞானி ஒருவர் வந்து, நமக்கு உதவ முயல்கிறார்.

அந்த ஞானியின் உதவியை ஏற்கிறோமா, இல்லையா... விளைவு என்ன என்பதை, விளக்கும் கதை இது:

இதிகாச -புராணங்களில் புலமைப் பெற்ற அரசர், அலர்க்கர். மிகவும் நல்லவர்; மனதால் கூட அடுத்தவருக்கு கெடுதல் நினைக்காதவர்; அடுத்தவருக்காக, மாபெரும் தியாகங்கள் செய்தவர். இவரின் பேரும், புகழும் எங்கும் பரவின.

அதேசமயம், அலர்க்கரால், புகழாசையையும், அதற்கு காரணமான, ராஜ பதவியையும் துறக்க முடியவில்லை. தகுதியான பிள்ளைகள் இருந்தும், அரச பதவியை அவர்களிடம் ஒப்படைக்க, மனம் வரவில்லை.

'அரசர், நல்லவர் தான். ஆனால், முதுமை வந்த பின்னும், அரச பதவியை, பிள்ளைகளிடம் ஒப்படைக்காமல், பிடிவாதமாக இருக்கிறாரே... என்ன அரசர் இவர்...' என்று, வசைபாட துவங்கினர், மக்கள்.

அலர்க்கரின் இந்த புகழ் ஆசை, அவரது அண்ணனான, காட்டில் தவ வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த, சுபாகுவிற்கு தெரிந்தது.

'நற்செயல்களால், பேரும், புகழும் தாமாகவே வந்து சேரும்... ஒரு காலத்தில், தாமாகவே விலகிப் போய் விடும். அதை உணர்ந்து, அவற்றிலிருந்து நாம் விலகி நிற்பது தான் ஞானம், அறிவுடைமை. விலகி நில், முதுமையிலாவது தவம் செய், இறைநிலை அடை...' என்று, தகுந்தவர் மூலம், தம்பிக்கு கூறி அனுப்பினார்.

கேட்பதாக இல்லை, அலர்க்கர்.

தம்பிக்கு புத்தி புகட்ட தீர்மானித்தார், சுபாகு.

தன்னை, குருவாக கருதும், காசி அரசர் மூலம், 'ஒரு வாரத்திற்குள், சுபாகுவிடம், அரசை ஒப்படைக்க வேண்டும். மறுத்தால், போர்க்களத்தில் சந்திக்கலாம்...' என்ற தகவல், அலர்க்கருக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆவேசம் கொண்டார், அலர்க்கர்.

விளைவு... கடும் போர் மூண்டது.

அரண்மனை, செல்வம் முழுதும் காலியாயின. செய்வதறியாது திகைத்தார், அலர்க்கர்.

'மகனே... மீள முடியாத பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும்போது, இந்த மோதிரத்தில், வைரக்கல்லின் கீழே, வினை தீர்க்கும் மந்திரம் இருக்கும்...' என்று சொல்லி, தாயார் தந்தது, நினைவிற்கு வந்தது.

அதை எடுத்து பார்த்த போது, அதில், 'முழு மனதோடு, பற்றுதலை விலக்கு; முக்தி வழியில் முயற்சி செய்; இக வாழ்வில் உழலாதே...' என, எழுதி இருந்தது.

மூடியிருந்த அறையை திறந்தவுடன், காற்றும், ஒளியும் அந்த அறைக்குள் பரவும். அது போல, தாயார் எழுதியிருந்த தகவலை படித்ததும், அலர்க்கரின் மனதில், தெளிவும், வைராக்கியமும் உண்டாயின.

அப்போதே, பிள்ளைகளிடம், அரச பதவியை ஒப்படைத்து, தத்தாத்திரேயர் என்ற முனிவரிடம் உபதேசம் பெற்றார்; மனம் தெளிவடைந்து, அமைதி பெற்றது.

அண்ணன், சுபாகுவின் திருவடிகளில் விழுந்து வணங்கினார், அலர்க்கர். தெளிவு பெற்ற, தம்பியை, மனதார பாராட்டினார், சுபாகு.

மகான்கள், பல விதங்களிலும் நமக்கு அறிவுறுத்துவர். எந்த விதத்திலும் நம்மை பக்குவப்படுத்தாமல் விட மாட்டார்கள். உணர வேண்டியதும், உயர வேண்டியதும், நம் கடமை!

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us