PUBLISHED ON : டிச 04, 2016

கஷ்டப்பட்டு கடுமையாக உழைக்கிறோம்; அவ்வுழைப்பிற்கு ஏற்ற பலனை அடையும் அதே நேரத்தில், நான் எனும் ஆணவம் மனதில் புக, அந்த ஆணவமே நம்மை அழித்து விடுகிறது.
பரதபுரம் என அழைக்கப்படும் குழல்மன்னம் எனும் ஊரில், மந்திரவாதி ஒருவன் இருந்தான். கடுமையான ஜப - தவ பயிற்சிகளின் மூலம், சில தேவதைகளை தனக்கு அடிமையாக வைத்திருந்தான். மந்திரவாதியின் தவத்திற்கு கட்டுப்பட்டு, அவனிட்ட வேலைகளை செய்து வந்தன, தேவதைகள். அதை உணராத மந்திரவாதியோ, எல்லா தெய்வங்களும் தன் ஏவலாளிகள்; அவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் தன் உத்தரவுப்படி தான் நடக்கும் என நினைத்து, அகங்காரம் கொண்டான்.
அதன் விளைவாக, சித்தூரில் உள்ள தன் மாமியார் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம், கொடும்பு எனும் ஊருக்கு அருகாமையில் உள்ள, மணப்புளி பகவதியை அழைத்து, தன் வெற்றிலை பெட்டியை சுமந்து வரச் சொல்வான்.
மணப்புளி பகவதியும், வெற்றிலை பெட்டியை சுமந்தபடி, அடுத்த பகுதியில் உள்ள தேவியான, புளியபகவதியிடம் ஒப்படைத்து திரும்புவாள். புளிய பகவதி, சமிட்டி பகவதியிடம் தர, அவள், அடுத்ததாக இளைய பகவதியிடம் தந்து திரும்புவாள். இளைய பகவதியோ, மந்திரவாதியுடன், அவன் மாமியார் வீடு வரை சென்று திரும்புவாள்.
ஒருநாள், நான்கு பகவதிகளும், மந்திரவாதியிடம், 'நீ எங்களையே வேலை வாங்குறாயே... இந்த ஊர் முருகனையும் அழைத்து, ஏதாவது வேலை வாங்கேன்...' என்றனர்.
ஏற்கனவே, தன் மந்திர சக்தியின் காரணமாக, ஆணவம் பிடித்திருந்த மந்திரவாதி, கொடும்பு கோவிலின் கோபுர வாசலில் நின்றபடி, 'வேலவனே... வெளியில் வா...' என்று கத்தினான்.
அடுத்த வினாடி, கருவறையில் இருந்து வேலாயுதம் ஒன்று, 'விர்'ரென்று பறந்து வந்து, மந்திரவாதியின் மார்பில் பாய, மந்திரவாதியின் கதை முடிந்தது.
விவரமறிந்த ஊர் மக்கள் மகிழ்ந்தனர். குழல்மன்னம் மற்றும் சித்தூர் ஆகிய இரு ஊர்களிலும் வசித்து வந்த மந்திரவாதியின் இனத்தை சார்ந்தவர்கள், தங்களுக்கும் ஆபத்து நேர்ந்து விடுமோ என பயந்து, கொடும்பு கோவிலுக்கு வந்து, 'முருகா... அவன் செய்த தவறுக்காக, எங்களை தண்டித்து விடாதே... எங்கள் குலம் பிழைக்க வேண்டும்; அபராத தொகையாக, மாதா மாதம் இங்கு வந்து காணிக்கை செலுத்துகிறோம்; எங்களை காப்பாற்று...' என்று, மனமுருகி வேண்டி, காணிக்கை செலுத்தினர்.
இன்று வரை, அப்பரம்பரையினர் அந்த ஆலயத்திற்கு வந்து, அவ்வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். தீமையை அழித்த அத்திரு முருகனின் ஆலயம், பாலக் காட்டில் இருந்து, சித்தூர் செல்லும் வழியில், 5 கி.மீ., தூரத்தில், கொடும்பு எனும் ஊரில் அமைந்துள்ளது.
இத்திருத்தலம், பாலபுரம் செண்பகாரண்யம் என்று அழைக்கப்பட்டாலும், கேரள மக்கள், 'பழனியில் பாதி கொடும்பு' என்றழைத்து, முருகனை வழிபடுகின்றனர்.
அருணகிரிநாதரும், இத்திருத்தல முருகனை துதித்து பாடியுள்ளார். எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும், ஆணவம் கொண்டால் அழிவான் என்பதை விளக்குகிறது இவ்வரலாறு.
பி.என்.பரசுராமன்
திருவாசகம்!
காணுமாறு காணேன் உன்னை
அந்நாள் கண்டேனும்
பாணே பேசி என்தன்னைப்
படுத்தது என்ன பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆரமுதே
அத்தா செத்தே போயினேன்
ஏணாண் இல்லா நாயினேன்
என் கொண்டு எழுகேன் எம்மானே!
விளக்கம்: சிவபெருமானே... மேலான ஒளிப்பிழம்பே! ஆணாகியும், பெண்ணாகியும் இருப்பவனே... திகட்டாத அமுதமே... உன்னை காணும் பேறு பெற்ற அடியேன், உன்னை உணரும் வழியை அறியாமல் போய் விட்டேன். பாழானவைகளை பேசி, உன்னை உணர விடாமல், என்னை கீழ்மைப்படுத்தியது எதுவோ! சிறிதும், மன வலிமையும், நாணமும் இல்லாத நான், இனி எதன் துணைக் கொண்டு உயர்வேன்... அடியேனுக்கு, துணையாக நின்று, அருள்புரிவாய் சிவபெருமானே!
