தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : டிச 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவிற்கு —

நான், பிளஸ் 2 மாணவி; என் உடன் பிறந்தோர், இரண்டு அக்கா மற்றும் ஒரு அண்ணன். நான் தான் கடைசி. மூத்த அக்காவிற்கு திருமணமாகி, இரண்டு மற்றும் ஒரு வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். என் அக்காவின் கணவர், வழக்கறிஞராக உள்ளார்.

என் பிரச்னை, என்னவெனில், நான், ஒன்பதாவது முடித்து, விடுமுறைக்கு, அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன்.

என் அக்காவின் கணவர், மாடியில் தான் படுப்பார்; அக்கா முதல் குழந்தையுடன், ஹாலில் படுப்பாள். நான், படுக்கை அறையில் தூங்குவேன்.

ஒருநாள் இரவில், அக்கா கணவன் எழுந்து வந்து, என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டான். நான் அவனிடமிருந்து தப்பி விட்டேன். அவன், என்னிடம், 'உன் அக்காவிடம் இதைச் சொன்னால், அப்புறம் உன் அக்காவின் வாழ்க்கையே போய் விடும்...' என்று மிரட்டினான். எனக்கு அழுவதை தவிர, வேறு வழியில்லை.

மறுநாளும், அவன் என்னை கட்டாயப் படுத்தினான். 'எனக்கு இதெல்லாம் பிடிக்காது...' என்று கூறி, விலகி விட்டேன். அடுத்த நாள், என் முகம் வாடியிருப்பதை கண்டு, என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டாள், என் அம்மா.

ஆனால், அவன், என் இரண்டாவது அக்காவுடனும் உறவு வைத்துள்ளான். அவளும், என் அக்காவிற்கு துரோகம் செய்துள்ளாள். என் மூத்த அக்கா, கறுப்பாக இருந்தாலும், அழகாக இருப்பாள்.

தற்போது, அவர்களது விஷயம் எங்கள் வீட்டில் எல்லாருக்கும் தெரிந்து விட்டது. அதனால், அவர்கள் தைரியமாய் இருக்கின்றனர். தற்போது, என் இரண்டாவது அக்காவிற்கு திருமணம் செய்யலாம் என்று பேச்சை எடுத்தால், 'உன் அம்மாவை, கொலை செய்துடுவேன்...' என்று, என் அக்காவை மிரட்டுகிறான்.

அவனுடைய சகோதரர்கள் அனைவரும் வசதியானவர்கள். மேலும், இவன் வழக்கறிஞர் என்பதால், போலீஸ்காரர்களுக்கு பயப்பட மாட்டான். என் அக்காவின் வாழ்க்கையை நினைத்தால், பயமாக உள்ளது.

அவன், ஆரம்பத்திலிருந்தே, நல்லா குடிப்பான். ஆனா, நல்லவனாக இருந்தான். திருமணத்துக்கு பின், மாத்திடலாம்ன்னு நினைத்து, திருமணம் செய்து வைத்த பெற்றோர், இப்போது புலம்புகின்றனர்.

இரண்டாவது அக்காவிற்கு திருமணமும் செய்ய முடியாமல், மூத்த அக்காவின் வாழ்க்கையும் பார்க்க முடியாமல், அழுகின்றனர், என் பெற்றோர். தவிர, என்றைக்காவது என்னையும் அவன் ஏதாவது செய்துடுவனோ என்று மன உளைச்சலாக உள்ளது. அப்படி ஏதாவது செய்தால், நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டேன். நீங்கள் சொல்லும் பதிலில் தான், என் முடிவு இருக்கு. அவனை எதிர்த்துப் போராட, ஒரு நல்ல முடிவு தாருங்கள்.

இப்படிக்கு,

உங்கள் பதில் எதிர்நோக்கும் உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

ஒரு குடும்பத்தில், நான்கு சகோதரிகள் இருந்தால், அந்நால்வரும் ஒரே கொடியில் பூத்த ஒரே மணமுள்ள பூக்களாவர். இதை, சில காட்டுமிராண்டி ஆண்கள் ஒப்புக் கொள்வதில்லை. கொழுந்தியாள் மற்றும் மச்சினிகளை இரை எடுக்க, சிலந்தி வலை பின்னுகின்றனர், சில சதிகார ஆண்கள். தனியாய் சிக்கும் ஆட்டுக்குட்டியை சுருட்டி, கபளீகரம் செய்ய, மலைப்பாம்பாய், வாயைப் பிளக்கின்றனர்.

பெற்றோர் தான், இதை எல்லாம் உணர்ந்து, திருமணமான மகள் வீட்டுக்கு, திருமணமாகாத மகள்களை அனுப்புவதை, சாமர்த்தியமாக தவிர்க்க வேண்டும். அதேபோன்று, மணமான பெண், தன் இளைய சகோதரிகளை, தன் கணவனின் பார்வையில் படாமல், பாதுகாக்க வேண்டும்.

மணமாகாத பெண்களும், தங்கள் அக்கா கணவனிடம், நெருங்கி பழகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாமா - மச்சினி உறவு, இரு பக்கமும் கூர்மையுள்ள கத்தி; இந்த உறவு முறையை, மகா எச்சரிக்கையாய் கையாள வேண்டும்.

நீ, 17 வயது பெண்ணாக இருந்த போதும், அக்கா கணவனின் துர்நடத்தைக்கு எதிராக கொதித்து எழுந்திருப்பது, பாராட்டத்தக்கது. மாமாவின் அடாவடித்தனத்தை அக்காவிடமும், உன் பெற்றோரிடமும் வெளிப்படையாக கூறு. அத்துடன், 'என்னை தவறான எண்ணத்துடன் நெருங்கினால், கொலை செய்யவும் தயங்க மாட்டேன்...' என, அவனை எச்சரி. அத்துமீறினால், 'மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன்...' என மிரட்டு. 'துர்நடத்தை தொடர்ந்தால், உள்ளூர் நீதிமன்றத்திலும், 'பார்' கவுன்சிலிலும் புகார் கொடுப்பேன்...' என பீதியை கிளப்பு. உன்னை தொட்டால், தீராத அவமானமும், உயிராபத்தும் வந்து சேரும் என்பதை, உன் வார்த்தையால், செயலால் அவனுக்கு உணர்த்து.

உன் இளைய அக்காவுக்கு, தகுந்த அறிவுரை கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்து. மாமாவுடனான உறவு, பன்றி, சேற்றை வாரி, இறைத்து விட்டதற்கு சமம். குளித்து, சேற்றை கலைத்து, திருமணத்திற்கு தயாராகட்டும் உன் அக்கா.

தீமைக்கு எதிராக, திரண்டு, போர்க்குரல் எழுப்பினால், தீமை, பின்னங்கால் பிடறியில் இடிபட ஓடிவிடும். தைரிய லட்சுமியாய் வீறு கொண்டு எழுந்தால், எந்த பங்கமும் வராது. நீ எதற்கு உயிரை மாய்க்க வேண்டும்?

படிப்பில் முழு கவனம் செலுத்து; குறைந்த பட்சம், ஒரு முதுகலை பட்டம் பெற்று, சொந்தக்காலில் நிற்க ஆயத்தம் செய். அக்கா குடும்பத்துடனான, உறவை தற்காலிகமாக துண்டி. தற்காப்புக்கு, மிளகாய் பொடி, பெப்பர் ஸ்ப்ரே மற்றும் சிறு கத்தியை, உன், 'பேக்'கில் பதுக்கு.

மனைவியின் சகோதரியை, மணம் புரிவதே பாவம் எனும் போது, காம இச்சையுடன், அவளை நெருங்குவது, எவ்வளவு பெரிய கொடிய குற்றம் என்பதை, உன் அக்கா கணவன் உணரும் நாள் விரைவில் வரும்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us