PUBLISHED ON : ஜூலை 06, 2014

ஜப்பானில் நாங்கள் படம் எடுக்கத் துவங்கிய ஆரம்ப நாட்களில், இயற்கை எங்களோடு ஒத்துழைக்கவில்லை. ஜப்பானிய மக்களின் மனமும், ஆற்றலும் ஒத்துழைக்கத் தயாரா இருந்தும், இயற்கை, தன் வலிமை மிகப் பெரியது என்பதை, எங்களுக்கு எடுத்துக் காட்டி எச்சரித்தது.
இந்தியாவுக்குள் படம் எடுக்கும் போதே, எத்தனையோ சிக்கல்கள், பிரச்னைகள் ஏற்படும்.
சகல வசதிகளும் பெற்றுள்ள உள்நாட்டிலேயே கஷ்டங்கள், ஏற்படுகிறதென்றால், வெளிநாட்டில் படம் தயாரிப்பவர்களின் நிலை? அதிலும், இந்தியாவால் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு செலாவணிக்குள், இவைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்வது என்றால் எப்படி முடியும்? ஆயினும், அதற்காக, நம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளாமல், எப்படி திரும்பவுது?
நல்ல வேளையாக,
எம்.ஜி.ஆர்., பிக்சர்சுக்கு சொந்தமான, 'மிச்சல்' என்ற, பெரிய ஒளிப்பதிவு கருவியையும், கையில் தூக்கியவாறு படம் எடுக்க கூடியதும், கனமற்றதுமான, வாடகைக்கு எடுத்த, 'ஏறி' என்ற, சிறிய ஒளிப்பதிவு கருவியையும் எடுத்துச் சென்றிருந்தோம்.
அதனால், அந்தச் செலவு, எங்களுக்கு ஏற்படாதது மிக உதவியாயிருந்தது.
யூமூரிலாண்ட் என்ற இடத்தில், அன்னப்பட்சி போன்ற பெரிய படகில், (அது சிறிய கப்பல் அளவிற்கு பெரிதாயிருந்தது.) 'பன்ஸாயி' என்ற, காதல் பாட்டை, படமாக்கினோம். பாடலைப் பாடி, நடித்துக் கொண்டிருந்த போது, அந்தப் படகுக்கு பக்கத்தில், உயரத்தில் பாலத்தின் மீது செல்லும், சிறிய மின் ரயிலை சேர்த்து, படமாக்க விரும்பியதன் விளைவு, இரண்டு மணி நேரம் வீணாயிற்று. இருப்பினும், ஆசைப்பட்டதைக் காத்திருந்து படமாக்கினோம்.
அப்போது, ஆர்.எம்.வீரப்பன், 'இருட்டப் போகுது; சீக்கிரம் முடிக்கலேனா அப்புறம் கஷ்டம்...' என்று, எச்சரித்த வார்த்தைகள் கேட்டன.
அவர் அங்கெல்லாம் மனம் விட்டு சிரித்த நாட்கள் மிக குறைவென்று சொல்லலாம். அவர் சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்து, மற்றவர்கள் வேலையில் அலட்சியமாக இருந்து விடுவர் என்று எண்ணி, அப்படி இருந்தாரோ என்னவோ!
ஆனால், நாள், செலவு இவைகளில் அவ்வப்போது அவரிடமிருந்து அபாய அறிவிப்பு வரும். 'இந்த ஊரில் இதற்கு மேல் செலவழிக்க இயலாது; எனவே, உடனே திட்டமிட்ட அடுத்த ஊருக்கு புறப்பட வேண்டும்...' என்பார். உடனே என்றால், 'ஓரிரண்டு நாட்கள் அதே ஊரில் படமெடுக்கலாம்; அதற்கு மேல் தாங்காது....' என்று, புரிந்து கொள்வேன். இப்படி என் சூழ்நிலையை எடுத்துக்காட்டி, எல்லா வகைகளிலும், எனக்கு உறுதுணையாக இருந்தார் ஆர்.எம்.வீரப்பன்.
ஜப்பானியர்கள் தங்கள் உழைப்பை வீணடிப்பதில்லை; அதேபோல், தங்கள் உழைப்பை காசாக்குவதில், மிகுந்த கெட்டிக்
காரர்கள். மேலும், அவர்கள் தங்கள் அறிவை, ஒரு எல்லைக் கோட்டுக்குள் அடைத்துக் கொள்வதும் இல்லை. பற்பல ஆராய்ச்சி முயற்சியிலேயே தங்களது நேரத்தை கழிக்கின்றனர். எனக்கு தெரிந்த வரையில், ஜப்பானியர்கள் தங்களுடைய பணி எதுவாயினும், அதை நன்கு புரிந்து கொண்ட பின் தான், செயலில் இறங்குகின்றனர்.
எங்கள் படப்பிடிப்புக்கு உதவி செய்ய, சில உதவியாளர்களை ஏற்பாடு செய்திருந்தனர். 'லைட் பாய்' என்று, இங்கே அழைக்கப்படுகின்றனரே, அது போன்ற பணிகளை செய்யவும், ஒளிப்பதிவு கருவியை இயக்குவதற்கு உதவவும், அவர்கள் பயன்பட்டனர்.
ஒரு நடிகரோ, நடிகையோ வரும் போது, விளக்கு ஒளியை அவர்கள் மீது படுமாறு காண்பிக்க சொன்னால், உடனே, அவர்கள் செய்வது இல்லை. எவ்வளவு தூரம் வருவர்; எது வரை விளக்கை திருப்ப வேண்டும்; அவர் எப்படியெல்லாம் நடிப்பார் என்பதை பற்றி, விவரமாக கேட்டு, பின், செயலில் இறங்குவர்.
குறிப்பிட்ட இடத்திலிருந்து சிறிது தள்ளி நின்று விட்டாலும், முன் குறிப்பிட்டு சொன்ன இடத்தில் விளக்கொளியையோ அல்லது கதிரவனின் ஒளியையோ பாய்ச்சுவர்.
மேலும், ஒரு காரியத்தை சொல்லி, அதே நேரத்தில், அதற்கு தொடர்பான இன்னொன்றையும் செய்ய சொன்னோமேயானால், அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். அதாவது, ஒரு காரியத்தை மட்டும் தான், அவர்கள் செய்வார்களே தவிர, அதே நேரத்தில் இன்னொன்றை சேர்த்து செய்ய மாட்டார்கள். தமிழகத்தில் என் அனுபவம் அப்படியல்ல. இங்குள்ள கலைத் தோழர்கள், ஒரே நேரத்தில், பல வேலைகளை ஒருங்கிணைத்து செயல்படுவதை, கண்டவன் நான்.
ஜப்பான் தொழிலாளிகளையும், தமிழகத்தில் உள்ள நம் தொழிலாளிகளைப் பற்றி யும் ஒப்பிட்டு, பேசி, மகிழ்ந்த நாட்கள் பல.
இவர்களை, பகல், 12:00 மணிக்கெல்லாம், பகல் உணவுக்கும், மாலை 7:00 மணிக்கு, இரவு உணவுக்கும் அனுப்பியாக வேண்டும். இப்படி வரையறை வைத்து, தொழில் செய்பவர்களை துணையாக வைத்து, நேரம், காலம் பாராது, வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில், படம் தயாரித்தோம். ஆனால், இரண்டு, மூன்று நாட்களில், அந்த தோழர்கள், எங்களோடு சேர்ந்து, தங்களது பழக்கங்களை மாற்றிக் கொண்டு விட்டனர். அவர்களில், 'ஹீரோஹ்யூட்டோ' என்ற கார் ஓட்டுனர் ஒருவர். அவர் வெறும் கார் ஓட்டியாக மட்டும் இல்லாமல், விளக்குகளை சரி செய்வது, கேமராவை எடுத்து வைப்பது, ஒலிபெருக்கி இயந்திரத்தில் கோளாறென்றால் அதையும் கவனிப்பது... இப்படியாக பல வேலைகளை செய்தார்.
இவரை விட்டு பிரியும் போது, நாங்களும் அவரும் கண்ணீர் விட்டவாறே தான், பிரிந்தோம். ஆங்காங்கே கான்ட்ராக்ட் எடுத்திருந்தவர்களும், இப்படித் தான்.
இரண்டு நாட்களாக வானம் மப்பும், மந்தாரமாக இருந்தது. மூன்றாம் நாள், மேக்-அப் போட்டு, கார்களில் ஏறிப் புறப்பட்டோம். கான்ட்ராக்ட் எடுத்திருந்த கவாய் என்பவரும், அவரது நண்பர் ஹென்றியும், 'இந்த மாதம் முழுவதும் இங்கு இப்படித் தான் இருக்கும். உங்கள் அதிர்ஷ்டம் எப்படியிருக்கிறது பார்ப்போம்...' என்று, கூறினர்.
ஹிரோஷிமா என்ற இடத்தில், பியூஜி என்ற எரிமலையின் எதிரில் உள்ள ஏரியில் படமாக்க சென்றோம்.
ராணுவ முக்கியத்துவம் உள்ள இடங்களை தவிர, வேறு இடங்களில் படமாக்க அனுமதி வாங்கும் தேவை அங்கெல்லாம் கிடையாது. எனவே, எங்களுக்கு ஒரு வகையில், அது மிகவும் உதவியாயிருந்தது. அங்கு செல்ல, காரில் ஏறினோமோ, இல்லையோ, மழை தூற ஆரம்பித்தது.
நாங்கள் துவங்கிய பயணத்தை நிறுத்த தயாராயில்லை. நாளை எடுக்கலாம் என்று நினைக்கவே இடம் இல்லை. ஆர்.எம்.வீரப்பன் உருவம் தான், முன்னால் நின்றது. பணத்தின் நிலைமையையும், மற்ற நடிக, நடிகையர்களுக்கு தமிழகத்தில் பல பட தயாரிப்பாளர்களுடன் செய்து கொள்ளப்பட்டிருந்த, கால்ஷீட் பிரச்னைகளும், நாங்கள் வெளிநாட்டில் அதிக நாட்கள் தங்க
இயலாத வகையில் இருந்தன.
பியூஜி எரிமலைக்கு எதிரே இருந்த ஏரியில், படுவேகமாக செல்லும் படகில், காதல் பாட்டின், ஒரு பகுதியை படமாக்கினோம். அங்கு செல்லும் வரை, அந்தப் படகை பார்க்கும் வரை, எனக்கு அப்படிப்பட்ட யோசனை எதுவும் இல்லை. நீரில் நல்லதொரு பாறை போன்ற மண்டபத்தில், அந்தப் பாட்டை படமாக்க வேண்டும் என்பதே, என் எண்ணம். ஆனால், அங்கு சென்று, அந்த இடத்தின் அமைப்பை பார்த்ததும், என் எண்ணத்தை மாற்றி, விசைப் படகில் பாடலைப் படமாக்கினேன். நானும், சந்திரகலாவும் கலந்து கொண்ட அந்த பாடல் காட்சியை மனத்திருப்தி பெறும் அளவுக்கு, படமாக்கிய பின், அந்த இடத்திற்கருகில் இருந்த, மீன் சர்க்கஸ் காட்சியை படமாக்க ஆசைப்பட்டேன்.
மீன் கண் காட்சி பற்றி, கேள்விப்பட்டிருந்தேனே தவிர, நேரில் பார்த்தது இல்லை. கட்டணம் செலுத்தி, உள்ளே சென்றோம். அதன் உரிமையாளரிடம், 'இதைப் படமாக்க வேண்டும்; பகலில் செய்து காட்ட இயலுமா?' என்று கேட்டோம். அதற்கு அவர், 'தனக்கு அதற்காக பணம் வேண்டாம் என்றும், காட்சி நடைபெறும் போதே படமெடுத்துக் கொள்ள இயலுமானால், எடுத்துக் கொள்ளுங்கள்...' என்று, சொல்லி விட்டார்.
மீன் சர்க்கசை நானும், சந்திரகலாவும், நாகேஷும் பார்ப்பது போல, படமாக்கினோம். நாய், புலி போன்றவை, நெருப்பு பற்ற வைத்த வளையத்திற்குள் பாய்வது போல், மீன் தண்ணீரிலிருந்து மேலே எழும்பி, அந்த வளையத்தின் வழியாக பாய்ந்து, மறுபுறம் தண்ணீருக்குள் விழும். இக்காட்சியையும், வேறு ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளையும் படமாக்கி, அங்கிருந்து புறப்பட்டோம்.
டோக்கியோவிலிருந்து புறப்படும் போது, மழைத் தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஆனால், நாங்கள் குறிப்பிட்ட இடம் சேர்ந்த போது, சூரியன் தன் ஒத்துழைப்பை முழுக்க முழுக்க தந்தான். நினைத்ததை விட, நல்லதும், புதியதுமான காட்சிகளை படமாக்கிய மகிழ்வில், அனைவரும் டோக்கியோவுக்கு திரும்பினோம்.
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
- எம்.ஜி.ஆர்.,
