PUBLISHED ON : ஜூலை 06, 2014
அனுபவங்கள் பேசுகின்றன!
சமீபத்தில், பேருந்து நிறுத்தத்தில், பஸ்சுக்காக காத்திருந்தேன். அருகில், இரு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு போன் வரவே, அதை எடுத்து பேசியவர், 'இல்லம்மா நீ முதல்ல ஆபீசுல ஜாயின்ட் செய்துட்டு எனக்கு சொல்லு. நான் இரண்டு நாள் லீவு போட்டுட்டு, பெங்களூரு வர்றேன்...' என்றவரின் தொலைபேசி உரையாடலின் தொடர்ச்சியில், மறுமுனையில் பேசியது, அவரின் காதலி என்று எனக்கு புரிந்தது.
உரையாடல் முடிந்ததும், உடன் இருந்த நபர் கேட்டார்... 'என்னடா உன் ஆளு, பெங்களூரு வேலையில சேர்ந்தாச்சா... ரெண்டு நாள் லீவு போட்டு, பெங்களூரு போய் கல்யாண விஷயம் பேசப் போறீயா?' என்று கேட்டார். அதற்கு, அந்த இளைஞன், 'கல்யாணமா! அவளயா... நீ வேற... அவளுக்கு ஐ.டி., கம்பெனியில, வேலை கிடைச்சுருக்கு. நல்ல துட்டு; இரண்டு நாள் லீவு போட்டு, அவ பணத்திலேயே பெங்களூர சுத்திப் பார்த்து, எல்லாத்தையும், 'என்ஜாய்' செய்ய போறேன்...' என்றான்.
மற்றவன், 'எல்லாத்தையுமா...' என்று, ராகம் போட்டு கேட்க, 'ஆமாண்டா... நீ நினைக்கிறதையும் சேர்த்துத்தான்; விஷயம் முடிஞ்சதும், கழட்டி விட்ர வேண்டியது தான்...' என்று கூறி சிரித்தான். அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
பெண்களே... நீங்கள் காதலிக்கும் நபர் தகுதியான ஆளா என்று, காதலிக்கும் முன், யோசியுங்கள்.
இப்படிப்பட்ட நபர்களை காதலித்து, உங்கள் மனதையும், எதிர்காலத்தையும் வீணடித்து கொள்ளாதீர்!
— தி.பாலசுப்ரமணியன், சென்னை.
இப்படியும் சம்பாதிக்கலாம்!
சமீபத்தில், மும்பையிலிருக்கும் என் மகள் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஒருநாள் கடற்கரைக்குச் சென்றிருந்த போது, அங்கு சிலர், குடும்பம் குடும்பமாக பாயில் அமர்ந்திருந்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்குள்ளவர்கள், மெனக்கெட்டு பாய் எடுத்து வந்திருக்கின்றனரே என்று, நினைத்தேன்.
சிறிது நேரங்கழிந்த பின் தான் பார்த்தேன், கையில் நாலைந்து பாய்களை சுருட்டி வைத்திருந்த ஒருவனிடம் சிலர், பாய்களை வாங்கி விரித்து உட்கார்ந்தனர். ஒரு மணி நேரத்திற்கு, வாடகை, 10 ரூபாயாம்!
சிலமணி நேரத்தில் இப்படி, 100, 200 ரூபாய் சம்பாதித்து விட்டான். கடற்கரையில், இப்படி சிலர், பாயை வாடகைக்கு கொடுத்து சம்பாதிக்கின்றனர். நம்மூர் பீச் மற்றும் சுற்றுலா தலங்களில் பாய், நாற்காலி, முக்காலி போன்றவற்றை வாடகைக்கு கொடுக்கலாமே!
- ஆனந்தி அய்யப்பராஜன், தேனி.
மணமாலையா, பணமாலையா?
சமீபத்தில், நண்பரது மகள் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். திருமணம் முடிந்து, மொய் எழுதிக் கொண்டிருந்தனர்.
திடீரென்று, அரசியல்வாதி போல தோற்றமுள்ள ஒருவர், மணமக்கள் அருகில் வந்தவர், அவர்கள் போட்டிருந்த மாலையை, வலுகட்டாயமாக கழற்றச் சொல்லி, முற்றிலும் பணத்தால் உருவாக்கப்பட்ட, தான் கொண்டு வந்திருந்த பணமாலையை அணியச் சொன்னார். பின், மணமக்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவசரமாக புறப்பட்டுச் சென்றார்.
அவரைப் பற்றி, நண்பரிடம் விசாரித்த போது, அவர் தன்னுடைய தூரத்துச் சொந்தம், வளர்ந்து வரும் அரசியல்வாதி என்றார்.
யாராக இருந்தாலும், அபசகுனமாக மணமக்கள் போட்டிருந்த மலர் மாலையை கழட்டலாமா? இவரது பணக்காரத்தனத்தை காட்ட இதுவா இடம்?
திருமணம் என்னும் மங்களகரமான நிகழ்ச்சியின் போது, அதன் சடங்கு சம்பிரதாயத்தை மதிக்காமல், மொய் என்ற போர்வையில், இப்படி அராஜகம் செய்வது என்ன நியாயம்?
பணத்தையும், சம்பிரதாயங்களையும் மதிக்காத இவரைப் போன்றோர், இனியாவது திருந்துவரா?
— வே.விநாயக மூர்த்தி, வெட்டுவான்கேணி.
