தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தீர விசாரிப்பதே மெய்!

தீர விசாரிப்பதே மெய்!

தீர விசாரிப்பதே மெய்!


PUBLISHED ON : ஜன 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜன., 23 - குன்றக்குடி முருகன் தேர்

'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்' என்று நமக்கு அறிவுறுத்தியுள்ளனர் பெரியவர்கள். தீர விசாரிக்காமல், பொய்யை, உண்மையென்று நம்பியதால், முருகனின் வாகனமான மயிலுக்கு, பெரும் சோதனை ஏற்பட்டு, மலையாக மாறியது. நம்மில் பலர், அறிந்தும், அறியாமலும் பல தவறுகள் செய்திருக்கலாம்; அந்த பாவத்துக்கு பரிகாரம் தேட, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள குன்றக்குடி முருகன் கோவிலுக்கு சென்று வரலாம்.

ஒருமுறை அசுரர்கள் சிலர், முருகனின் வாகனமான மயிலிடம், 'மயிலே... நாங்கள் பிரம்மாவின் வாகனமான அன்னத்தையும், திருமாலுக்குரிய கருடனையும் சந்தித்தோம். அவை, 'நாங்கள் தான் மயிலை விட வேகமாக பறக்கக் கூடியவர்கள்...' என்று கூறின. உன்னை விடவா, அவற்றால் வேகமாக பறக்க முடியும்...' என்று கோள் மூட்டினர்.

உண்மையில் அவர்கள் அன்னத்தையோ, கருடனையோ பார்த்ததில்லை. இந்த பறவைகள் உதவியுடன் தானே அந்த தெய்வங்கள் வேகமாக வந்து, தங்கள் இனத்தவரை அழிக்கின்றனர் என, கோபம் கொண்ட அசுரர்கள், தந்திரமாகப் பேசி, அந்த பறவைகளை அழிக்க நினைத்தனர். அதற்கேற்ப, அவர்கள் சொன்னதை உண்மையென நம்பி, கோபம் அடைந்தது மயில்.

இதன் விளைவாக, அன்னம் மற்றும் கருடனிடம் மோதி, அவற்றின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலில் இறங்கியது மயில். இதையறிந்த முருகன், ஆராயாமல் தவறு செய்த மயிலை, மலையாக மாற சாபம் தந்து, அன்னத்தையும், கருடனையும் காப்பாற்றினார். அந்த மயிலே, குன்றக்குடி மலையானது.

தன் தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்ட மயிலின் வேண்டுகோளுக்கிணங்க, இம்மலையில் எழுந்தருளினார் முருக கடவுள். 6.75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இம்மலையின் உயரம், 40 மீட்டர். ராஜகோபுரத்தின் உயரம், 16 மீட்டர். முருகனுடன், சிவனும் அருள் செய்யும் தலம் இது. மலை அடிவாரத்திலுள்ள சண்முக நாதர், 'தேனாற்று நாதர்' என்று அழைக்கப்படுகிறார்.

அதேபோன்று, குன்றக்குடி காவடி புகழ் பெற்றது. 'குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும், நீ நினைப்பது நடக்காது...' என்ற சொல்வழக்கை கேள்விப்பட்டிருப்பீர்கள். குன்றக்குடியில் காவடி எடுத்தால், நினைத்தது நடக்கும் என்பதை எதிர்மறையாக வலியுறுத்தவே, இப்படி ஒரு சொல்வழக்கு வந்தது.

இங்குள்ள முருகனை, 'சண்முகநாதன்' என்று அழைப்பர். ஆறு முகங்கள், 12 கரங்கள் கொண்ட இவருக்கு, செட்டி முருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன் மற்றும் தேனாறுடையான் என்ற பெயர்களும் உண்டு. இத்தலம் குறித்து, அருணகிரி நாதர், திருப்புகழில் பாடியுள்ளார்.

இங்கு தைப்பூச திருவிழா, பத்து நாட்கள் நடக்கும். இதில், தேர்த்திருவிழா மிகவும் விசேஷம். இந்த நாளில் இங்கு வந்து முருகனைத் தரிசித்து, அறிந்தோ, அறியாமலோ, நம்மால் பிறர் கஷ்டப்பட்டிருந்தால், அந்த பாவத்துக்கு மன்னிப்பு பெறலாம். அது மட்டுமல்ல, நம் நியாயமான கோரிக்கைகள் எதுவாயினும், அதை நிறைவேற்றி வைக்கவும் வேண்டலாம்.

- தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us