தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்பகோணத்தில், பராந்தக மன்னன் (கி.பி., 911) காலத்திய கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில், சிவயோகி ஒருவருக்கு, தினமும், 'உத்தம ஆகாரம்' அளிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட செய்தியில், உத்தம ஆகாரம் என்பது என்னென்ன உணவு வகைகள் அடங்கியது என்பதை, பின்வரும் வகையில் குறித்துள்ளது. அது:

அரிசி - இரு நாழி; கும்மாயம் எனப்படும் பாசிப்பருப்பு கலந்த பதார்த்தம், புளிக்கறி, நெய் - ஒரு ஆழாக்கு, தயிர் - ஓர் உரி (2 ஆழாக்கு), வெல்லக்கட்டி இரண்டு, இரண்டு வாழைப்பழம்.

- அந்த பராந்தகன், இப்போது உயிருடன் இருந்தால் கூட, இப்படி எல்லாம் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

'என்னை யாராலும் ஏமாற்ற முடியாது...' என்று பெருமை அடித்தான் அப்துல். அதைக் கேட்ட முல்லா நஸ்ருதீன், 'இங்கே நீ ஐந்து நிமிடம் காத்திருக்க முடிந்தால், அதற்குள் உன்னை ஏமாற்றும் வழியைக் கண்டுபிடித்து வருவேன்...' என்றார்.

'ஓ... தாராளமாக!' என்று இறுமாப்புடன் பதில் சொன்னான் அப்துல்.

அவசரமாக எங்கோ சென்றார் முல்லா.

நேரம் சென்றது, ஐந்து நிமிடம், அரை மணியாகியது; பின், ஒரு மணியாகி, இரண்டு மணி நேரம் ஓடி விட்டது. ஆனாலும், முல்லா திரும்பவில்லை; அப்துலுக்கோ ஒரே கோபம்!

நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த, அருகிலிருந்த கடைக்காரன், 'என்ன அப்துல்... வெகு நேரமாய் நிற்கிறாய்?' என்று கேட்டான்.

'என்னை ஏமாற்றும் வழியைக் கண்டுபிடித்து வர முல்லா போயிருக்கிறார்; அவருக்காகத் தான் காத்திருக்கிறேன்...' என்றான்.

'முட்டாளே... அவர் போனதே உன்னை ஏமாற்றிவிட்டுத்தானே!' என்று சொல்லி சிரித்தான் கடைக்காரன்.

— சமீபத்தில் படித்த முல்லா கதை.

திருமணமான பெண்களுக்கு, அவர் தம் கணவர் மூலமாக எத்தனையோ பிரச்னைகள்... அவற்றை எல்லாம் கொட்டித் தீர்க்க, அதன் மூலம் ஆறுதல் தேட உண்மையான தோழியோ, உறவினரோ இல்லாமல் போய் விடுவது கொடுமை.

இதனாலேயே, தம் மனச்சுமையை இறக்கி வைக்க, பேனாவையும், பேப்பரையும் எடுத்து, எனக்கு எழுதி விடுவதுடன், மனபாரத்தில் ஓரளவு மறைந்து விட்டதாக கருதுகின்றனர்.

பிரச்னைகளின் பரிமாணங்களை, வாசகர்களும் புரிந்து கொள்வதற்காக, வாசகியர் எழுதிய கடிதங்களில் சிலவற்றை இங்கே தருகிறேன்.

சேலம் மாவட்ட வாசகியின் கடிதம்:

என் வயது 25; திருமணமாகி, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. ஒரு பெண் குழந்தை உண்டு. சொந்தத் தொழில் செய்கிறார் என் கணவர். காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் காதலுக்கு என் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், கட்டிய புடவையோடு வீட்டை விட்டு வந்து விட்டேன். இதனால், என்னோடு பேசுவதில்லை என் பெற்றோர். என் மீது உயிரையே வைத்திருந்த என் கணவர், தற்போது, என்னை வெறுப்பதுடன், அடித்து துன்புறுத்துகிறார். என்னுடன் பேசுவதும் இல்லை.

என்னை விவாகரத்து செய்து விட்டால், நிறைய நகை போட்டு பெண் தருகிறோம் என்று சொல்கின்றனர் அவர் உறவினர்கள். இதை மனதில் வைத்து, என்னை அடிக்கடி அடிக்கிறார்; வீட்டில் உள்ள பொருட்களை உடைக்கிறார்; வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறார். வீட்டை விட்டு வெளியேறி, நான் எங்கே போவது என்று தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், தற்கொலை தான் எனக்கு சரியானதாக தெரிகிறது.

என் குழந்தையை நினைத்தால், எனக்கு அழுகையாக இருக்கிறது. ஏதாவது ஒரு அனாதை இல்லத்தில் என் குழந்தையை சேர்த்துவிட்டு, செத்து விடலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் தான் ஒரு நல்ல யோசனை சொல்ல வேண்டும் ப்ளீஸ்...

வேலூர் மாவட்ட வாசகி: எனக்கு குழந்தைகள் இருக்கிறது. என் கணவர் மிகவும் கோபக்காரர். என்னையும், என் குழந்தைகளையும் பொறுப்பாக கவனிக்க மாட்டார். இதற்கிடையில், அவர் வேலை பார்க்கும் இடத்தில், ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகுவதாக தகவல் கிடைத்ததால், அந்த பெண்ணின் அப்பாவிடம் சொல்லி தடுத்தேன். அதை அறிந்து, என்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார்.

வீட்டிற்கு சீக்கிரமாக வருவது கிடையாது. என்னை ஊருக்கு கூட்டிப் போக மறுக்கிறார். எப்போதும், என்னை பழி வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார். அந்தப் பெண்ணின் அப்பாவை நான் கண்டித்ததால், என் பெற்றோரையும், சொந்தக்காரர்களையும் மிகவும் அவமானப்படுத்துகிறார்; அவர்களிடம் பேசுவதும் கிடையாது.

நானும், அவரைப் போல் படித்தவள்; நல்ல குடும்பத்தில் பிறந்தவள். ஏன், என்னை இப்படி பழிவாங்குகிறார்... இந்த நிலை மாற என்ன செய்ய வேண்டும்? பொறுமையாக இருந்து சோர்ந்து விட்டேன்...

திருச்சி வாசகி: பெரியோர் ஆசீர்வாதத்துடன் நடந்த காதல் கல்யாணம் எங்களுடையது! என் கணவர், பெண் பொறுக்கி என்பது தெரிந்திருந்தும், கல்யாணம் ஆனதும் சரியாகி விடுவார் என்ற நம்பிக்கையில் என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்.

இவர் புத்திக்கு ஏற்ப தொழிலும் அமைந்து விட்டது. வாரத்தின் ஏழு நாட்களும் ஆபிசிலேயே, பல பெண்களுடன் பொழுதை கழிக்கிறார். நானும், அன்பாக, பல முறை எடுத்துக் கூறி விட்டேன்; இன்று வரை திருந்தவில்லை. நேற்றுக்கூட ஆபிசிலிருந்து கருத்தடை சாதனத்தை எடுத்தேன்.

இள வயதிலிருந்து என்னைப் பற்றி தெரிந்திருந்தும், என் அலுவலகத்தில், யாருடனும் பேசக் கூடாது என்பதுடன், என்னை அடிமை போல் நடத்துகிறார். குடும்பத்தில், பிள்ளைகளின் படிப்பை தவிர, வேறு பொறுப்புகளோ, பொழுது போக்கோ எனக்கில்லை.

என்னை பிரியவும் மனம் இல்லை; சந்தோஷமாக வைத்துக் கொள்ளவும் தெரியவில்லை! இவரது கெட்ட பழக்கம் குறித்து, ஏதாவது கேட்டால், 'உன் சம்பளம், '---'க்கு வரும்!' என்று ஏளனம் பேசுகிறார்.

பட்டதாரியாகி, பதவி பெற்றபின், பிறந்த வீட்டு பாசம் இழந்து, சம்பாதித்துக் கொடுத்தும், சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தெரியாத முட்டாள் என்று, என்னை நானே நொந்து கொண்டாலும், இவரை எப்படி திருத்துவது என்றே தெரியவில்லை.

பெற்றோரின் பேச்சைக் கேட்காததால், 'பெண் புத்தி, பின் புத்தி' என்பது பொருத்தமாக அமைந்து விட்டது எனக்கு! இத்தகைய மோசமான ஒருவரை கணவராக ஏற்றுக் கொண்ட நான், பெற்றோரை நினைப்பதா, பிள்ளைகளை நினைப்பதா, என்னை நினைத்து வருந்துவதா எனத் தெரியாமல் குழம்புகிறேன்...

— ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்னைகளின் வடிவங்கள் கொஞ்சமாவது தெரிந்ததா?

'மன்னராட்சி முறை இப்போ ஒழிஞ்சு போனாலும், இங்கிலாந்து, அரேபியா, ஏன், நம் பக்கத்து நாடான மலேஷியாவில் கூட, இன்னமும் மன்னராட்சி முறை தானே நடக்குது...' என்றேன் குப்பண்ணாவிடம்!

அதற்கு குப்பண்ணா சொன்னது:

மலேஷியாவில் நடக்கிறது முழுமையான மன்னராட்சி முறையல்ல; மலேஷியா ஒரு கூட்டாட்சி நாடு. மன்னர் தலைமையில் இங்கு ஆட்சி நடைபெற்றாலும், இம்மன்னரும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுபவரே!

முன்பு, தனித்தனியாக ஆட்சி செலுத்திய அரசர்கள், இன்று ஒன்பது மாநிலங்களில், அதிபதிகளாக இருக்கிறாங்க. அவங்கள்ல ஒருத்தரத் தான் மன்னராகத் தேர்ந்தெடுக்கிறாங்க. இவர், அமைச்சரவையும், நாடாளுமன்றமும் கூறும் ஆலோசனையின்படி ஆட்சி செலுத்துறார்.

பண்டைக் காலத்தில், மலேஷியாவில், இந்திய அரசர்களின் ஆட்சி நடந்து வந்துள்ளதற்கு, இந்நாட்டில் கிடைத்துள்ள சமஸ்கிருதக் கல்வெட்டுகளே சான்று!

மலாய் மொழியில், சமஸ்கிருத சொற்களும், தென்னக மொழி சொற்களும் பல உள்ளன. பின், இந்நாட்டில் இஸ்லாம் மதம் பரவியது.

போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர் பல பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செலுத்தினர். இறுதியாக, இந்நாடு ஆங்கிலேயர் வசமாயிற்று.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது, இந்நாட்டை, ஜப்பானியர் கைப்பற்றினர். யுத்தத்திற்குப் பின் மீண்டும் இது ஆங்கிலேயர் வசமானது.

கடந்த, 1957ல், விடுதலை பெற்ற பின், மலேயா, சராவாக், சபா என்ற மூன்று பகுதிகளும் இணைந்து, ஒரே மலேஷிய நாடாக உருவானது.

— என்றார் குப்பண்ணா. என் சந்தேகம் தெளிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us