PUBLISHED ON : ஜூன் 26, 2022

பொதுவாக காகங்களை, மனிதர்களிடம் நெருங்கி பழகவோ, கிளி, புறா போல் வீட்டில் வளர்க்கவோ முடியாது என்று தானே நினைத்திருக்கிறோம். அந்த எண்ணத்தை பொய்யாக்கி விட்டது, படத்தில் காணப்படும் இந்த காகம்.
கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ளது, சாமகால என்ற கிராமம். இங்கு வசிக்கும் ஆல்பி என்ற சிறுமி, ஒருநாள், தன் வீட்டு முற்றத்தில் காகம் ஒன்று சோர்வாக அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், அதை துாக்கி வந்து தண்ணீரும், உணவும் கொடுத்துள்ளாள்.
அதன் பின், அந்த காகம், அவர்கள் வீட்டை விட்டு செல்லவில்லை. காகத்திற்கு கூண்டு ஒன்று தயார் செய்து, அதற்கு, பொன்னி என்று பெயர் சூட்டி, தினமும் உணவு கொடுத்து வருகிறாள், ஆல்பி.
இப்போது, அவளிடம் நன்றாக பழகி விட்டது, காகம். 'பொன்னி சாப்பிட வா' என்று குரல் கொடுத்தால், பறந்து வந்து அச்சிறுமியின் தோள் மீது அமர்ந்து, அவள் ஊட்டி விடும் உணவை சாப்பிடுகிறது. சாப்பிட்டு முடித்ததும், கூண்டுக்குள் சென்று விடுகிறது.
இக்காட்சியை காண, அக்கிராமத்து மக்கள் ஆல்பி வீட்டு முன், தினமும் கூடி விடுகின்றனர்.
— ஜோல்னாபையன்
