
இறைவனிடம் நாம், எதை எதையோ கேட்டு, அதை, கொடுக்கவில்லை என்றால், கோபம் கொள்கிறோம். உண்மையிலேயே நாம் கேட்பதையெல்லாம் தெய்வம் கொடுத்து விட்டால், இப்போது இருக்கும், சிறிதளவு நிம்மதியையும் இழந்து விடுவோம். அடுத்தவர்களிடம், இருக்கும் பொருட்களை பார்த்து, ஆசைப்பட்டு, எல்லாவற்றையும் வாங்கி குவிக்கும் நாம், ஒரு பொருளை வாங்கும் போது, இது தேவையா, இது இல்லாமல் வாழ முடியாதா என்று, நினைத்து பார்ப்பதில்லை.
நம்மிடம் இருப்பவைகளை பட்டியல் இட்டுப் பார்த்தால், தேவையற்றவைகளையும், உபயோகமற்றவைகளையும் வாங்கிக் குவித்திருப்பது தெரியும். இப்படி இருக்கும் போது, நாம் கேட்பதையெல்லாம் தெய்வம் கொடுத்து விட்டால், என்னவாகும்? இதற்கு வியாசர் ஒரு கதை சொல்கிறார்...
சிருஞ்சயன் என்று ஒரு அரசன் இருந்தான். அவன் கடுந்தவம் இருந்து, ஒரு அதிசய குழந்தையை, வரமாகப் பெற்றான். சுவர்ணஷ்டீவி என்று பெயரிடப்பட்ட, அக் குழந்தையின் உடம்பிலிருந்து வெளியாகும், வியர்வை மற்றும் உமிழ்நீர், தங்கமாக மாறும். அதிசயக் குழந்தையின் சக்தியின் விளைவாக, அரண்மனை முழுவதும், தங்க மயமாக ஜொலித்தது. மன்னன் மகிழ்ச்சியில் மிதந்தான். இதை அறிந்த கொள்ளையர்கள் அங்கு, இங்கு எனத் திருடி கஷ்டப்படுவதை விட, தங்கமாகச் சொரியும் அரச குமாரனை கடத்தி விட்டால், கவலையே இல்லை என்று நினைத்தனர். அதன்படி, கொள்ளையர்கள், அரசகுமாரனை கவர்ந்து சென்று விட்டனர். அரச குமாரனின் உடம்பில் இருந்து வெளியாகும் வியர்வை மற்றும் உமிழ்நீர் ஆகியவை தங்கமாக சொரிந்ததைக் கண்டு, அவர்களுக்கு மகிழ்ச்சி.
சில நாட்கள் சென்றன. கொள்ளையர்கள் பார்த்தனர். இந்த அரசகுமாரனை வளர்த்து, பாதுகாத்து, அவ்வப்போது தங்கம் எடுப்பதை விட, இவனைக் கொன்று, வயிற்றில் உள்ள தங்கத்தை மொத்தமாக எடுத்து விடலாம் என நினைத்து, அவனை கொன்று விட்டனர். ஆனால், அரசகுமாரனின் வயிற்றில் தங்கம் இல்லாததால், ஏமாற்றத்தின் விளைவாக, ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டி, தாக்கிக் கொண்டு, இறந்து போயினர். தங்கமாக கொட்டிய தனயனை காணோம் என்று தேடிய மன்னனும், அவன் இறந்த தகவலறிந்து துடித்தான்; வேறு வழி!
அளவிற்கு அதிகமாக ஆசைப்பட்டு, அல்லல்படுவதை விளக்கும் இக்கதை தான், பொன்முட்டையிடும் வாத்து கதையாக மாறி, வெளிநாடுகளில், மைதாஸ் கதையாக மாறியது. இதிலிருந்து என்ன தெரிகிறது... அளவுக்கு அதிகமாக ஆசைப்படக் கூடாது. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து! எனவே, கிடைத்ததை கொண்டு திருப்தி அடைய வேண்டும்.
விதுர நீதி!
ஒருவனுடைய பாவச் செயல், வேறு சிலரையும் பாதிக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை, காலப் போக்கில் சரியாகி விடும். ஆனால், பாவச் செயல் புரிந்தவனை விட்டு, களங்கம் ஒரு போதும், நீங்குவதில்லை.
— என்.ஸ்ரீதரன்
பி.என்.பரசுராமன்