
ஜன.,14 பொங்கல்
சூரிய உதயத்தின் போது, உறங்கிக் கொண்டிருப்போரை, 'சாணியில் தோன்றும் புழுவை விட மட்டமானவன்' என்று, சாஸ்திரம் திட்டுகிறது. நம் வழிபாட்டில், சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படக் காரணம், மற்ற தெய்வங்களை, புராணங்கள் சொல்லும் வடிவமைப்பை வைத்து, மனக்கண்ணால் தான் பார்க்க முடியும். ஆனால், சூரியன், நாம் நேரடியாக காணும் தெய்வம்.
சூரிய வழிபாட்டிற்கு, ஜாதி, மத வித்தியாசமில்லை. காரணம், சூரியன் இல்லாமல் உலகம் இல்லை. பயிர்கள் விளையவும், கிருமிகள் அழியவும் காரணமாக இருப்பவர் அவரே! ஒரு நாளில், 12:00 மணி நேரத்திற்கும் மேலாக, உலகிற்கு ஒளியைத் தருகிறார். யார் ஒருவர், தினமும் காலையில், சூரியனை பார்க்கவில்லையோ, அவர் வாயில் நல்ல வார்த்தையே வராது; அவன் காதில் கேட்பதும் பாவமான வார்த்தைகளாகத் தான் இருக்கும். இப்படிப்பட்ட நபர்களை நம்பி, எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். மேலும், அதிகாலையில் எழும் பழக்கமில்லாதவர்களை, 'சோம்பேறி' என, உலகம் பழிக்கிறது.
சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு. ஆனால், இது விடுமுறை தினம் என்பதால், காலை, 10:00 மணி வரை உறங்குவதை, இளைய தலைமுறையினர், 'பேஷனாகவே' மாற்றி விட்டனர். ஆனால், மற்ற நாட்களை காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக காலை ஆறு மணிக்குள் எழுந்து, சூரியனை தரிசனம் செய்ய வேண்டும்.
சூரிய வழிபாடு மிக எளிமையானது. இதற்கென, காலையில் கண்டிப்பாக குளிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. மொட்டை மாடியிலோ, திறந்த வெளியிலோ, சூரியனை நோக்கி, ஒன்றிரண்டு நிமிடம் நின்று கைகூப்பினாலே போதும். வழிபாடு நிறைவேறி விடும். அதன்பின், உங்கள் அன்றாடப் பணிகளைத் துவங்கிப் பாருங்கள். மிகவும் சுறுசுறுப்புள்ளவராக மாறி, நீங்களே பெருமைப்படும் விதமாக, உங்கள் வாழ்க்கைச் சூழல் மாறி விடும். வெற்றியாளர்கள் அனைவரும் அதிகாலையில் எழுபவர்களாக இருப்பர்.
சூரியன் என்றால், 'நம்மை கடமைகளில் ஈடுபடுத்துபவன்' என்று பொருள். அவன் அதிகாலையில் எழாமல், மேகக்கூட்டத்தில் மறைந்திருந்தால், அது ஒரு அதிர்ஷ்டமற்ற நாள். சூரியன், நமக்கு கல்வியறிவையும் தருவார் என்பதற்கு, ஒரு கதை உள்ளது...
வைசம்பாயன என்ற முனிவர், சீடன் ஒருவன் தரையில் படுத்திருந்ததைக் கவனிக்காமல், அவன் வயிற்றில் மிதித்து விட்டார். அவன் இறந்து போனான். இந்தக் கொலைப்பழி நீங்க, அவரது சீடர்கள் பிராயச்சித்தம் செய்ய முன் வந்தனர். யாக்ஞவல்க்யர் என்ற சீடர், 'நான் மட்டும் பரிகாரம் செய்தால் போதுமே... எல்லாரும் எதற்கு?' என்று கேட்டார். இதைக்கேட்ட வைசம்பாயனருக்கு கோபம் வந்து விட்டது.
'நீ மமதை காரணமாக, மற்றவர்களை இழிவுபடுத்தி விட்டாய். என்னிடம் கற்ற வேதத்தை கக்கி விட்டு, வெளியே போ...' என்றார்.
'உங்கள் மேல் கொண்ட பாசத்தால் தான் அப்படி சொன்னேன்...' என்று யாக்ஞவல்க்யர் சொன்னாலும், அதை, அவர் ஏற்கவில்லை. யாக்ஞவல்க்யரும், வேதத்தைக் கக்கி, வெளியேறி விட்டார். பின், சூரியனை நினைத்து தவமிருந்தார். சூரியன் அவர் முன் தோன்றியதும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்லி, 'என் குருவை விட எனக்கு அதிகமான வேதங்கள் கற்றுத்தர வேண்டும்...' என்றார். சூரியனும் அவ்வாறே செய்தார். இப்படி கல்வியில், குருவை மிஞ்சும் தகுதியை, சூரிய வழிபாடு தரும்.
சூரியனின் அருமை பெருமையை அறிந்த நீங்கள், இந்த பொங்கல் நன்னாளில் இருந்து, அதிகாலையில் எழும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
தி.செல்லப்பா