
அடுத்தவர் மனைவியுடன் பேசும் போது...
சமீபத்தில், நானும், என் தோழியும் கடை வீதிக்கு சென்றிருந்தோம். அப்போது, என் தோழி, கணவரின் மேலதிகாரியை சந்திக்க நேர்ந்தது. தோழி மரியாதைக்காக, அவரிடம் பேசினாள். ஆனால், அந்த மேலதிகாரியோ, தனக்கு கீழ் வேலை செய்பவரின் மனைவி என்ற அலட்சியத்தில், மரியாதை இல்லாமல், ஒருமையில், 'நீ, வா, போ' என்று பேசினார். இத்தனைக்கும், அவர் ஒன்றும், வயதில் பெரியவரும் இல்லை. எனக்கும், என் தோழிக்கும் தர்மசங்கடமான நிலை. தனக்கு கீழ் வேலை செய்பவர் மனைவி என்றாலும், அடுத்தவர் மனைவி என்பதால், மரியாதையாக பேசி இருக்கலாம். உயர் பதவியில் இருப்பதாலேயே மற்றவர்களை விட உயர்ந்தவராகி விடுவாரா!
அடிப்படை மரியாதை கூட தெரியாத இவரைப் போன்றவர்கள், எப்போது தான் திருந்துவரோ!
— சந்திரா ராஜசேகர், சென்னை.
கடன் வாங்கினால் அடிமையா?
என் தோழியின் பெற்றோர், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, திடீரென்று நொடித்து போயினர். எனவே, சூழ்நிலை காரணமாக, ஒருவரிடம் கடன் வாங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு, மாதா மாதம், வட்டியை கட்டி வந்தாலும், என் தோழியோ அல்லது அவளது அம்மாவோ எங்காவது வெளியே செல்லும் போது, நன்றாக உடையணிந்து கொண்டால், உடனே, 'கடனை அடைக்க வக்கில்ல. இதுல என்ன அலங்காரம் வேண்டிக் கிடக்கு. கடன் வாங்கிக்கிட்டு, எவ்வளவு ஜாலியா திரியறாங்க பாரு...' என்று, கடன் கொடுத்தவரின் மனைவி, அவர்கள் காதுபடவே பேசியிருக்கிறார். கடன் வாங்கினால், நல்ல புடவை அணியக் கூடாது என்று, சட்டமா இருக்கிறது அல்லது கடன் கொடுத்தாலே, இவர்கள், அவர்களுக்கு அடிமையாகி விட்டனரா என்ன!
கடன் கொடுத்தவர்களே... கடன் வாங்கியிருப்பவர்கள் உங்கள் அடிமையும் அல்ல; அவர்கள் அலங்காரம் செய்வதை குறை கூற, உங்களுக்கு உரிமையும் இல்லை. புரிந்து கொள்ளுங்கள்.
— எம்.மஞ்சுளாராணி, காஞ்சிபுரம்.
விதவைக்கோலம் சரியாய்யா!
சில தினங்களுக்கு முன், பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்தேன். என் அருகில், வெள்ளைச் சேலை கட்டிய ஓர் இளம் பெண், நின்று கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில், பஸ்சில் ஏறிய இளம் பெண் ஒருவர், இவரைப் பார்த்தது தான் தாமதம், அவரது கண்களில் இருந்து, கண்ணீர் அருவி போல கொட்ட, 'என்னடி இது, இப்பதானே கல்யாணமாச்சு. ஒரு வருஷத்துக்குள்ள இப்படி விதவையாயிட்டயே... என்னால தாங்க முடியலையே, நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கே... 'என்று அழ ஆரம்பித்தார். வெள்ளை சேலை அணிந்த பெண்ணோ, 'ஏய் நிறுத்துடி, நீ பாட்டுக்கு கண்டபடி கற்பனை பணணாத. எங்க ஆபீசுக்கு புதுசா ஒரு மேனேஜர் வந்திருக்கிறார். வந்ததும் வராததுமா, லேடீசுக்கு வெள்ளை சேலை தான் யூனிபார்ம்ன்னு ரூல்ஸ் போட்டுட்டார். 'வேண்டாம்யா, இந்த விதவைக் கோலம்'ன்னு சொன்னோம். அந்த சனியன் கேட்கவேயில்லை. அதான் இப்படி, என் புருஷன் நல்லாயிருக்கார்...' என்று கூறியதைக் கேட்ட எனக்கு, சிரிப்பதா, அழுவதா என, தெரியவில்லை.
நம் கலாசாரம், பண்பாட்டிற்கு ஏற்ப, உடை வழங்க வேண்டாமா, சிந்திப்பரா இது போன்ற அறிவு ஜீவிகள்.
— எஸ்.சரவணன், சென்னை