PUBLISHED ON : மே 22, 2011

காதலர்களாகட்டும், கணவன் - மனைவியா கட்டும், தங்கள் முத்த உணர்வுகளை ஒருவருக்கு ஒருவர் இன்டர்நெட் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில், ஜப்பானில் நவீன கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
மனித உறவுகளில், தாய், தந்தை, மகன், மகள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, குழந்தை என பல தரப்பினரும், தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ள, முத்தம் கொடுத்துக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், நெருங்கி பழகி, பின் பிரிந்து, நீண்ட தூரத்திற்கு பிரிந்து சென்று வசிக்கும் போது, முத்தப் பரிமாற்றத்திற்கு வாய்ப்பில்லா மல் போகிறது.
இவ்வாறு பிரிந்து துன்பப் படும் கணவன் - மனைவி, காதலன் - காதலிகளுக்கு முத்த மிடும் உணர்வை தரும் கருவி ஒன்று, ஜப்பானில் உள்ள எலக்ட்ரோ கம்யூனிகேஷன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த காஜி மோடோ ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கருவியில் உள்ள கொள் கலத்தின் வாய் பகுதியில் ஒருவர், தன் நாக்கை வைத்து உரசும் போது, அதில் உள்ள சாப்ட்வேர், நாக்கின் இயக்கம், மூச்சு, சுவை, ஈரப்பதம் ஆகியவற்றை பதிவு செய்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் மற்றொரு வருக்கு அனுப்புகிறது. இதன் மூலம், எதிர்முனையில் உள்ளவர், தன் துணை அனுப்பிய முத்த உணர்வுகளை பெறுகிறார்.
இயந்திர கதியில் இயங்கும் இன்றைய வாழ்க்கை முறையில், நெருங்கிப் பழகியவர்கள் ஒரே இடத்தில் இருப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது. இந்நிலையில், ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த முத்தக் கருவிக்கு, எதிர்காலத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
— ஜோல்னா பையன்.
