தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வி.வி.ஐ.பி. அனுபவங்கள்! (1)- ரஜத்

வி.வி.ஐ.பி. அனுபவங்கள்! (1)- ரஜத்

வி.வி.ஐ.பி. அனுபவங்கள்! (1)- ரஜத்


PUBLISHED ON : மே 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வர்ம சிகிச்சை நிபுணர், எஸ்.ராஜாமணி பேட்டி!

வர்ம சிகிச்சை நிபுணர் என்று, தமிழக அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட முதல் அரசு மருத்துவர், பாளையங்கோட்டை அரசினர் இந்திய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவர், வர்ம சிகிச்சைத் துறையில், இணை பேராசிரியர், சென்னை அண்ணாநகரில் உள்ள, அண்ணா அரசினர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர், 1995 முதல், 2007 வரை, வர்மத் துறை இயக்குனர் என்று, பல முக்கிய பதவிகளுக்கு, தன் சிறப்பான பணியால் கவுரவம், பெருமை சேர்த்தவர், வர்மா ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் எஸ்.ராஜாமணி.

இந்திய அரசியலில், பல வி.வி.ஐ.பி.,க்களுக்கு சிகிச்சை அளித்துள்ள, டாக்டர் எஸ்.ராஜாமணி, தன் சுவையான அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...

கடந்த, 1984 டிசம்பர் மாதம், ஒரு விடுமுறை நாளின் மாலைப் பொழுது. திருநெல்வேலியில் உள்ள சென்ட்ரல் டாக்கீஸ் என்ற, 'ஏசி' திரை அரங்கில், என் மனைவி பிலோமினாவும், நானும், எம்.ஜி.ஆர்., நடித்த திரைப்படத்தை பார்க்கச் சென்றிருந்தோம். படம் ஆரம்பிப்பதற்கு முன், தமிழக அரசின் செய்திச் சுருள் காண்பிக்கப்பட்டது.

அமெரிக்காவில், நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளின் மருத்துவமனையில், எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வாயில் வழியும் எச்சிலை, அவரது மனைவி ஜானகி அம்மா, கைக்குட்டையால் துடைக்கிறார். தியேட்டரில் ஒரே நிசப்தம். நெஞ்சைப் பிழிகிற காட்சி.

எவ்வளவோ பேருக்கு சிகிச்சை அளித்து, பக்கவாத நோயை குணப்படுத்தி இருக்கிறேன். எம்.ஜி.ஆரை சுலபமாக குணப்படுத்தலாமே என்று அப்போது எனக்குத் தோன்றியது. செய்திச் சுருளை தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் படம் துவங்கியது. தியேட்டரில் பலத்த ஆரவாரம், மகிழ்ச்சி, கைதட்டல், விசில் சப்தம்; ஆனால், என்னைப் பொறுத்தவரை, படத்தை விட, செய்திச் சுருளில் பார்த்ததே, என் மனதை ஆட்டிப் படைத்தது.

இந்த நிகழ்ச்சி நடந்து, ஒரு மாதம் ஆகி இருக்கலாம். சென்னை சோழா ஷெரட்டன் ஓட்டலில், ஒரு மருத்துவக் கருத்தரங்கில் பங்கு கொள்ள வந்திருந்தேன். எழும்பூர், ராம்பிரசாத் ஓட்டலில் தங்கி இருந்தேன். அன்று மாலை, 5:30 மணிக்கு, நெல்லை எக்ஸ்பிரசில், திருநெல்வேலிக்கு திரும்ப வேண்டும்.

நான் தங்கியிருந்த ஓட்டல் நுழைவாசலில், அப்போதைய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அரியநாயபுரம் சுப்ரமணியத்தை பார்த்தேன். என்னைப் பார்த்ததும், 'ஹலோ டாக்டர்... கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி இருக்கு... உங்களைப் பார்த்து பல வருடங்கள் ஆகியிருக்கும். மூட்டு வலியிலிருந்து முழுமையாக எனக்கு நிவாரணம் பெற்றுக் கொடுத்தீங்க... பல வருடங்களாக எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.

'எம்.ஜி.ஆரை நேற்று சந்தித்தேன். பாளையங்கோட்டையிலேயே, எனக்கு நன்கு தெரிந்த வர்ம சிகிச்சை ஸ்பெஷலிஸ்ட் இருக்காரு. என் மூட்டு வலியை முழுமையா சரி செய்தார்; ரொம்ப கைராசிக்காரர். அவரால் நிச்சயமா உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்...'ன்னு சொன்னேன்.

எம்.ஜி.ஆரும் மகிழ்ச்சியாக, 'அப்படியா... நம்ம பி.ஆர்.எஸ்., (எம்.ஜி.ஆரின் பர்சனல் டாக்டர் பி.ஆர்.சுப்ரமணியன்) கிட்டே பேசுங்க... நாளைக்கு நாம போய் அவரை பார்க்கிறோம்...' என்றார்.

நான் நேரில் சந்திக்க வேண்டும் என்று என் மனதில் வைத்திருந்த லிஸ்டில், பல ஆண்டுகளாக முதலில் இருப்பவர் எம்.ஜி.ஆர்., தான்!

என் மனைவி, அப்போது நிறைமாத கர்ப்பிணி. அன்று, நான் ஊருக்கு திரும்பி விடுவேன் என அவர் நம்பி இருந்தாலும், அரியநாயபுரம் சுப்ரமணியன் சொன்னதை ஏற்று, என் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தேன்.

மறுநாள் காலை, 7:30 மணி அளவில், சுப்ரமணியனும், நானும், சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் டாக்டர் பி.ஆர்.எஸ்., வீட்டுக்குச் சென்றோம். அவரோடு, பிரபல நியூரோ சர்ஜன் டாக்டர் நரேந்திரன், பிரபல நியூரோ பிசிஷியன் டாக்டர் ஜெகன்நாதனும் இருந்தனர்; அவர்களும், எம்.ஜி.ஆரின் மருத்துவக் குழுவில் இருப்பவர்கள். அறிமுகம் ஆனதும், வர்ம சிகிச்சை பற்றி பேசினோம்.

'நோயாளியுடைய விவரங்கள், ஸ்கேன் படங்கள், ரிப்போர்ட்கள், எக்ஸ்ரேக்கள் எதுவுமில்லாமல், ஒருவருடைய நாடித் துடிப்பை மாத்திரம் பார்த்து, உடலில் எந்த பாகத்தில், எந்த இடத்தில், என்ன பிரச்னை என்று கண்டுபிடித்துவிட முடியும்...' என்றேன்.

'எனக்கு என்ன பிரச்னை என்று கண்டுபிடிக்க முடியுமா?' என்று கேட்டார் டாக்டர் பி.ஆர்.எஸ்., அவரது கையைப் பிடித்து, நாடியை பார்த்தேன். 'உங்களுக்கு கடுமையான முதுகு வலி; டிஸ்க் வீங்கியிருக்கிறது...' என்றேன்.

சிரித்துக் கொண்ட டாக்டர் பி.ஆர்.எஸ்., 'சரியாக கண்டுபிடிச்சுட்டீங்களே...' என்றார். 'இதுக்கு எப்படி சிகிச்சை அளிப்பீர்கள்?' என்று கேட்டார். மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் என்ணெயை அவருக்கு தடவி, வர்ம சிகிச்சை முறைப்படி மசாஜ் செய்தேன்.

என் அணுகுமுறை, பி.ஆர்.எஸ்.,சுக்கு பிடித்து விட்டது. இது, சரியான வைத்தியம் என்ற மன நிறைவை, அவருக்கு அளித்தது.

டாக்டர் ஜெகன்நாதனுக்கு, 'டெட்னிஸ் எல்போ' பிரச்னை; அவருக்கும், ஆயில் தடவி, மசாஜ் செய்தேன்; 'வெரி குட் டெக்னிக்!' என்றார். அடுத்து, டாக்டர் நரேந்திரனையும், செக்-அப் செய்தேன். என் கணிப்பு, அவருக்கு, கழுத்து வலி; அவரும், நான் சொன்னதை ஆமோதித்தார்.

டாக்டர் பி.ஆர்.எஸ்., தலைமையில் மொத்தம், ஏழு டாக்டர்கள் கொண்ட குழு, அப்போது எம்.ஜி.ஆரைக் கவனித்துக் கொண்டிருந்தது.

என்னைப் பற்றியும், நான் சிகிச்சை அளிக்கும் விதத்தைப் பற்றியும், ஜானகி அம்மாவிடமும், எம்.ஜி.ஆரிடமும், டாக்டர்கள் கூறி இருக்கின்றனர். மறுநாள், டாக்டர் பி.ஆர்.எஸ்., வீட்டுக்கு வரச் சொல்லி, எனக்கு தகவல் வந்தது.

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் அப்பு, ராமாவரத் தோட்டத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். எம்.ஜி.ஆரை நேரில் பார்க்கப் போகிறோம், பேசப் போகிறோம், சிகிச்சை அளிக்கப் போகிறோம் என்று நினைக்கும் போதே, ஒரே மகிழ்ச்சி, கிளர்ச்சி.

எம்.ஜி.ஆரின் வீட்டை அடைந்தோம். உடல் முழுவதும், மின்சாரம் பாய்வது போல உணர்வு. என் வாழ்வின் லட்சியத்தை நோக்கிய பயணத்தின் முக்கியமான கட்டம். 'முதலில், டிபன் சாப்பிட்டுவிட்டு மேலே போகலாம்...' என்றனர். டிபனையும், சாப்பாட்டையும் தொடர்ந்து, பல வாரங்கள் நான் சாப்பிடும் பாக்கியம் பெறப் போகிறேன் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

முதலில், ஜானகி அம்மாவை சந்தித்தேன். 'டிபன் சாப்பிட்டீர்களா?' என கேட்டுவிட்டுத் தான் பேச ஆரம்பித்தார்.

ஜானகி அம்மாவுக்கு, பல ஆண்டுகளாக, கால் மூட்டுகளில் வலி. மூட்டை மடக்க முடியாது. அவரை பரிசோதித்த ஜெர்மன் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர், மூட்டு மாற்று ஆபரேஷன் செய்ய வேண்டும் என கண்டிப்பாக கூறி விட்டார். ஆபரேஷன் செய்து கொள்வதில், ஜானகி அம்மாவுக்கு விருப்பமில்லை.

கரு நொச்சி இலைகள், சின்ன வெங்காயம், அரிசித் தவிடு ஆகியவைகளை சேர்த்து உருவாக்கப்பட்ட மூலிகை எண்ணெயால், அவருக்கு மசாஜ் செய்து, சிகிச்சை அளித்தேன். பிறகு, 'என் மனைவிக்கு இப்போ பிரசவ நேரம்... நான் ஊருக்குப் போகிறேன். நீங்க எப்போ வேண்டுமானாலும் கூப்பிடுங்க... உடனே வந்துடறேன். ஐயாவையும் நான் கண்டிப்பாக பார்க்கிறேன்...' என சொல்லி கிளம்பினேன்.

ஒரு கவரை ஜானகி அம்மாவிடம் கொடுத்தார் அப்பு. அதை வாங்கி, 'இதில், பத்தாயிரம் ரூபாய் இருக்கு; செலவுக்கு வெச்சிக்குங்க...' என்று சொன்னார்.

பாளையங்கோட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி நர்சிங் ஹோமில், 15 நாட்கள் கழித்து, என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, இரண்டு வாரங்கள் கழித்து, 'உடனே கிளம்பி வரச் சொல்லி, தமிழக அரசின் இந்திய மருத்துவத் துறை இயக்குனரிடமிருந்து அவசர தந்தி வந்தது.

சென்னை வந்து, அண்ணா நகரில் உள்ள இந்திய மருத்துவத் துறை இயக்குனரை சந்தித்தேன். அவர், 'எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்க, உங்களுக்கு டியூட்டி போட்டிருக்கு. உடனே போய் பாருங்க...' என்றார்.

ராமாவரத் தோட்டத்திற்கு சென்று, எம்.ஜி.ஆரின் உதவியாளர், பிச்சாண்டி ஐ.ஏ.எஸ்.,சை சந்தித்தேன். 'நீங்கள் தொடர்ந்து, 15 நாட்கள் ஜானகி அம்மாவிற்கு சிகிச்சை கொடுங்கள்...' என்றார்; சிகிச்சை ஆரம்பமானது.

தினமும் காலை, மாலை என இரு வேளை சிகிச்சை.

தொடர்ந்து, சில நாட்கள் சிகிச்சை அளித்த பிறகு, ஜானகி அம்மாவுக்கு நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பல வருடங்களாக மடக்கவே முடியாமல் இருந்த மூட்டுகள், மடக்க முடிந்தது; ஜானகி அம்மாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

வெளிநாட்டு நிபுணர்களின் கணிப்பை தாண்டி, ஆபரேஷன் செய்யாமலேயே, மூட்டு வலி சரியாகி, சகஜ நிலைக்கு வந்தது அவருக்கு நிம்மதியை அளித்தது.

இதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை ஆரம்பிக்கும் கட்டம். டாக்டர்கள் பி.ஆர்.எஸ்., நரேந்திரன், நெப்ராலஜிஸ்ட் சந்திர மோகன், இதய சிகிச்சை நிபுணர்கள் முத்துசாமி மகாலிங்கம், பேச்சுப் பயிற்சியாளர் மனோகரன் உட்பட அனைவரும் இருந்தனர். இரண்டாவது மாடியில் இருந்தார் எம்.ஜி.ஆர்., அவருக்கு, என்னை அறிமுகம் செய்தார் டாக்டர் பி.ஆர்.எஸ்.,

லட்சக்கணக்கான தமிழர்களின் இதய தெய்வத்தை, முதல் தடவையாக நேருக்கு நேர் சந்தித்த போது, மெய் மறந்து நின்றேன். அடுத்து, மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி!

rajavarma—dr@yahoo.co.in

— தொடரும்.



- ரஜத்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us