PUBLISHED ON : ஆக 30, 2020

திருநெல்வேலியில் நடக்கப் போகிற ஆண்டு பொதுக் கமிட்டி கூட்டத்திற்கான ஏற்பாடுகளின் அத்தனை பொறுப்பும், நர்மதாவுடையதே என்றும், அவளையே அக்கூட்டத்திற்கு போக சொன்னார், எம்.டி.,
கடந்த ஆண்டு, 600 கோடி, 'டர்ன் ஓவரில்' அவளுடைய பங்கு தான் அதிகம் என்பதால், நிர்வாகம், இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இதை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் பட்சத்தில், அவளுக்கு, அடுத்த பதவி உயர்வு காத்திருக்கிறது.
''கம்பெனி கொடுக்கும் அங்கீகாரத்திற்கு, நன்றி சார்... எனக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி. என் பள்ளி, கல்லுாரி நாட்கள் நெல்லையில் தான் கழிந்தன. மறுபடி நினைவுகளை மீட்டெடுக்கும் வாய்ப்பு,'' என்று, உவப்புடன் ஒப்புக் கொண்டாள்.
கணவர் செழியனுக்கும், இதில் மகிழ்ச்சி தான்.
''மனப்பூர்வமாக செய், நர்மா... மனம் கவர்ந்த பழைய இடங்கள் அனைத்தையும் பார்த்து வா,'' என்று, முத்தமிட்டான்.
''ஐ... ஜாலி... நாம, 'சைனீஸ் ரெஸ்டாரண்ட்' போகலாம்பா... சாப்ஸி சாப்பிடணும்... 'அதெல்லாம் வேணாம், 'ஜங்க் புட்' சாப்பிடக் கூடாது'ன்னு, அம்மா சொல்வாங்க,'' என்று சிரித்தான், கவின்.
ஊதுபத்தியின் நறுமணம் போல, கமலியின் நினைவும் சுழன்று கொண்டே இருந்தது.
எட்டாம் வகுப்பிலிருந்து பி.ஏ., பொருளாதாரம் வரை, இருவரும் சேர்ந்தே படித்தனர்.
குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் இருந்து கூப்பிடு துாரத்தில், எதிரெதிர் வீடு. அவளுக்கு அப்பா இல்லை; அம்மா மட்டும் தான். சரியாக நடக்க முடியாத காலை வைத்து, சமையல் வேலை செய்து தான், கமலியை படிக்க வைத்தார், அவள் அம்மா.
கமலி, புத்திசாலி. அன்பானவள். கற்பனையுடன் அழகழகான கதைகளை சொல்வாள். வகுப்பே உட்கார்ந்து கேட்கும். ராஜகுமாரன், மந்திர கம்பளம், மாயக் குதிரை மாதிரி கதைகள் அல்ல. ராணி குந்தவை, அரண்மனையை விட்டு வெளியில் வந்து, மக்களுக்காக எப்படி மருத்துவமனை கட்டினாள்...
மேரி கியூரிக்கு, எதற்காக இரண்டு முறை நோபல் பரிசு வழங்கப்பட்டது; சித்தர்கள், ஒளியை ஏன் தெய்வமாக வழிபட்டனர் என்பது பற்றிய சாதனை கதைகளை, வெறும் தகவல்களாக இல்லாமல், சுவாரஸ்யமிக்க சம்பவங்களுடன் சொல்வாள்.
'அறிவை விட கற்பனை அவசியமானது. அறிவுக்கு எல்லை உண்டு, கற்பனைக்கு எல்லையே இல்லை...' என்று சிரிப்பாள்.
கதைகளை போலவே, அவளை ரொம்ப பிடிக்கும், நர்மதாவுக்கு. ஏழ்மைக்கும், உற்சாகத்திற்கும் தொடர்பே இல்லை. நம்பிக்கையும், அன்பும் இருந்தாலே, வாழ்க்கை அமைதியாக இருக்கும்.
ஆனால், கமலியின் அம்மா, அவளை அடிக்காத குறையாக, 'படிச்சு வேலைக்கு போற வழியை பார்க்காம, இப்படி கதை விட்டுகிட்டு இருக்கியா. பொறந்ததுமே, அப்பாவை விழுங்கினே. என்னிக்கு என்னை பலி கொடுக்கப் போறியோ... அப்புறம் அனாதையா கெடந்து சீரழியப் போற. வாடி... புத்தகத்தை எடுத்து படிடி...' என்று, தோழியர் எதிரிலேயே திட்டுவார்.
'கமலிக்கு என்னம்மா குறைச்சல். படிப்புல, 90 மார்க் குறையாம வாங்கறா. கதை சொல்வது ஒரு கலை. அதுல, அவள் ராணி... ப்ளீஸ், திட்டாதீங்கம்மா...' என்று, பரிந்து பேசுவாள், நர்மதா.
'ஆமா, உனக்கென்ன... உன் அப்பா, பேங்க் மானேஜர். படிப்பு முடிஞ்சதும், அமெரிக்காவுல மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்துடுவார். இவ, ரேஷன் கடை வரிசையில நிக்கணும்; வேலை தேடி அலையணும்; மாசக் கடைசியில, காலி அரிசி பானையில எலி உருண்டு ஓடுறதை ரசிக்கணும்.
'உனக்கெல்லாம் புரியாதும்மா, எங்க கஷ்டம்... வாடி, கடன்காரி...' என்று, முதுகில் ஒரு அடி வைத்து, கமலியை இழுத்துப் போவார், அவள் அம்மா.
அம்மாவுக்கு தெரியாமல் கண் அசைத்து, 'நாளைக்கு, ஆனி பிராங் கதை பேசலாம்...' என்று கிசுகிசுப்பாள், கமலி.
'கமலி... எப்படி இருக்கிறாய்... 12 ஆண்டுகளாக தொடர்பு இல்லையே, கண்ணே... உன் அம்மா தவறி விட்டார் என்று, ஒரு தகவல் தான் கிடைத்தது. வேலை தேடி அலைந்தாய் என்றும், வீட்டைக் காலி செய்யச் சொல்லி நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்றும், பிரேமாவை, ஒரு திருமணத்தில் பார்த்தபோது சொன்னாள்.
'நம் நெருங்கிய தோழியர் எல்லாருமே இடம் பெயர்ந்து விட்டோமே, கமலி. உன்னைப் பற்றி யாருக்கும் தெரியவில்லையே.
'இந்த பயணத்தில், உன்னை பார்ப்பேன். அதற்காகவே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது எனக்கு. 'இச்சிறு உலகில், நாம் என்றாவது மறுபடி சந்தித்துக் கொள்வோம்...' என்று, சிறு வயதில், நாம் மானசீகமாக சத்தியம் செய்து கொண்டோம். அந்த சத்தியத்தை இறுகப் பற்றி வருகிறேனடி...' என, மனதுக்குள் கூறி கொண்டாள்.
பிரமாதமாக நடந்து முடிந்தது, பொதுக் கமிட்டி மாநாடு.
சென்னையிலிருந்து அழைத்து பாராட்டி தள்ளியது, நிர்வாகம். செழியன், கவின் இருவரும் வீடியோ அழைப்பில் பேசி, சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.
உறுதுணையாக இருந்த நெல்லை, ஏ.எம்.டி., சாரை அழைத்து, ''நெல்லையில், எத்தனை கமலிகள் இருக்கின்றனரோ அத்தனை கமலியையும் அழைத்து வர முடியுமா... என்னிடம் மூன்றே மூன்று தகவல்கள் தான் உள்ளன. நானும், அவளும் படித்த பள்ளி, கல்லுாரி, வீட்டு முகவரி. தயவு செய்து,'' என்று முடிப்பதற்குள், அங்கு வந்தார், காரியதரிசி.
''மேடம்... மண்டபத்து சொந்தக்காரர், உங்களைப் பார்க்க வேண்டுமாம்,'' என்றார்.
''சரி, வரேன்,'' என்றவள், ''ஏ.எம்.டி., சார், ப்ளீஸ், நீங்கள் கமலியை தேட ஆரம்பியுங்கள்,'' என்றாள்.
பிரம்மாண்ட மண்டபம். இயற்கை எழில் சூழ ஆரண்யத்திற்கு நடுவில் இருந்தது. மரங்களும், பறவைகளும், இசையொலிகளும் ஏதோ ஒரு தேவலோகம் போன்ற பிரமையை ஏற்படுத்தின.
வழக்கமாக, சென்னை திருமண மண்டபங்கள், நகரத்தில், வாகன இரைச்சல்களுக்கும், புகைக்கும் நடுவில், 'பார்க்கிங்' வசதியில்லாத இடமாக இருக்கும். ஆனால், இந்த இடம், மணமக்களுக்கு மட்டுமில்லாமல், வந்து போகிற எல்லாருக்குமே அழகிய நினைவுகளை உண்டாக்கி விடும்.
அப்போது தான் அந்த அழைப்பு...
''எப்படி இருக்கே, நர்மா... உன்னை பார்க்கணும்ன்னு எவ்வளவு காலம் காத்திருந்தேன், மை டியர்,'' என்று அணைத்து, ஆனந்தக் கண்ணீரில் அன்பை வெளிப்படுத்தினாள், கமலி.
கரைந்து போனாள், நர்மதா.
''என்ன பண்ணுகிறாய், கமலி... எப்படி இங்கே வந்தாய்?''
''நர்மா... இது, எங்க மண்டபம்... 'தாமிரபரணி அன்பு மண்டபம்' என்று, அழகிய தமிழில் ஒளிர்ந்தது.
''வேலை தேடிக் கொண்டிருந்தபோது, வேண்டுதலுக்காக வாரணாசி போனோம். படகு விபத்து. அம்மா, அங்கேயே இறந்தாள். எனக்கு, தலையில் பலத்த அடி. நான்கு மாதம் கோமாவில் இருந்தேன். குணமானதும், வாழ்வே சூன்யமாக தெரிந்தது.
''ஆதரவற்றோர் இல்லத்தில், 'சூப்பர்வைசர்' வேலை. அங்கே கிடைத்த அனுபவங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தின. கண்களால் பார்த்து உணர்ந்ததை, இதயத்தால் உணர்ந்து கொண்டேன். இயற்கையை ஆழமாக உற்று நோக்கி, எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.
''ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கிற இடங்களைப் பார்த்தேன். ஒரு புன்னகை, ஒரு அணைப்பு, ஒரு விசாரிப்பு போதுமானதாக இருந்தது. முதியோருக்கும் அப்படித்தான். இருவரையும் இணைத்தால் என்ன என்று யோசித்து, சிறு அளவில் செயல்படுத்தினேன். பலன், அபாரமாக இருந்தது.
''முதியவர்களுக்கு ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஊட்டினர், குழந்தைகள்; பதிலாக, அன்பையும், உறவையும் கொடுத்தனர், முதியவர்கள். பாட்டி, தாத்தா, பெரியம்மா, பெரியப்பா என்று, அவர்களுக்குள் புதிய உலகம் தானாகவே உருவானது.
''இதோ அதன் அழகிய வடிவம் தான், தாமிரபரணி அன்பு மண்டபம், நர்மதா. கீழே திருமணங்கள், காதணி விழாக்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்று களை கட்டும்போதெல்லாம், மேலேயும் அந்த இன்பங்கள் இடம்பெயரும். நல்ல உணவு, நாதஸ்வரம், பாட்டு, 'ஆர்கெஸ்ட்ரா' என்று சூழல் இன்பமயமாகும்.
''மண்டபம் பதிவு செய்ய வருபவர்கள், தாமாகவே மாடியில் இருக்கும் பெரியவர்களையும், குழந்தைகளையும் விழாவுக்கு அழைப்பர். மனிதன், பொதுவாக நல்லவன். அவனை, சரியானபடி துாண்டி விடுவது தான் கலையும், அறிவியலும் இல்லையா,'' என்று, சிரித்துவிட்டு, கமலி தொடர்ந்தாள்...
''அறிவியல் என்பது, நல்லெண்ணங்களின் வளர்ச்சிதானே... என் எண்ணத்தில் எழுந்த கருத்து செயல் வடிவம் பெற, கலையை பயன்படுத்திக் கொண்டேன். என்ன பார்க்கிறாய்... ஆமாம், நர்மா, கதை சொல்லும் கலை... 'யு டியூபில்' என், 'கதை கேளு, கதை கேளு' சேனல் மிகவும் பிரபலம்... 10 லட்சம் சந்தாதாரர்கள்... அந்த பணம் தான் இப்படி மண்டபமாக மாறியிருக்கிறது, நர்மா,'' என்றாள்.
''இல்லை, கமலி... அற்புதமாக மாறியிருக்கிறது... அதிசயமாக, அருமையாக,'' என்று, தோழியை, இறுக அணைத்துக் கொண்டாள், நர்மதா.
வி. சந்திரமதி
