PUBLISHED ON : ஆக 30, 2020

அ. முரளிதரன், மதுரை: இலங்கை தேர்தலில், ராஜபக் ஷே கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது பற்றி?
அவரது ஆட்சி பிடித்திருக்கிறது; அவரைப் பிடித்திருக்கிறது! நம் நாட்டில், பா.ஜ., மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவில்லையா... அதே போல் தான்!
* மு. சுகுமாரன், மானாமதுரை: 'துரை முருகன், அ.தி.மு.க.,விற்கு வந்தால், சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்...' என, அ.தி.மு.க., அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளாரே...
ஏற்கனவே அவர்கள் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது... இதேபோல, தி.மு.க.,வையும் மாற்றலாம் என்ற எண்ணம் தான்... தேர்தல் நெருங்குகிறதே!
தி. திருமலைசாமி, சென்னை: பூட்டப்பட்ட கோவிலுக்குள் இருக்கும் கடவுள் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்?
'நான் ஒருவன் இல்லை என்பவருக்கும், எனக்கு செருப்பு மாலை அணிவித்தோருக்கும், இத்தனை நாட்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தோருக்கும், இப்போதாவது எதிர்ப்பு காட்டுங்களேன்...' என, எண்ணியபடியே இருப்பார் போலும்!
எஸ். நிக்கில்குமார், ராமேஸ்வரம்: 'சிறையிலிருந்து, சசிகலா வெளியே வந்ததும், அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைந்து விடும். கட்சியின் முழு கட்டுப்பாடும் அவரிடம் சென்று விடும்...' என, காங்., - எம்.பி., கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளாரே...
இதனால், இவருக்கென்ன கலக்கம்! ஒருவேளை, தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும், அக்கட்சி கூட்டணியில் உள்ள, காங்., - எம்.எல்.ஏ.,களுக்கு அமைச்சர் பதவி கிடைத்து விடப் போகிறதா என்ன?
* ஆர். நவநீலராய், சென்னை: தி.மு.க.,வை வழி நடத்துவது, ஸ்டாலினா, உதயநிதி ஸ்டாலினா?
இரண்டு பேருமே இல்லை; பீகாரில் இருந்து வந்துள்ள, பிரசாந்த் கிஷோர் தான்; இவர், 'ஐ பேக்' என்ற தேர்தல் புத்திமதி அலுவலகத்தை நடத்தி வருகிறார்; தி.மு.க.,விடம் பல கோடி பெற்று, 'ஐடியா'கள் கொடுத்து வருகிறார். கிஷோரால் தான், ஸ்டாலின் தலைமுடி மாற்றமும், இந்துக்கள் ஆதரவு அறிக்கைகளும் நிகழ்ந்து வருவதாகக் கூறுகின்றனர். தேர்தல் வருகிறதே!
டி. ராஜன், மதுரை: எப்போது தான் காங்கிரசில் கோஷ்டி பூசல் நிற்கும்?
ஹரியானா போய் விட்டார், பிரியங்கா; ராகுலின் தொகுதி, பக்கத்து மாநிலம் தானே... அவர், ஏன் சென்னையில் வீடு எடுத்து, இம்மாநிலத் தலைவர் ஆகி விடக்கூடாது... அப்போது ஒழியும் கோஷ்டி பூசல்!
* அனுராதா, பஞ்சலிங்கபுரம், கன்னியாகுமரி: தற்கால கல்வி முறை, வாழ்க்கைக்குத் தேவையானவற்றை கற்றுத் தருகிறதா?
அப்படியே மனப்பாடம் செய்து, வாந்தி எடுக்க வைக்கிறது; வாழத் தேவையானவை எதுவும், அதில் இல்லை! மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, இதிலிருந்து மீள வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது!
