தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 30, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

என்னுடைய தீவிர வாசகியான அவர், நீண்ட இடைவெளிக்கு பின், என்னை சந்திக்க அலுவலகம் வந்திருந்தார். முன்பு பார்த்ததை விட, இப்போது, மெலிந்து காணப்பட்டார்.

'கொழுக் மொழுக் என்று இருப்பாயே... இப்போது மெலிந்து, '50 கிலோ தாஜ்மகால்' போல் மாறிட்டியே... என்ன மாயம் செய்தாய்...' எனக் கேட்டேன்.

'என்ன மணி... தெரியாத மாதிரி கேட்கிற... நீ சொல்லிக் கொடுத்த யோகாவும், சில வாரங்களுக்கு முன், 'வாரமலர்' இதழில் வெளியான, 'எட்டு போட்டால்...' என்ற கட்டுரையை படித்து, அதை பின்பற்றியதாலும், என், 'வெயிட்' வெகுவாக குறைந்து விட்டது...' என்றார், சந்தோஷமாக.

'தொடர்ந்து பயிற்சி செய்கிறாயா அல்லது உடல் தான் மெலிந்து விட்டதே என்று, நிறுத்தி விட்டாயா...' என்றேன்.

'எப்படி விட முடியும் மணி... நானே விரும்பினாலும், இப்போது நிறுத்த முடியாது போலிருக்கு... பழகி விட்டது; தொடர்ந்து செய்து வருகிறேன்.

'எனக்கு ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து, எங்கள், 'பிளாட்'டில் வசிக்கும் இன்னும் இரண்டு குடும்பத் தலைவிகள் என்னுடன், எட்டு போட வந்து விடுகின்றனர்.

'ஆனா, என்ன தொந்தரவு என்றால், நான் மட்டும் பயிற்சி செய்யும்போது, அமைதியான மனநிலையில், இறை நாமத்தை சொல்லியபடி நடப்பேன். ஆனால், இவர்களோ, வாய் ஓயாமல், 'தொண தொண'வென பேசி, 'டென்ஷன்' ஏற்படுத்தி விடுகின்றனர். 'மைண்ட் டிஸ்டர்ப்' ஆகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை...'

'இதுக்கு போய் ஏன் கவலைப்படுற... மொபைல் போனில் பாட்டு கேட்பது போல், சும்மானாச்சும் காதில், 'ஹெட்போன்' மாட்டியபடி நடை பயிற்சி செய்... அவர்கள் பேச்சு, உன் காதில் விழாது. அவர்களும் உன்னுடன் பேசுவதை தவிர்ப்பர்...'

இதை சொல்லும்போது, இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது...

மொபைல் போன் வந்த புதிது அது. சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில், நடிகை மீனா, தன் அம்மா மற்றும் சிலருடன் வந்திருந்தார்.

மீனா கையில், புதிதாக வந்திருந்த மொபைல் போன் இருந்தது. அந்த போனில் பேசுவது போல், அந்த விசாலமான உணவு கூடத்தில் இப்படியும், அப்படியுமாக நடந்தவாறும், தன்னை யாராவது பார்க்கின்றனரா என்று, ஓரக்கண்ணால் நோட்டம் விட்ட படியும் பேசிக் கொண்டிருந்தார்.

அவர், நிஜமாகவே யாருடனோ பேசுகிறார் என்று தான் நினைத்தோம்; அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. ஆனால், திடீரென்று, அவரது போனிலிருந்து, 'ரிங் டோன்' ஒலித்தது. அங்கிருந்த அனைவரும், 'கொல்' என்று சிரித்து விட்டனர்.

மீனாவின் முகத்தில், 'டன்' கணக்கில் அசடு வழிய, தன் மேஜைக்கு சென்று அமர்ந்து கொண்டார்.

இச்சம்பவத்தை, முன்பே இப்பகுதியில் எழுதியுள்ளேன். அதை படிக்காமல், 'மிஸ்' செய்தவர்களுக்காக...

'கமிங் பேக் டு த பாயின்ட்...' அதுபோல் எதுவும் இப்போ நடக்க வாய்ப்பில்லை. 'டெக்னாலஜி' மிகவும் முன்னேறி விட்டது. ஒரு மொபைல் போனை வைத்து, உலகத்தையே கைக்குள் கொண்டு வந்து விடமுடியும். போன் மணி அடித்தாலும், கவலையில்லை. பாட்டு கேட்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை...'

'ஆமாம் மணி... இது கூட நல்ல, 'ஐடியா'வா தான் இருக்கு. இனி, அதையே, 'பாலோ' செய்கிறேன்...' என்று கூறி, விடை பெற்றார் அந்த வாசகி!

கே

நண்பர் ஒருவரிடம் இருந்து, 'மொபைல்' அழைப்பு வந்தது. அவர் பெயரைப் பார்த்ததும் அழைப்பை ஏற்றேன்.

நம்பர் மட்டும் வந்தாலோ, தெரியாத பெயரில், 'ட்ரூ காலர்' அழைப்பு வந்தாலோ, மொபைல் போனை எடுப்பதில்லை. அதனால், வேண்டாத பிரச்னைகள் தான் ஏற்படும்; மொபைல் நம்பரை யாராவது கொடுத்து விடுகின்றனர்.

சமீபத்தில், உயர் போலீஸ் அதிகாரியிடமிருந்து போன் வந்தது; அவர், யார் எனத் தெரியாது; போனை எடுக்கவில்லை. அடுத்த இரண்டு நிமிடங்களில் இன்னொரு தெரிந்த போலீஸ் அதிகாரியிடமிருந்து போன் வந்தது.

'கொரோனா' குறித்து என்னிடம் விசாரித்தார். குடும்ப நலம் பற்றியும் விசாரித்து போனை, 'ஆப்' செய்தார்.

எனக்கு தெரிந்து விட்டது; இவர் தான், தன் உயர் அதிகாரியிடம், என் மொபைல் நம்பர் கொடுத்து பேச சொன்னவர் என்பது.

'கம்மிங் பேக் டு தபாயின்ட்' - முதலில் போன் செய்த நண்பர் பெயர், அருண்; ஆந்திரா வங்கியில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.

ஓய்வு பெறும் வயதுக்கு, இரண்டு வயதுக்கு முன்பே ஓய்வு பெற்றார். இதற்கு காரணம், அவரது தகப்பனார்.

இவரை பள்ளியில் சேர்ப்பதற்கு, போலி சான்றிதழ் பெற்று, இரண்டு வயது அதிகமாக்கி வாங்கியுள்ளார். அதனால், ஓய்வுபெறும் இயற்கையான ஆண்டுகளுக்கு முன், ஓய்வு பெற்று விட்டார்.

இவரது மனைவி, இன்னும் வேறு ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறார்.

'எனிவே' - இவரது, மாமியார் இறந்து விட்டார். அவர் போன் செய்தபோது, இரங்கலை தெரிவித்தேன்.

'அவர் நேற்று தானே இறந்தார்...' என்றார்.

'இல்லை அருண்... நேற்று முன்தினமே இறந்து விட்டதாக, கண்ணன், 'மெசேஜ்' அனுப்பியிருந்தாரே...' எனக் கூறி

முடிக்கு முன் -

'சியர்ஸ்...' என்றார்.

'என்ன அருண், மதியம், 1:00 மணிதானே ஆகிறது. அதற்குள்ளாகவா...' என்றபடி, 'மாமியார் செத்துப் போச்சே அதற்கா?' என்றேன்.

'ஆமாம்... நேத்து செத்துப் போச்சு... மதுரையில்...' என்றார்.

இவர் இருப்பது சென்னையில். மாமியார் இறந்தது மதுரையில்!

'என்ன அருண்... நேத்து முன்தினமே இறந்துட்டதாக, கண்ணன், எஸ்.எம்.எஸ்., அனுப்பி இருந்தாரே...' என்றேன்.

'ஆமாமாம்... மறந்துட்டேன்... என் மனைவி, மூன்று நாளைக்கு முன்பே, மதுரை போய் விட்டார். அங்கு தான் சாவு நடந்தது...' என்றவரிடம், 'நீங்க தான் சென்னையில் இருக்கிறீர்களே... சரக்கு கிடைக்காதே... உங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்தவர் யாரு...' என்றேன்.

'இந்தா... சரவணனிடம் பேசு...' என, இன்னொரு நண்பரிடம் போனை கொடுத்தார்...

அவர், 'அண்ணே இதெல்லாம் பெரிய விஷயமா? பகல், 12:00 மணிக்கு காஞ்சிபுரம் சென்றால், எல்லாம் வாங்கி வந்து விடலாம்...' என்றார்!

வார இறுதியில், 'டாஸ்மாக்' கடைகளில், 180 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகும் ரகசியம் தெரிந்தது!

மாமியாரின், 'பத்து'க்கு அருண் செல்வாரா என்பது தெரியவில்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us