தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (2)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (2)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (2)


PUBLISHED ON : ஆக 30, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தந்தை என்ன எழுத்தாளரா, திரையுலக நாயகரா?

என் அம்மாவுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, என்னை, சென்னைக்கு அழைத்துக் கொள்வது என்கிற முடிவோடு, தேவகோட்டையில் வந்து, ஒருநாள் இறங்கி விட்டார்.

'வா... மெட்ராசுக்கு போகலாம்...' என, அம்மா, என் கையைப் பிடித்து இழுக்க, 'வேண்டாம் மணிமேகலை, அவன் இங்கேயே இருந்துரட்டும். இவனை எனக்கு விட்டுக் கொடுத்துடு, மணி. லேனாவை விட்டுட்டு என்னால் ஒருநாள் கூட இருக்க முடியாது. இவனை, நாங்க பிள்ளை (சுவீகாரம்) கூட்டிக்கிறோம். நல்லா பார்த்துக்கிறோம். உன் ஆத்தாவா இருந்து கேட்டுக்கிறேன்...'

'இதென்ன ஆச்சி, புதுக் கதை... ஒருக்காலும் முடியாது ஆச்சி. உனக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்குதுன்னு தெரிஞ்சிருந்தா, உன்கிட்ட கொடுத்து வளர்க்க சொல்லியிருக்கவே மாட்டேன்...'

'இல்ல மணி... உனக்கு சிரமம் குறையட்டுமேன்னு தான் இவனை வளர்க்கிறேன்னு சொன்னேன். எங்ககிட்ட நல்லா ஒட்டிக்கிட்டான். இப்ப இவனை விட்டுட்டு இருக்கிறதை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியலை. அய்த்தானையும் கேட்டுட்டேன். சரின்னிட்டாக. இங்க, லேனா நல்லா இருப்பான், மணி...'

'மாட்டேன் ஆச்சி. இன்னைக்கு நான் ஒரு தீர்மானத்தோட தான் வந்திருக்கேன். இவனை அழைச்சுகிட்டு போகாம நான் தேவகோட்டையை விட்டு போறதா இல்லை...'

'சொன்னாக் கேளு மணி...' என, ஒரு கையை பிடித்து என் பெரியம்மா உள்ளே இழுத்தார்.

'வீட்டை விட்டு வெளியே வா...' என்று, என் அம்மா இழுக்க, நானோ, 'ஆத்தாவை விட்டுட்டு வரமாட்டேன்...' என்று பெரிதாக அழ... இழுபறியில் வென்றவர், அம்மா என்பதை சொல்ல வேண்டியதில்லை. (இக்காட்சியை மட்டும், 'டிவி' தொடர் இயக்குனரிடம் சொன்னால், நாலு, 'எபிசோட்' ஓட்டியிருப்பார்!)

அம்மா - அப்பாவின் வசதி பற்றி, எனக்கு ஏதும் தெரியாது. ஆனால், பெரியப்பா முத்துராமன், நல்ல சம்பாத்தியக்காரர். உத்தமபாளையத்தில், வட்டிக் கடைகள், அரிசி மில்; தாராபுரத்தில், ஐஸ் ப்ரூட் கம்பெனி; தேவகோட்டையில், ஒரு முரட்டு வீட்டில் பாதி பங்கு. இதுபோக, நவீன பங்களா என்று, ஏக வசதி. பணத்திற்கு முடையே இல்லை.

இவ்வளவு வசதிகளையும் விட்டு விட்டு, நான் மெட்ராசுக்கு போவதா... அங்கே எப்படி இருக்குமோ... வசதிகள் போதாது என்று, அரசல் புரசலாக கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது.

சென்னையில் வந்து இறங்கினேன். எல்லாமே மிரட்சியாகப் பட்டன. அப்பாவுக்கு என, கார் ஒன்று இருந்தது. எனக்கு, இது அதிசயமாகப் பட்டது. கார் வைத்திருக்கிற அளவிற்குப் பணக்காரரா?

ஆனால், வீடு ஏன் இப்படி இருக்கிறது... அடுக்களை, கழிப்பறை தவிர, இரண்டே அறைகள்.

'ஐயையோ... இங்கு வந்து வகையாக மாட்டிக் கொண்டோம் போலிருக்கிறதே...' என்று தான், முதலில் தோன்றியது.

அக்கா, தம்பி, தங்கை மீதெல்லாம் ஒட்டுறவே வரவில்லை. ஏதோ பழகக் கிடைத்த சம வயது நண்பர்கள் போலவே தோன்றினர். அக்கா, பாசம் காட்ட முயன்றபோது விலகிப் போனேன்.

அப்பாவை பார்க்க வருகிற பிரபலங்கள், நண்பர்கள், வாசகர்கள், சக எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர்கள் என, எனக்குள் மிகுந்த மிரட்சியான தோற்றத்தையே, அவரை பற்றி உருவாக்கினர்.

'தேவகோட்டையில் நான் பார்த்த பழநி, வீரபாண்டிய கட்டபொம்மனில் வரும், சிவாஜி கணேசன், அப்பாவுக்கு நண்பரா... அட, பரவாயில்லையே... இதென்ன, அப்பாவை பார்க்க, ஊமைத்துரை ஜெமினிகணேசன் வீடு தேடி வருகிறாரே...' என, நினைப்பேன்.

ஒருமுறை, சென்னை, தர்மப் பிரகாஷ் ஓட்டலில், வள்ளலார் சன்மார்க்க சங்க விழா நடந்தது, அதில், அப்பா தமிழ்வாணன், ஆன்மிக பேச்சாளர் கிரிதாரி பிரசாத், இன்னும் பலர் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்பாவின் முறை வர, 'என் பேச்சை ஆரம்பிக்கு முன், மகன் லேனாவை மேடை ஏற்ற விரும்புகிறேன். ரொம்ப நல்லாப் பாடுவான். குறிப்பாக, சிவபுராணத்தை மட்டும் இப்போது பாடிக் காட்டப் போகிறான்...' என்று அறிவித்தாரே பார்க்கலாம்.

பின்னால் அமர்ந்திருந்த என்னை, சபை முழுக்கக் கண்களால் தேடியது. என் உடம்பிற்குள், 'ஜிகு ஜிகு' என இனம் புரியாத உணர்வுகள் பரவ, இதயம் வேகமாகப் படபடக்க, உடம்பில் உள்ள நரம்புகள் எல்லாம் துடிக்க ஆரம்பித்தது போன்ற உணர்வு.

'என்ன இது, திடீர் அறிவிப்பு... அப்பா சொல்லவே இல்லையே! இன்னைக்கு மேடை ஏறி சிவபுராணம் பாடுறியா என்று கேட்டிருந்தால் கூட, கொஞ்சம் தைரியத்தை வளர்த்துக் கொண்டிருக்கலாம்...'

ஆனால், இது திடீர் அறிவிப்பு. மிரண்டு போனேன்.

என்ன மாதிரியான வாய்ப்பு இது. அதுவும், கிரிதாரி பிரசாத் போன்றவர்களின் முன்னால், சபையில், அருட்செல்வர் நா.மகாலிங்கம், சத்திய கங்கை பகீரதன், அவ்வை நடராசன் போன்றவர்கள் கூட அமர்ந்திருந்ததாக நினைவு.

எழுந்து நின்றேனே தவிர, நகரக் கூட கால்களுக்குத் துணிவு வரவில்லை.

'வா... மேலே வா...' என்று, அப்பா ஜாடை காட்ட, என்ன மாதிரியான வாய்ப்பு என, மகிழ்வதற்கு பதிலாக, 'மாட்டி விட்டீங்களே அப்பா...' என்று தான் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டேன்.

மெல்ல நடந்தேன் மேடையை நோக்கி, கால்கள் இரண்டிலும் யாரோ கற்களை கட்டி விட்ட மாதிரியான உணர்வு!

தமிழ்வாணன் பற்றி மு.கருணாநிதி

எப்போதும் 'கல கல' சிரிப்பு!

எதற்கும் கலங்காத உள்ளம்!

எதிரிகளையும் கவர்ந்திடும் எழுத்து!

என் நண்பர் தமிழ்வாணன்

என்றும் என் நினைவில் இருப்போரில் ஒருவர்!

ஒருமுறை தென்றல் அலுவலகத்தில் சந்தித்தோம்!

அப்பொழுது என் உச்சந் தலையில் வழுக்கை ஆரம்பம்.

அதைப் பார்த்து அவர் கேலி செய்தார்! வயதாகி விட்டதென்று

இல்லை இளமையின் அடையாளம் என்றேன்.

எப்படி என்றார்.

தேங்காயில் வழுக்கை இருந்தால், அது இளநீர் அல்லவா!

அப்படி என்றேன்.

அவரைச் சந்திக்கும் போதெல்லாம் இதை நினைவுபடுத்தி ரசித்து மகிழ்வார்.

நல்ல படைப்பாளி மட்டுமல்ல.

ரசிகரும் கூட!

20.10.2003 அவர் நினைவு போற்றும் தம்பி லேணாவுக்கு, மு.க.,

தொடரும்

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us