PUBLISHED ON : ஆக 30, 2020

முகநுால் நட்பா, உஷார்!
இங்கிலாந்தில் வசிப்பதாக சொன்ன இளம் பெண் ஒருவரிடம், முக நுாலில் நட்பு கொண்டார், நண்பர். நட்பு கொண்ட இரண்டாவது நாள், அப்பெண், 'வாட்ஸ் - ஆப் எண் கொடுங்கள், 'சாட்' செய்யலாம்...' என்று கோரிக்கை விடுக்க, நண்பரும் கொடுத்தார்.
இரண்டு நாட்கள், சாதாரணமாக, மனைவி, குடும்பம், குழந்தைகள், பொழுது போக்கு பற்றி, 'சாட்' செய்து கொண்டிருந்தாள்.
மூன்றாம் நாள், 'கோவிட் - 19 ஊரடங்கு நேரத்தில், உங்கள் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எப்படி வாங்க முடிகிறது... கடைகள் திறந்து இருக்கிறதா... பொருட்கள் வாங்க, கைவசம் போதுமான பொருளாதார வசதி இருக்கிறதா, எப்படி சமாளிக்கிறீர்...' என்றெல்லாம் கொக்கி போட்டு, 'சாட்' செய்திருக்கிறாள்.
விகல்பமின்றி, அவள் கேட்ட கேள்விக்கெல்லாம், 'சாட்'டில் பதில் அளித்து இருக்கிறார், நண்பர்.
'நான், 5,000 பவுண்டு - 4.75 லட்சம் ரூபாய் அனுப்புகிறேன்.
உங்கள் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு, கோவிட் - 19 ஊரடங்கு நேரத்தில், அத்தியாவசிய பொருட்கள் வாங்கிக் கொடுத்து, மீதியை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். பணம் அனுப்ப, உங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் சில விவரங்களை அனுப்புங்கள்...' என, கேட்டிருக்கிறாள்.
வங்கி கணக்கு விவரங்களை, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பி, பணம் கணக்கில் வந்து சேருமென்று காத்திருந்திருக்கிறார், நண்பர்.
பத்தாவது நிமிடம் வங்கியில் இருந்து, நண்பரின் கணக்கில் இருந்த, அவருடைய சேமிப்புத் தொகை, 1.48 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாகவும், மீதமுள்ள தொகை, 'ஜீரோ' என்றும், குறுஞ்செய்தி வந்தது.
அப்போது தான், தான் ஏமாந்திருக்கும் விஷயமே அவருக்குத் தெரிந்திருக்கிறது.
நிதியுதவி செய்வதாக, முகநுாலில் இளம் பெண்களை நட்பாக இணைய செய்து, ஆசை காட்டி, மோசம் செய்யும் ஒரு கூட்டம், களம் இறங்கி இருப்பதாகத் தெரிகிறது.
முகநுாலில், வெளிநாட்டு நட்பு கோரிக்கைகளை, கவனத்துடன் கையாள்வது நமக்கும் நல்லது; வங்கியில் இருக்கும் நம் சேமிப்புக்கும் நல்லது.
கே.புருஷோத்தமன், கேளம்பாக்கம்.
புது, 'சிம் கார்டு' வாங்கும் பெண்களே...
என் தோழியிடம், புது, 'சிம் கார்டு' வாங்கப் போவதாக கூறினேன்.
'உன் அப்பா அல்லது அண்ணன் பெயரில், 'சிம் கார்டு' வாங்கு...' என்ற தோழி, 'இப்போதுள்ள, 'சிம்' யார் பெயரில் உள்ளது என்பதை அறிய, 'ட்ரூ காலர்' வசதி வந்து விட்டது. யாராவது சமூகவிரோதிகள், ஏதோ ஒரு மொபைல் எண்ணுக்கு டயல் செய்து, 'ட்ரூ காலரில்' பெண் பெயர் வந்தால், அவளது, 'வாட்ஸ் - ஆப் ஸ்டேட்டசில்' உள்ள புகைப்படத்தை எடுக்க முடியும்.
'மேலும், 'வாட்ஸ் - ஆப்'பிலோ, போன் செய்தோ தொந்தரவு செய்யக்கூடும். 'ட்ரூ - காலரில்' ஆண் பெயர் வந்தால், அவன் கவனம் நம் மீது திரும்பாது...' என்றாள்.
அவள் சொல்வதும் சரியாகவே பட்டது.
புது, 'சிம் கார்டு' வாங்கும் பெண்கள், கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது.
— கோ. பாண்டீஸ்வரி, மம்சாபுரம்.
சிறுமியின் திறமை!
தோழியின் மகள், 7ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளி பாடப் புத்தகங்கள் தாண்டி, மற்ற புத்தகங்கள் வாசிப்பதிலும் ஆர்வமாக இருப்பாள்.
அதற்காகவே என் தோழியும், அவள் கணவரும், வீட்டில் சிறு நுாலகம் ஒன்றை, அவளுக்காக அமைத்து கொடுத்துள்ளனர்.
தமிழ், ஆங்கில நாளிதழ்களோடு, வார, மாத இதழ்களுக்கும் சந்தா செலுத்தி, வாங்கி தருவதோடு, புத்தக கண்காட்சிகளுக்கு அழைத்துச் செல்வர். தாங்கள் தேர்வு செய்து தரும் புத்தகங்களோடு, அவள் விரும்பும் புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கின்றனர்.
ஓய்வு நேரங்களை, புத்தக வாசிப்பில் கழிப்பவள், அக்கம் பக்க குழந்தைகளையும் அழைத்து, தான் படித்த கதைகளையும், தகவல்களையும் சுவைபட பகிர்ந்து கொள்வாள்.
இது தெரிந்து, அடுத்த தெரு குழந்தைகளும், அவளிடம் கதை கேட்க குவியத் துவங்கினர். இதையடுத்து, 'யு டியூப்' சேனல் ஒன்றை ஆரம்பித்து கொடுத்தனர், அவளது பெற்றோர். அதில், அவளின் வீடியோக்களை பதிவேற்றம் செய்யத் துவங்கினாள்.
ஏற்ற இறக்கத்தோடும், தெளிவான உச்சரிப்பிலும், அழகாகவும், சுவையாகவும் அவள் சொல்லும் கதைகளை கேட்க, ஒரு லட்சத்திற்கும் மேலான சந்தாதாரர்கள் உள்ளனர்.
வருங்காலத்தில், இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்காக கூடி, இளம் வயதிலேயே, மாத வருமானம் ஈட்டவும் வாய்ப்பிருக்கிறது.
எப்போது ஒருவர், தன் திறமையை உணர்கிறாரோ, அப்போதே, அவர், வெற்றியை நெருங்கி விடுகிறார் என்பது உண்மைதானே!
- எஸ். அலமேலு, கள்ளக்குறிச்சி.
