PUBLISHED ON : அக் 16, 2011

பிலிப்பைன்சின் அகுசான் டெல் சர் மாகாணத்தை சேர்ந்த கிராம மக்களுக்கு, பல ஆண்டுகளாக, உயிர் பயத்தை ஏற்படுத்திய ராட்சத முதலையை, ஒரு வழியாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், உயிருடன் பிடித்துள்ளனர். இந்த முதலையின் எடை என்ன தெரியுமா? ஒரு டன். இந்த ராட்சத மிருகத்தின் மொத்த நீளம், 21 அடி. உலகிலேயே, உயிருடன் பிடிபட்ட, மிகப் பெரிய முதலை இது தான் என்கின்றனர், பிலிப்பைன்ஸ் மக்கள்.
அகுசான் மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய நீரோடையில், பல ஆண்டுகளாக, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த இந்த முதலை, இதுவரை, ஏராளமானோரை, உயிருடன் விழுங்கி, ஏப்பம் விட்டிருக்கிறதாம். இதனால், அகுசான் மாகாணவாசிகள், அந்த நீரோடை பக்கம் தலை காட்டவே பயப்படுவர்.
மிகப் பெரிய வலை ஒன்றில், சமீபத்தில் அந்த முதலை, வசமாக சிக்கிக் கொண்டது. இதை, நீரோடையில் இருந்து தூக்குவதற்கே, நூறு பேர் தேவைப்பட்டனர். கடுமையான போராட்டத்துக்கு பின், கரைக்கு கொண்டு வரப்பட்ட இந்த முதலை, அதன் பின் கிரேன் மூலம், லாரியில் ஏற்றப்பட்டு, அங்குள்ள மிருக காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தண்ணீருக்குள் இருக்கும் போது, பல அப்பாவி மக்களுக்கு தண்ணி காட்டி வந்த முதலைக்கு, தற்போது, மிருககாட்சி சாலை ஊழியர்கள், தண்ணி காட்டி, பராமரித்து வருகின்றனர்.
— ஜோல்னா பையன்

