தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உபன்யாசம் கேட்பதன் மகிமை!

உபன்யாசம் கேட்பதன் மகிமை!

உபன்யாசம் கேட்பதன் மகிமை!


PUBLISHED ON : ஜூலை 23, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நல்ல விஷயங்களை கேட்பதன் மூலம், நற்செயல்களை செய்ய மனம் தூண்டுகிறது. இதன் மூலம், புண்ணியமும், கர்ம வினைகளிலிருந்து விடுபடும் பேறும், அந்த ஆத்மாவுக்கு கிடைக்கிறது. இதை முன்னிருத்தியே, நம் முன்னோர், புராணங்கள் மற்றும் மகான்களின் வரலாறுகளை உபன்யாசம் செய்வதை கேட்க வலியுறுத்தினர்.

ஒருசமயம், யம லோகத்திற்கு சென்றார், பிரம்ம தேவர். அவரை, யமதர்மன் வரவேற்று, பூஜித்த சமயம், கணகணவென்ற மணிகள் முழங்க, வைரம் மற்றும் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகான விமானம் ஒன்று வந்தது. அதிலிருந்து திவ்ய புருஷன் ஒருவர் இறங்கினார்.

அவரைப் பார்த்ததும், எழுந்து, அவரை வரவேற்று, 'தர்மம் உணர்ந்தவரே... உன் தரிசனத்தால் மகிழ்ந்தேன்; எவ்வளவு காலம் உனக்கு இங்கு இருக்க விருப்பமோ, அவ்வளவு காலம் நீ இங்கு இருக்கலாம்; பின், பிரம்மலோகம் செல்லலாம்...' என்று, அன்போடு கூறினார், யமதர்மர்.

இதை பார்த்த பிரம்ம தேவர், ஆச்சரியத்துடன், 'யமதர்மா... தேவர்களால் பூஜிக்கப்படும் நீ,

சாதாரண மானிடரை எழுந்து போய் வரவேற்கிறாயே... அப்படி என்ன இவர் நற்செயல்கள் செய்தார்?' எனக் கேட்டார்.

'பிரம்ம தேவா... கைலாயத்தில், பார்வதி தேவியின் தோழிப் பெண் ஒருவள், தேவிக்கு அபசாரம் செய்ததால், 'பன்னிரண்டு ஆண்டுகள், நரியாக திரியக் கடவாய்...' என்று சபித்தாள், பார்வதி தேவி. தன் தவறை உணர்ந்து, சாப விமோசனம் வேண்டிய போது, 'விதஸ்தா மற்றும் வேத்திரவதி எனும் நதிகள் சங்கமமாகும் இடத்தை (மத்திய பிரதேசத்தில் உள்ளது) அடையும் போது, சுய உருவம் அடைவாய்...' என, சாப விமோசனம் தந்தாள், பார்வதி தேவி.

'நரியாக மாறிய அப்பெண், பன்னிரண்டு ஆண்டுகள் சுற்றித் திரிந்து, நதிகள் சங்கமமாகும் இடத்தை அடைந்து, உணவு ஏதும் கிடைக்காமல் அங்கேயே உயிர் நீத்தாள்; உடனே, திவ்ய தேகம் பெற்று, அங்கு தோன்றிய தெய்வீக விமானத்தில் ஏறி, கைலாயத்தை அடைந்தாள்.

'அச்சமயம், அங்கு வந்த அந்நாட்டு மன்னன் தராபாலன், 'ஆகா... ஒரு நரி உயிர் நீத்து, தெய்வ விமானம் ஏறி, நற்கதி அடைந்து விட்டதே...' என்று வியந்தவர், 'இவ்விடம், உத்தமமான ஷேத்திரம்...' என்று எண்ணி, அங்கே ஆலயம் எழுப்பி, சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.

'அந்நேரத்தில், பிரம்ம ஞானம் பெற்ற வேதியர் ஒருவர் அங்கு வந்தார். அவரை வரவேற்று பூஜித்த மன்னன், 'அடியேன் கட்டியுள்ள சிவாலயத்தில், தாங்கள், புராண உபன்யாசம் செய்ய வேண்டும்; ஆண்டுக்கு நூறு பொன் தருகிறேன்...' என்று கூறி, அவரின் சம்மதம் பெற்றார்.

'மேலும், வேதியர் புராணம் சொல்லும் போது, மக்களோடு மக்களாக, தானும் அமர்ந்து, உபன்யாசம் கேட்டார், மன்னர். இவ்வாறு, ஆறு மாதம் கழிந்த நிலையில், மன்னனின் ஆயுள் முடிந்தது. அம்மன்னனே சிவனருளால் திவ்ய விமானத்தில் வந்து இறங்கியவர்.

'உபன்யாசம் கேட்பதால், தேவர்கள் மட்டுமல்ல, மும்மூர்த்திகளும் மகிழ்ந்து, அருள் மழை பொழிவர்...' என்றார், யமதர்மர்.

உபன்யாசம் கேட்பதன் மகிமையை உணர்ந்து, புராண உபன்யாசம் கேட்போம்; உயர்வை பெறுவோம்!

பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!

கோவிலில் பெண்கள் முடிக்காணிக்கை செலுத்தலாமா?

பெண் குழந்தைக்கு, ஏழு வயதுக்குள் முடியிறக்கும் வேண்டுதல்களை, நிறைவேற்றி விட வேண்டும். முடியாதபட்சத்தில், ஒன்பது வயது வரை செய்யலாம். அதன்பின், பெண்கள் முடியிறக்குவது கூடாது. அதுவும், திருமணமான பெண்கள், சுமங்கலி என்ற பெயர் பெற்று விடுவதால், கண்டிப்பாக முடியிறக்க கூடாது என, சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us