PUBLISHED ON : ஜூன் 11, 2023

மகான் வல்லபாசாரியார், பூஜை செய்ய துவங்கிய நேரம், சிறிதளவு தயிர் தேவைப்பட்டது. அதை அறிந்த மகானின் சீடர், அருகில் உள்ள தயிர் விற்கும் பெண்மணியிடம் போய், தயிர் கேட்டார்.
வல்லபரின் தவ ஆற்றல் மற்றும் அவரது சீடர்களை பற்றி, தயிர் விற்கும் பெண்ணிற்கு நன்றாகவே தெரியும். ஆகவே, சீடரிடம், 'நல்ல தயிராகவே தருகிறேன். விலை என்ன கொடுப்பீர்கள்?' என, கேட்டாள்.
'என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்...' என்றார், சீடர்.
'அப்படியானால் எனக்கு முக்தியைக் கொடுங்கள்...' என்றாள், தயிர்க்காரப் பெண்.
'இதோ தருகிறேன்...' என்ற சீடர், அதை அப்படியே எழுதி, அந்தப் பெண்ணின் கையில் கொடுத்தார். பெண்ணும் தயிரைக் கொடுத்தாள். தயிரை வாங்கித் திரும்பினார், சீடர்.
அதைப் பார்த்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், 'ஏமாந்து விட்டாயே. அவர், உன்னை நன்றாக ஏமாற்றி விட்டார்...' என்று, தயிர்க்கார பெண்ணை கேலி செய்தனர்.
அவர்கள் சொன்ன எதையும் தயிர்க்காரப் பெண் பொருட்படுத்தவில்லை. சற்று நேரத்தில் அந்தப் பெண் இறந்தாள். எம துாதர்களும், விஷ்ணு துாதர்களும் வந்தனர்.
'நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? இவள் சிறிதளவு கூட புண்ணியம் செய்ததில்லை...' என்றனர், எம துாதர்கள்.
'அதைப்பற்றி எல்லாம் கேள்வியே இல்லை. வல்லபரின் சீடர், இவளுக்கு, முக்தி சீட்டு எழுதிக் கொடுத்திருக்கிறார். விலகிப் போங்கள்...' என்று, விஷ்ணு துாதர்கள் சொல்லி, தயிர்க்காரப் பெண்ணின் ஆன்மாவை, வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதே சமயம், சீடர் கொண்டு வந்த தயிரை வைத்து, பூஜையை முடித்த வல்லபர், 'தயிருக்கு என்ன விலை கொடுத்தாய்?' என, கேட்டார்.
'குருநாதா, அந்த தயிர்க்காரப் பெண், முக்தி கேட்டாள். தங்கள் பெயரால், தந்தேன் என்று எழுதிக் கொடுத்து விட்டு, தயிரை வாங்கி வந்தேன். அதுதான் விலை...' என்றார், சீடர்.
அதைக் கேட்ட குருநாதர், 'அடாடா, என்ன இப்படி செய்து விட்டாய்? அவள் செய்த உதவிக்கு, அந்த தயிருக்கு விலையாக நீ கொடுத்தது, மிகவும் குறைவு; அவள் தந்த தயிருக்கு, கிருஷ்ண பக்தியை அல்லவா விலையாகக் கொடுத்திருக்க வேண்டும்...' என்றார்.
'உண்மை தான் குருநாதா. ஆனால், அவள் பக்தியை கேட்கவில்லையே; கேட்டிருந்தால் தந்திருப்பேன்...' என்றார், சீடர்.
மகான்களின் மகிமையை விளக்குவதோடு மட்டுமல்லாமல், பக்திக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் விளக்கும், வரலாறு இது.
பி. என். பரசுராமன்
