PUBLISHED ON : ஜூன் 11, 2023

அரசியல் கதையில் நடிக்கும், விஜய்!
கடந்த உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நிற்க வைத்தது; கடந்த அம்பேத்கர் ஜெயந்தி அன்று, தன் ரசிகர் மன்றத்தினரை அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வைத்தது...
உலக பட்டினி தினத்தை ஒட்டி, தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளிலும், ஏழை மக்களுக்கு, ரசிகர் மன்றத்தின் மூலம் ஒருவேளை உணவு வழங்கியது என, படிப்படியாக, விஜய், அரசியல் களத்திற்குள் வந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது.
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கும், தன், 70-வது படத்தில், முழுக்க முழுக்க அரசியலை மையமாகக் கொண்ட கதையில் நடிக்கப் போகிறார், விஜய். இந்த படம், இன்றைய அரசியல்வாதிகள், மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றனர். ஜனநாயகத்தை எப்படி எல்லாம் கூறு போடுகின்றனர் என்பது குறித்த, அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதையாம்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, ரஜினியும், கமலும் அரசியலுக்கு வர தயாரானதால், தன் முடிவை அப்போது மாற்றிக் கொண்டார், விஜய். வரும், 2026 சட்டசபை தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தை, தேர்தல் களத்தில் இறக்கி விட தயாராகி விட்டதாக கூறுகின்றனர், சினிமா வட்டாரத்தினர்.
— சினிமா பொன்னையா
ஜூனியர் விஜயகாந்த், சண்முக பாண்டியன்!
நடிகர் விஜயகாந்தின் மகன், சண்முக பாண்டியன், சகாப்தம், மதுரை வீரன் போன்ற படங்களில் நடித்தார். அந்த படங்களில் உடல் பருமனாக காணப்பட்டவர், தற்போது, உடல் எடையை குறைத்து, ஆரம்ப காலத்தில், விஜயகாந்த் இருந்தது போன்று, தன், 'கெட் - அப்'பை மாற்றி இருக்கிறார்.
இதை அடுத்து, நடிகர் சசிகுமார் இயக்கும், குற்றப்பரம்பரை கதையில் நடித்து வரும், சண்முக பாண்டியன், அடுத்து, கன்னடத்தில் வெளியான, காந்தாரா படம் பாணியில் இன்னொரு படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.
'சினிமாவில், என் தந்தை விஜயகாந்த் விட்டுச் சென்ற இடத்தை, நான் நிரப்புவேன். அவர் பாணியில் அதிரடி, 'ஆக் ஷன்' கதைகளில் நடித்து, ஜூனியர் விஜயகாந்தாக வலம் வருவேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்ட சிவாஜி கேர்ள் நடிகை, தன், 'மாஜி ஹீரோ'களிடம் சிபாரிசு கேட்டு, விடாமல் துரத்தி வருகிறார். குறிப்பாக, மகள் பிறந்த கையோடு உடற்கட்டை, 'ஸ்லிம்' ஆக்கி, சினிமா கோதாவில் குதித்திருக்கும் மேற்படி நடிகை, '40 வயதிலும் நான் இளமை பொங்கி நிற்கிறேன்...' என்று சொல்லி, படு கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க, வாய்ப்பு கேட்டு வருகிறார்.
மேலும், 'என் ஆத்துக்காரரும், கவர்ச்சி சேவைக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டார்...' என்று, கமர்ஷியல் இயக்குனர்களின் காது கடித்து வரும், சிவாஜி கேர்ள், தளபதி,- சுள்ளான் போன்ற நடிகர்களை அணுகி, 'உங்கள் படங்களில் குத்தாட்டம் போடுவதற்காவது எனக்கு வாய்ப்பு தர வேண்டும்...' என்று, 'மிட்நைட் பார்ட்டி'களுக்கு, துக்கடா உடையில், திடீர், 'விசிட்' அடித்து, அவர்களை அன்புத்தொல்லை செய்து வருகிறார்.
சினி துளிகள்!
* ரியல் எஸ்டேட் மோசடிகளை மையமாக கொண்ட கதையில் உருவாகி வரும், உன்னால் உன்னால் என்ற படத்தில், அதிரடியான வில்லி வேடத்தில் நடிக்கிறார், சோனியா அகர்வால்.
* சைன், போலா சங்கர் படங்களை தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ், கதையின் நாயகியாக நடித்து வந்த, ரகுதாத்தா என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
* மகள் பிறந்த கையோடு கலைச் சேவைக்கு தயாராகி விட்ட, ஸ்ரேயா, ஹிந்தி மற்றும் தெலுங்கில், 'ரீ என்டரி' கொடுத்துள்ளார். தமிழில், புதிய பட வாய்ப்புகளுக்காக கல்லெறிந்து வருகிறார்.
* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்க இருக்கும் அவரது, 171வது படத்தை, கமலஹாசனின், ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
* அஜித் நடிக்கும், விடாமுயற்சி படத்தில், அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கப் போகிறார். இந்த படத்தை, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில், திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார், இயக்குனர் மகிழ் திருமேனி.
* தீவிர முருக பக்தையான, நடிகை ஆத்மிகா, சில தினங்களுக்கு முன், திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்துள்ளார்.
அவ்ளோதான்!
