PUBLISHED ON : ஜூலை 10, 2022

நாராயண தீட்சிதர், நல்ல படிப்பாளி. தினமும், சன்னியாசிகளை வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்களுக்குத் திருப்தியாக உணவு படைப்பார்.
ஒருநாள், தன் வழக்கப்படி, சன்னியாசிகள் சிலரை, தான் படைக்கும் உணவை ஏற்கும்படி வேண்டி, வீடு திரும்பினார். வீட்டிற்குள் வந்த பிறகே, மனைவி, வீட்டுக்கு விலக்காகி இருந்தது தெரிந்தது.
'சற்று நேரத்தில், அவர்கள் சாப்பிட வந்து விடுவரே... இக்கட்டான இந்த நேரத்தில் என்ன செய்வேன்...' என்று வருத்தத்தோடு, வீட்டை விட்டு வெளியே வந்தார், தீட்சிதர்.
அதே வேளையில், வைர கம்மல், மூக்கில் புல்லாக்கு, கழுத்தில் தங்கத்தாலி, குங்குமப்பொட்டு ஆகிய சர்வ அலங்காரங்களுடன், கண்களில் கருணையும், புன்சிரிப்புமாக ஒரு பெண் வந்தாள். தீட்சிதரின் இக்கட்டான நிலையறிந்து, 'நான் சமைத்துப் பரிமாறட்டுமா?' என, கேட்டாள்.
மிகுந்த மகிழ்ச்சியோடு, அந்தப் பெண்ணை அழைத்து வீட்டிற்குள் போனார், தீட்சிதர்.
அதி விரைவாக சமையலை செய்து முடித்து, விருந்தாளிகள் வந்ததும், அவர்களை அமர வைத்து, அன்புடன் பரிமாறினாள். வந்தவர்கள் சாப்பிட்டு முடித்ததும், அவர்களை வழியனுப்பும் வேலையில் இருந்த தீட்சிதரிடம், 'ஐயா, நான் வந்த வேலை முடிந்தது; வருகிறேன்...' என்று, விடைபெற்றுப் போய் விட்டாள்.
சற்று நேரத்தில், 'ஆகா, கஷ்டமான நேரத்தில் வந்து, உதவி செய்த அந்தப் பெண்ணை, ஒரு வாய் சாப்பிடும்படி கூட சொல்லவில்லையே...' என்று, அவசர அவசரமாக ஓடி வந்து, தெருவில் தேடினார், தீட்சிதர். அவள் கிடைக்கவில்லை.
அன்றிரவு, தீட்சிதர் கனவில் காட்சி அளித்த பெண்மணி, 'ஐயா, உங்கள் வீட்டிற்கு வந்து சமைத்து, உணவு பரிமாறியது அன்னபூரணியான நான் தான். உங்கள் வீட்டிலிருந்து திரும்பும்போது, வாசலில் உள்ள கிழக்குத் திண்ணையில், என் புல்லாக்கு விழுந்து விட்டது. அந்த இடத்திலேயே எனக்கு ஒரு கோவிலை எழுப்புங்கள்...' என்றாள்.
கனவு கலைந்து எழுந்த, தீட்சிதர், வெளியே போய் பார்த்தார். கிழக்கு திண்ணையில், அன்னபூரணி சொன்னபடியே, புல்லாக்கு ஒளி வீசிக் கொண்டிருந்தது.
'அம்மா... அன்னபூரணி தேவி! அடியேன் கஷ்டப்படக் கூடாதென்று, நீயே வந்து சமைத்துப் பரிமாறினாயா தாயே! என்ன பாக்கியம்...' என்று ஆனந்தக்கண்ணீர் சிந்தினார், தீட்சிதர்.
அன்னபூரணி சொன்னவாறே, புல்லாக்கு இருந்த கிழக்குத் திண்ணையில், அழகான ஒரு கோவிலை எழுப்பினார்.
அவர் அமைத்த அன்னபூரணி கோவில், நாராயண தீட்சிதர் பெயராலேயே அமைந்த தெருவில், புகழ்பெற்ற தத்தாத்திரேயர் கோவில் அருகில், காசியில் இன்றும் உள்ளது.
பசித்தவர்களின் பசியைப் போக்கும் நல் உள்ளம் படைத்தவர்களைத் தேடி வந்து, தெய்வம் அல்லல் தீர்க்கும் என்பதை விளக்கும் நிகழ்வு இது.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
தீபாவளி தவிர மற்ற நாட்களில் சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் குளியல் செய்யக் கூடாது.
