தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 10, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

நான் 31 வயதான இல்லத்தரசி. மாநில அரசுப் பணியில் உள்ளார், கணவர். எங்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இருதரப்பு பெற்றோரும் வெவ்வேறு கிராமங்களில் வசிக்கின்றனர்.

கணவரிடம் குடிப்பழக்கம் இருந்தது. திருமணமாகி நான்கு ஆண்டுகள் வரை, எங்களுக்கு குழந்தை பிறக்காமல் இருந்தது. மருத்துவரின் வற்புறுத்தலின்படி, குடிப்பழக்கத்தை கைவிட்டார், கணவர். குழந்தைப்பேறு மருத்துவரின் தொடர் மருத்துவத்தால், எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மகன், கொள்ளை அழகு. அதிகம் அடம் பிடிக்க மாட்டான். ஒரு வயதிலேயே பேச ஆரம்பித்து விட்டான். 'அம்மா' என, அவன் அழைப்பது, தேவகானமாய் காதுகளில் ஒலிக்கும். கணவரிடம் கவனக்குறைவு அதிகம். எந்த விஷயத்திலும் முழு ஈடுபாடாய் செயல்பட மாட்டார். மகனுக்கு இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடி, ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று விடுமுறை நாள். மகனை கணவரிடம் ஒப்படைத்து, கடைக்கு சென்றேன்.

அரைமணி நேரம் கழித்து வீடு திரும்பினேன். கணவர், மொபைலில், 'வீடியோகேம்' ஆடிக்கொண்டிருக்க, மகனை காணவில்லை. பதறியபடி, 'மகன் எங்கே?' என கேட்க, 'இங்க தான் விளையாடிட்டு இருந்தான்... பாரு...' என்றார்.

கைகால்கள் நடுங்கின. வீடு முழுக்க தேடினேன். வீட்டை வெளிப்புறமாக பூட்டி சென்றதால், பீரோவுக்கு பின்னால், கட்டிலுக்கு அடியில் துழாவியும் காணவில்லை.

கழிவறைக்கு போனேன். சிமென்ட் தொட்டியில் இரு கால்கள் தெரிந்தன. என் மகன் தான் தலைகீழாய் கவிழ்ந்திருந்தான். தண்ணீர் அள்ள முயன்று, 'பேலன்ஸ்' தவறி விழுந்திருக்கிறான். தண்ணீரிலிருந்து அவனை துாக்கினேன்.

என்னுடைய ஓலம் கேட்டு, ஓடி வந்தார், கணவர். மகனின் கை கால்கள் தொய்ந்திருந்தன. ஆட்டோவை பிடித்து மருத்துவமனைக்கு ஓடினோம். பையன் இறந்து அரைமணி நேரமாவதாக கூறினர். கல் போல நின்றிருந்தார், கணவர்.

'சண்டாளப்பாவி கைபேசியை நோண்டிக்கிட்டே இருந்து, நம்ம மகனை பறி கொடுத்திட்டியே... நீயெல்லாம் ஒரு தகப்பனா?' என, கணவர் மீது மண்ணை வாரி துாற்றினேன். ஊரே திரண்டது. மகனின் இறுதி சடங்குகளை முடித்தேன்.

என் பெற்றோரிடம், 'அம்மா இனி இவனுடன் ஒரு நிமிஷம் கூட குடும்பம் நடத்த மாட்டேன்... அத்துவிட்ரு... இவனுக்கு பொண்டாட்டி வேணாம்; புள்ள வேணாம்; மொபைல் போன், தான் வேணும்...' என, ஓங்காரமிட்டேன். என் கால்களில் விழுந்து, 'நான் செஞ்சது தப்பு தான். இனி மொபைல் போனை தொட மாட்டேன். என்னை மன்னிச்சிரு...' என்றார், கணவர்.

கணவரை எட்டி மிதித்து, 'நீ திருந்தி என்னடா பிரயோஜனம்? செத்து போன என் மகன் திரும்பி வருவானாடா?' என கதறிவிட்டு, கிராமத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். போன் மூலமும், நேரிலும் தொடர்ந்து கெஞ்சுகிறார். கணவர் விஷயத்தில் என்ன முடிவெடுக்க வேண்டும் என கூறுங்கள் அம்மா.

இப்படிக்கு,

அன்பு மகள்.


அன்பு மகளுக்கு —

உன் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன். உன் மனநிலையில் சில நிமிடங்கள் இருந்து பார்த்தால் தான் துக்கத்தின் வீரியம் புரிபடும். நீயும், கணவரும் சேர்ந்து உருவாக்கிய உயிர் பொம்மை, உன் மகன். மகனின் பிரிவு கணவரையும் துக்கப்படுத்தி இருக்கும். ஆண்கள் அதிகம் வெளிக்காட்ட மாட்டார்கள்.

மகன் பிறப்பதற்காக குடிப்பழக்கத்தை விட்டொழித்திருக்கிறார், கணவர். தன்னுடைய கவனக்குறைவும், மொபைல் போன் வேடிக்கையும் மகனின் உயிரை காவு வாங்கும் என்பது, அவருக்கு தெரியாது.

கணவரின் கவனக்குறைவு தெரிந்த நீ, குழந்தையை அவரிடம் விட்டு போயிருக்கக் கூடாது. இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள் எத்தனை காலம் வாழும் என்பது, இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். முற்பிறவியின் விட்ட குறை தொட்ட குறையாக, இரண்டாண்டு உன் மகனாய் வாழ்ந்து மறைந்தானோ!

மகளே, நிர்தாட்சண்யமாக கணவரை புறக்கணிக்காதே. தொடரும் உன் புறக்கணிப்பால் அவர் தற்கொலை போன்ற விபரீத முடிவை எடுத்துவிட போகிறார். பெற்றோர் வீட்டுக்கு வரும் கணவரிடம் மனம் விட்டு பேசு. மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ மூன்று நிபந்தனைகளை விதி.

* குடிப்பழக்கம் இனி எப்போதும் கூடாது

* கவனச்சிதறல் இல்லாமல் ஒரு காரியத்தை செய்ய மன பயிற்சி மேற்கொள். (மன வள பயிற்சிக்கு போகலாம்; யோகா தியானம் செய்யலாம், கணவர்)

* அடுத்த 10 ஆண்டுகள், மொபைல் போன் உபயோகிக்கக் கூடாது. பட்டன் போன் தான் வைத்திருக்க வேண்டும்.

மூன்று நிபந்தனைகளையும் குலதெய்வத்தின் மீது சத்தியமாக வாங்கு. வீடு மாறுங்கள். உங்களிருவரிடமும் வயதும், இளமையும் இருக்கிறது. இறைவனருளால் மீண்டும் உங்களுக்கு ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ பிறக்கும்.

மன ஆறுதல் பெற, வாரம் ஒருமுறை கோவிலுக்கு போய் வா. தேவைப்பட்டால் மன நல ஆலோசகரிடம் சென்று ஆலோசனை பெறு. உன் இறந்து போன மகனின் ஒவ்வொரு நினைவு நாளன்றும், அனாதை குழந்தைகளுக்கு ஒருநாள் உணவு செலவை ஏற்றுக்கொள். கணவருடன் சேர்ந்து வாழும்போது, அவரை மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டும் வார்த்தைகளால் துளைக்காதே. மீண்டும் ஒரு தங்க விக்கிரகம் உனக்கு மகனாய், மகளாய் பிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us