தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உரமாகும் உறவுகள்!

உரமாகும் உறவுகள்!

உரமாகும் உறவுகள்!


PUBLISHED ON : ஜூலை 10, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாமியார் பர்வதத்திடம், ''ஏன் அத்தை, ஒரு வாரம் முன்னாடியே சின்ன அத்தை வீட்டு கல்யாணத்துக்கு போகணுமா?'' என, எரிச்சலுடன் கேட்டாள், மருமகள் காயத்ரி.

பட்டுப் புடவைகளை பெட்டியில் அடுக்கியபடியே, முகத்தில் பெருமை வழிய, ''ஆமாம் காயத்ரி, வீட்டுக்கு மூத்தவள், நான். மேலும், நான் தான் பக்கத்திலே இருக்கேன். என் தங்கைக்கு நல்லது, கெட்டது சொல்ல யார் இருக்காங்க சொல்லு,'' என்றார், பர்வதம்.

'ஆமா, ரொம்ப பெருமை தான். இவங்க பாட்டுக்கு ஒரு வாரம் போய் அங்க உட்கார்ந்துகிட்டா, என் பையன் வினயை யார் பார்த்துக்கறது...' என்று நினைத்த காயத்ரியின் மனம், கவலையில் ஆழ்ந்தது.

''அம்மா... காலை, 9:00 மணிக்கு டாக்சியை வரச் சொல்லி இருக்கேன், ஓ.கே., தானே,'' என்றபடியே அங்கு வந்தான், காயத்ரியின் கணவன், ராஜு. கணவனை முறைத்த காயத்ரியிடம், கண் ஜாடையில், 'பேசாமலிரு...' என்று அறிவுறுத்தினான்.

சமையலறையில் வேலைகளை முடித்து, படுக்கையறை வந்த காயத்ரி, ''ஏங்க, அத்தை நாளைக்கே கோயமுத்துாருக்கு போறேங்கறாங்க... நீங்களும் சரிங்கறீங்க... அப்புறம், வினயை யார் பார்க்கறது?'' என்றாள், படபடப்பாக.

''அதெல்லாம் சமாளிக்கலாம் விடு. அம்மா எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க பாரு. அதான் முக்கியம்,'' என்ற ராஜுவிடம், மேலே பேச முடியாமல் மவுனமானாள், காயத்ரி. ராஜுவும், எதுவும் பேசாமல் படுத்து விட்டான்.

ஈரோட்டிலிருந்து டாக்சியில் பயணித்து, கோவையில் உள்ள தன் தங்கை லதாவின் வீட்டுக்கு வந்தாள், பர்வதம்.

''அக்கா, பரவாயில்லையே... சொன்னபடி வந்துட்டியே,'' என வரவேற்றாள், லதா.

''ஏன் லதா, நீ அவ்வளவு ஆசையா கூப்பிடும்போது, நான் வராமல் இருப்பேனா,'' என்று தங்கையை அன்போடு அணைத்துக் கொண்டார், பர்வதம்.

''பெரிய அத்தை வந்ததும் தான் வீடு கல்யாணக் களை கட்டுது,'' என ஆர்ப்பரித்தாள், லதாவின் மூத்த மருமகள்.

''உன் கொழுந்தன், கல்யாண மாப்பிள்ளை, துபாயிலேர்ந்து நாளைக்குத் தானே வரான்,'' என்று அவளிடம் பேச்சுக் கொடுத்தார், பர்வதம்.

''ஆமாங்க அத்தை... நாளை மறுநாள் பொண்ணு வீட்டுல நலுங்கு வைப்பாங்க போல, அதுக்கு போகணுமில்ல,'' என்றாள், லதாவின் மூத்த மருமகள்.

அதன் பின், தன் தங்கை லதாவிடமும், அவள் கணவனிடமும், கல்யாண விபரங்கள், அவர்களின் புது சம்பந்தியைப் பற்றியெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார், பர்வதம்.

பர்வதத்திற்கும், கடைக்குட்டியான லதாவிற்கும், 10 வயது வித்தியாசம். லதா பிறந்ததும், அவர்களது அம்மா நோய் வாய் பட்டதால், அவளை, தன் மகள் போல கவனித்துக் கொண்டார், பர்வதம்.

லதாவின் மூத்த மகனிடம், ''தம்பி, நாம மாப்பிள்ளை வீடுதானேன்னு மெத்தனமாய் இருந்துடக் கூடாது. கல்யாண ஏற்பாடுகளை, கொஞ்சம் அப்பப்ப பெண் வீட்டார்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ. நம் வீட்டு வழக்கமெல்லாம் அவங்களுக்குத் தெரியாதுல்ல,'' என எச்சரித்தார், பர்வதம்.

''அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் பெரியம்மா. நீங்க கவலைப்படாதீங்க,'' என்றான்.

இப்படி எல்லா விஷயங்களிலும் தனக்கு தெரிந்தவற்றைக் கூறிய பர்வதம், திருமணத்தில் கடைசி நேர பரபரப்பை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் கூறினார்.

அன்று காலை, நலுங்குக்கு, லதா வீட்டாரை அழைக்க வந்திருந்தனர், மணப் பெண்ணின் பெற்றோர். அவர்களிடம், தன்னை அறிமுகம் செய்து, தங்கள் வீட்டு வழக்கங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார், பர்வதம்.

அவர்களுக்கு காபி எடுத்து வந்த லதா, 'என்னைப் பேசவே விடாம, இவங்களே பேசிடறாங்களே...' என, மனதில் நினைத்தபடியே, தன் சம்பந்தியிடம், ''அக்கா, அவங்க வீட்டு வழக்கத்தைப் பற்றி சொல்றாங்க. எங்க வீட்டு வழக்கம் பற்றி நாத்தனார்கிட்ட கேட்டுட்டேன்... அவங்க சொல்லியிருக்காங்க. நாம அது படி செய்வோம்,'' என்றாள்.

லதாவின் மன நிலை புரியாமல், ''ஆங்... அதில பெரிய மாற்றம் ஒண்ணும் இருக்காது, லதா. முளைப்பயறு வைக்கிறது, மண மேடையில் பானை, உரல் வைக்கிறது இதெல்லாம் ஒண்ணா தான் இருக்கும்,'' என்றார், பர்வதம்.

சற்று நேரம் திருமண ஏற்பாடுகளைப் பற்றி பேசி, கிளம்பிச் சென்றனர், சம்பந்தி வீட்டார்.

இரவு, தாகத்திற்கு தண்ணீர் குடிக்க சமையலறைக்கு வந்தார், பர்வதம்.

பக்கத்து அறையிலிருந்து, ''ஏன் தான் அக்கா, ஒரு வாரம் முன்னாடியே வந்து இப்படி படுத்தறாங்கன்னு தெரியலை. நான் தான் அவங்களை கூப்பிட்டேன், இல்லைன்னு சொல்லல. ஆனா, எல்லாம் தனக்கு மட்டும் தான் தெரியும், எனக்கு எதுவும் தெரியாதுங்கற மாதிரி பேசறாங்க.

''சம்பந்தி வீட்டுல என்ன நினைப்பாங்க... இது, அவங்களுக்கே தெரிய வேணாமா... எல்லாத்துலையும் மூக்கை நுழைச்சுட்டு, நாமெல்லாம் குடும்பமா உட்கார்ந்து, ப்ரீயா பேசிக்கக் கூட முடியல,'' என, கணவனிடம், லதா குறை கூறிக் கொண்டிருப்பதைக் கேட்டு, ஒரு விநாடி துடித்து போனார், பர்வதம்.

'கடவுளே, நான் என்ன நினைச்சு இங்க வந்தேன். இப்போ நடப்பது இப்படியிருக்கே...' என நினைத்த பர்வதத்துக்கு, துாக்கம் வரவில்லை.

'கல்யாணத்துக்கு இன்னும் மூன்று நாட்கள் தான் உள்ளது. இப்போது ஊர் திரும்பவும் முடியாது. சரி, பல்லைக் கடித்துக் கொண்டு திருமணம் முடிந்ததும், உடனடியாக வீடு திரும்பி விடலாம்...' என, முடிவு செய்து கொண்டார், பர்வதம்.

தான் சிறுமியாக இருந்த போது, கைக்குழந்தையான லதாவை துாக்கிச் சுமந்த நிழல் பிம்பம் மனதில் தோன்றி, பர்வதத்தின் கண்களைக் கசிய வைத்தது. கல்யாண வீட்டுக்கு வந்துட்டு, இப்படி மன வருத்தமும், அழுகையும் கூடாது என, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

மறுநாள் மும்பையிலிருந்து, தாய் வழியில் மிச்சம் இருக்கும் ஒரே சொந்தமான, பர்வதம் - லதாவின் மாமா, சதாசிவம் வந்தார்.

அவரும், தன் பங்குக்கு லதாவிடம், ''யாரெல்லாம் முறை செய்யறது, எப்படிங்கற விபரமெல்லாம் பர்வதத்துக்கு நல்லாத் தெரியும். அவகிட்ட கேட்டு, நம் பாரம்பரிய வழக்கப்படி செய்யணும். எதுவும் தவறக் கூடாது,'' என்றார்.

பர்வதம் சிரித்தபடியே, ''அதெல்லாம், லதா அவ நாத்தனார்கிட்ட கேட்டுக்கிட்டா மாமா. அதுபோல செய்துக்குவா,'' என்றார், விட்டேத்தியாக. சிறு வயதிலிருந்து அவளைப் பார்க்கும் சதாசிவத்திற்கு, அன்று வித்தியாசமாகத் தெரிந்தாள், பர்வதம்.

மதியம் மாடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்த பர்வதத்தைப் பார்த்த சதாசிவம், ''என்ன பர்வதம், உன் முகம் வாட்டமாயிருக்கே,'' என்று கேட்டார். அடுத்த நொடியே பர்வதத்தின் கண்கள் பொல பொலவென நீரை உதிர்த்தது.

''அட என்ன அழுகிறயா,'' என்ற சதாசிவத்திடம், தழுதழுத்தபடியே, ''எல்லாம் மாறிப் போயிடுச்சுங்க மாமா. நான் தான் இன்னும் பழைய பைத்தியமாவே இருக்கேன். அவங்க அவங்க தனி குடும்பமாயிட்டாங்க. நான் இன்னும் பழைய பழக்கம் வழக்கம்ன்னு சொல்லிட்டு, ஒரு வாரம் முன்னாடியே வந்து உட்கார்ந்தா, யாருக்கும் புடிக்க மாட்டேங்குது, மாமா,'' என்றார், பர்வதம்.

''இப்போ மனுஷங்க... நான், என் குடும்பம்ன்னு, ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே சுயநலமாயிருந்து சிந்திக்கிறாங்க. ஆனா, நீ இங்கே வந்த நோக்கம் என்ன... எல்லாரும் சேர்ந்து செய்யற இந்த கல்யாணத்தில, நம் பழைய வழக்கங்கள் மாறாம நல்லவிதமா நடத்தணும்கிறதுக்குத்தானே.

''உன் நல்ல எண்ணம், கண்டிப்பா எல்லாருக்கும் புரியும்மா. நீ, லதா மேல வருத்தமோ, கோபமோ பட வேண்டாம். அது, உன் மனசில வெறுப்பு வளரக் காரணமாயிடும்,'' என்றார், சதாசிவம்.

''கோபமெல்லாம் இல்லை மாமா... கொஞ்சம் வருத்தம் தான்,'' என்றார், பர்வதம்.

''உனக்கு, ஒரு உதாரணம் சொல்றேன்... நிலத்தில விளைஞ்சு, பலன் கொடுத்து காய்ஞ்சு போன பயிர்களை, அப்படியே அதே நிலத்தில் போட்டு உழுது, உரமாக்கிடுவாங்க. அப்போது தான் அந்த நிலத்தில் அடுத்த பயிர் நல்லா விளையும்.

''அது மாதிரி, நாம பெரியவங்க... நல்லா வாழ்ந்து, நிறைய அனுபவப்பட்டவங்க... சின்னவங்க சொல்வதை எல்லாம் பெரிசா எடுத்துக்காம, அவங்க குறைகளை புறம் தள்ளி, நமக்கு தெரிஞ்ச நல்ல விஷயங்களை அவங்ககிட்ட சொல்லி, நாம் வாழும் முறையையும், உறவுகளோட உன்னதத்தையும் நம் சந்ததிக்கு புரிய வைக்கணும்மா. நாம தான் இளையவர்களுக்கு உரமாய் இருக்கணும்,'' என்றார், சதாசிவம்.

மாடிப்படியில் நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த லதா, கண்கள் கலங்க அங்கு வந்து, பர்வதத்தின் கைகளைப் பற்றி, ''என்னை மன்னிச்சிடுக்கா,'' என்றாள் வருத்தத்துடன். ''இனி, யாரும் கண் கலங்கவே கூடாது. எல்லாம் சிரிப்பு தான்,'' என்ற பர்வதம், லதாவை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டார்.

பவானி உமாசங்கர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us