PUBLISHED ON : ஜூலை 10, 2022

அ நிறம் | அளவு
புது மொழி!
குறை, நிறைகளை ஏற்று
வாழப் பழகுவதே
மனித பிறவிக்கு உத்தமம்!
முழுமையான வாழ்வு
ஞானிகளுக்கு
மட்டுமே சாத்தியம்!
குறைகளுடன் வாழும்
பிறரைப் பார்
நம் குறைகள்
சிறியதாய் தோன்றும்!
வறுமையில் வாடும்
ஏழையைப் பார்
உன் வாழ்வு
வசதியாய் தோன்றும்!
துன்பத்தில் பிறர் விடும்
கண்ணீரைப் பார்
நீ படும் அல்லல்
அளவாய் தோன்றும்!
தைரியமும், கோழைத்தனமும்
தன்னம்பிக்கையும், மனச்சோர்வும்
நிம்மதியும், உளைச்சலும்
சின்ன நுாலிழைகளாய்
நம் வாழ்வில்
பின்னிப் பிணைந்திருக்கிறது!
நுாலிழைகளை இரும்பு
சங்கிலியாய் மாற
இடம் தராதே!
துணிந்துவிடு
நுாலிழைச் சிறையை
அறுத்து வெளியேற!
முழுமையான வாழ்வு
மனிதனுக்கும் சாத்தியம்
எனும் புதுமொழி
உன்னிடத்திலிருந்து
ஆரம்பமாகட்டும்!
மு. கண்ணன், புதுச்சேரி.
