தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஒரு முடிவின் தொடக்கம்!

ஒரு முடிவின் தொடக்கம்!

ஒரு முடிவின் தொடக்கம்!


PUBLISHED ON : ஜூலை 10, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் வட மாநிலம், உத்தரகாண்ட்.

சுற்றுலா வந்த குழுவினருடன் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தார், ராகவன். அவர்களை அழைத்து வந்த ஏஜன்ட், ஆசிரம உரிமையாளரிடம் ஹிந்தியில் பேசிவிட்டு வந்தார்.

''நல்லவேளை, தாராளமா இன்னிக்கு ராத்திரி நாம தங்கலாம்ன்னு சொல்லிட்டார்.''

அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

''அவர் சம்மதிக்காவிட்டால், வேன்ல தான் உட்கார வேண்டியிருக்கும். இரவு சாப்பாடும் இங்கு தர்றாங்களாம். காசு எதுவும் வேண்டாம். பக்தர்கள்தானேன்னு சொல்றாரு,'' என்றார், ஏஜன்ட்.

அனைவருக்கும் ஆச்சரியம்.

சாப்பாடு அறை சுத்தமாக இருந்தது. ஸ்வெட்டரையும் மீறிய குளிர். சப்பாத்தியும், சப்ஜியும் சூடாக சாப்பிட்டு, கை கழுவ செல்லும் வழியில், சமையலறையில் அந்த நபரை தற்செயலாக பார்த்தார், ராகவன். புருவங்கள் உயர்ந்தன. மீண்டும் கண் மூடி, 'அவராக இருக்குமோ...' என, யோசித்தார்.

''ஹலோ, பரந்தாமன்...'' உரக்க கூப்பிட்டார்.

வெடுக்கென திரும்பிய அந்த நபர், சட்டென ஏதோ தோன்றி, முகத்தை திருப்பிக் கொண்டார்.

''பரந்தாமன்...'' கூப்பிட்டபடியே அருகில் சென்றார்.

''க்யா க்யா... தும் கவுன் ஹை,'' என, அந்த நபர் சற்று எரிச்சலாக கேட்க திகைத்தார், ராகவன்.

''என்ன பரந்தாமன்... நான் ராகவன், ஏன் என்னை, 'அவாய்ட்' பண்றீங்க?'' புரியாமல் கேட்டார்.

''சலோ சலோ...'' அவர் சொல்ல, ஏதோ யோசித்தபடி திரும்பினார், ராகவன்.

தன் இடத்தில் வந்து படுத்தவருக்கு, துாக்கம் வரவில்லை. ராகவனும், பரந்தாமனும் ஒரே தெருவாசிகள். மத்திய அரசு ஊழியராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்றவர், பரந்தாமன்.

தனி வீட்டில் மனைவி மற்றும் ஒரே மகளுடன் நல்லபடியாக குடும்பம் நடத்தியவர் தான். மகள் திருமணம் முடிந்து, சில ஆண்டுகளில் வீட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனார். தெருவாசிகளுக்கும் அது பெரும் புதிராகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அன்று முதல், திக் பிரமை பிடித்து ஒடுங்கிப் போனாள், பரந்தாமனின் மனைவி.

இந்நிலையில், பரந்தாமனை சந்தித்தது, பெரும் வியப்பாக இருந்தது. மனது நிலைகொள்ளாமல் நடு இரவில் எழுந்தார். மீண்டும் ஒவ்வொரு அறையாக, பரந்தாமனை தேடினார், ராகவன்; அவர் இல்லை. யோசனையுடன், மொட்டை மாடிக்கு செல்ல, எதிர்பார்த்தது போலவே, வானத்தை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தார், பரந்தாமன்.

அவர் அருகில் சென்று அமைதியாக நிற்க, சட்டென திரும்பிய பரந்தாமன், முறைத்து பார்த்தார்.

''ப்ளீஸ் பரந்தாமன்... நடிக்காதீங்க, நான் உங்கள இங்க பார்த்ததா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். என்னை நம்புங்க, இது சத்தியம்,'' என்றார், ராகவன்.

பரந்தாமன் கண்களில் நீர் சுரந்தது.

உடனே, அவருடைய கைகளை பற்றி, ''ப்ளீஸ், உணர்ச்சிவசப்படாதீங்க...'' என்ற ராகவன், அவரே பேசட்டும் என காத்திருந்தார்.

சில நிமிடங்களில், ''நீங்க எப்படி இங்க?'' என்றார், பரந்தாமன்.

''எனக்கு, பத்ரிநாத் ஸ்தலத்த பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை. அதான், சுற்றுலா வந்தேன். தரிசனம் முடிஞ்சு, பக்கத்துல, 20 கி.மீ.,ல நாராயணன் பேலஸ் ஹோட்டலுக்கு திரும்பும்போது, வழியில் ஒரு விபத்து; போக்குவரத்து சரியாக தாமதமாகும்ன்னு ஏஜன்ட் அழைத்து வந்தார். இப்பதான் புரியுது, நான் உங்களை பார்க்கணும்ன்னு இருக்கு.''

சில நிமிடங்கள் மவுனமாக கழித்து, ''ஊர்ல என் மனைவி, பொண்ணு - மாப்பிள்ளை, பேரன் எல்லாம் எப்படி இருக்காங்க,'' மெதுவாக கேட்டார், பரந்தாமன்.

''அப்பாடா... இப்பதான் பழைய பரந்தாமனை பார்த்த மாதிரி இருக்கு. ஏதோ இருக்காங்க. அதிலும் உங்க மனைவி, சுத்தமா ஒடுங்கிப் போயிட்டாங்க. வெளில பார்க்கவே முடியறதில்ல. சரி, என்னாச்சு பரந்தாமன்... ஏன் இப்படி செஞ்சீங்க, குடும்பத்துக்கு பெரிய, 'ஷாக்' கொடுத்தது சரியா,'' ஆவலும், கவலையுமாக கேட்டார், ராகவன்.

''ராகவன், நீங்களும் குடும்பஸ்தன் தான். என்னோட, 'பீலிங்' உங்களுக்கும் புரியும். பொதுவா, ஒரு ஆணோ, பெண்ணோ கடைசி வரை தனியா வாழறது கஷ்டம். அதான் கல்யாணம்கிற, 'கான்சப்ட்' வெச்சிருக்காங்க அல்லது இயற்கைன்னு கூட சொல்லலாம். அதுல, சந்தோஷம், துக்கம் மாறி மாறி வரும். அத பக்குவமா ஏத்துகிட்டு சமாளிச்சு வாழறது தான், ஒரு வெற்றிகரமான இல்லற வாழ்க்கை. சரிதானே,'' என்றார், பரந்தாமன்.

''கரெக்டா சொன்னீங்க, பரந்தாமன். நீங்க, 'சக்சஸ்புல்'லாதான இருந்தீங்க,'' கேட்டார், ராகவன்.

''ஆமாம். அதுல சந்தேகம் இல்ல. ஆனா, நான் நினைச்சபடி ஒரு உயர்ந்த குடும்ப வாழ்க்கை கிடைக்கல. ஒரு கட்டத்துல, நான் என் சுயத்த இழந்த மாதிரி உணர்ந்தேன். என் விருப்பப்படி எதுவும் செய்ய முடியல. எல்லாத்துலயும் நெருக்கடி.

''ஊருக்காக, சொத்துக்காக, மனைவிக்காக, பொண்ணுக்காக இப்படி எல்லாரையும், 'அட்ஜஸ்ட்' பண்ணிக்கிட்டு சுதந்திரமில்லாத அடிமையா மாறிட்டேன்னு தோணிச்சு. அதான் தடால்னு ஒரு முடிவு எடுத்தேன். இனி என்னோட கடமை எதுவுமில்லேன்னு புரிஞ்சுது.

''நான் இல்லாம என் குடும்பம் இருக்கும். என் மகள், மனைவியை பார்த்துப்பா. சரி, கடைசி சில வருஷம் தனிமையில, சுதந்திரமா கழிச்சுட்டு போயிடலாம்ன்னு கிளம்பி வந்துட்டேன். வரும்போது தனியா தானே வந்தோம். இதை தவிர சில விஷயங்கள சொல்ல முடியாது. அதுவும் குடும்பம்கிற, 'கான்சப்ட்'டால இது கூட போலி கவுரவம் தான்,'' விரக்தியாக சொன்னார், பரந்தாமன்.

''இங்க, நீங்க எதிர்பார்த்தபடி சந்தோஷமா இருக்கீங்களா பரந்தாமன்?''

''ரொம்ப சந்தோஷம்ன்னு சொல்ல முடியாது. ஆனா, பெரிய அழுத்தம் இல்ல. ஏதோ முடிஞ்ச வேலை செய்யறேன்; ப்ரீயா இருக்கேன். இந்த சந்நியாசி வாழ்க்கை புது அனுபவமா இருக்கு.''

''உங்கள நம்பி வந்த மனைவி பத்தி ஏதும் யோசிச்சீங்களா?'' கேட்டார், ராகவன்.

கண்களை மூடி திறந்தவர், ''ஓ... விஜயாவை எப்படி மறக்க முடியும். அன்பு, பாசம், கோபம், திட்டு என்று நவரசத்துடன் உறவாடியவள் ஆயிற்றே. என் தலையெழுத்து என்று பரஸ்பரம் நொந்து கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளதே. குடும்பம் என்ற அமைப்பை கட்டுக்கோப்புடன் உயிரை கொடுத்து காப்பாற்றியவளாயிற்றே...

''விஜயா பற்றி யோசிப்பேன், அவளுக்கு இப்ப நான் ரொம்ப முக்கியமில்ல... பொருளாதார ரீதியா, நான் அவளுக்கு ஏற்பாடு செஞ்சு வெச்சிருக்கேன். அவ எதிர்பார்த்தபடி நானும், நான் எதிர்பார்த்தபடி அவளும் முழுமையா இல்ல. அதாவது, இருக்க முடியல. இந்த பிரிவு, ரெண்டு பேருக்கும் தேவைன்னு தோணிச்சு,'' என்றார், பரந்தாமன்.

''என்ன பேசறீங்க... எந்த தம்பதிங்க முழுமையா புரிஞ்சுகிட்டு வாழறாங்க. குடும்பம்னா நாலும் தான் இருக்கும். உங்க மகள், பேரன், மாப்பிள்ளையை விடுங்க. அது தனி குடும்பமாயிடுச்சு. உங்க மனைவி, உங்களை நம்பி வந்தவங்களை தனியா விட்டா, அது கடமையிலேர்ந்து தவறின மாதிரிதான?''

''ராகவன், நீங்க சொல்றத பார்த்தா, விஜயா ரொம்ப பாதிச்சிருக்காளா... அவ சமாளிச்சுப்பான்னு தானே நெனச்சேன்,'' சற்று பதறி கேட்டார், பரந்தாமன்.

''இல்ல, அவங்களால இத தாங்கிக்க முடியல. நீங்க பக்கத்துல இருக்கும்போது அது தெரியாம போயிருக்கலாம். இல்ல, இவரு நம்மள கைவிட மாட்டார்ன்னு நம்பிக்கையில, உரிமையில சாதாரணமா நடந்திருக்கலாம். இப்ப அவங்க வெளிலயே வர்றதில்ல. ரொம்ப இளைச்சுட்டாங்க. ஏதோ குற்ற உணர்ச்சி அவங்கள பாதிச்சிருக்கு. இதத்தான் எதிர்பார்த்தீங்களா?''

பரந்தாமனால் பதில் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் மனசாட்சி உறுத்தியது. விஜயா, அதை தாங்கிக் கொள்வாள் என்றே எதிர்பார்த்தார். ஆனால், ராகவன் சொல்வதை பார்த்தால்...

''பரந்தாமன், நீங்க ஆயிரம் சமாதானம் சொன்னாலும், ஊரறிய கைபிடித்த மனைவியை தனியா விட்டுட்டு ஓடிப்போறது, எனக்கு நியாயமா தெரியல. இது, மத்தவங்க பார்வையில உங்க மனைவிக்கு எவ்வளவு அவப்பெயரை ஏற்படுத்தும். உங்களுக்குள்ள எந்த பிரச்னை இருந்தாலும், அத பேசித் தீர்க்கணும். இப்படி காணாமல் போய், ஒரு கடுமையான சூழ்நிலையை உண்டாக்கியிருக்கக் கூடாது,'' என்றார், ராகவன்.

''சரி, ராகவன்... கல்யாணம்ன்னு பண்ணிகிட்டதால, நான் அதுலயே உழலணுமா... எனக்கு விடுதலையே கிடையாதா... நிறைய விஷயங்கள பிடிக்காமலேயே பிடிச்ச மாதிரி செய்து, நடிச்சுக்கிட்டே இருக்கணுமா... சொல்லுங்க,'' கேட்டார், பரந்தாமன்.

''ஆமாம். இது கல்யாணமான, ஊருக்கு, உறவுக்கு பயந்த, எல்லா தம்பதியரோட சாபம் தான். அறைக்குள்ள சண்டை போட்டாலும், வெளில நடிச்சுதான் ஆகணும். எல்லாரும் அதைதான பண்றாங்க,'' உலகில் நடப்பதை இயல்பாக சொன்னார், ராகவன்.

''கரெக்ட், ராகவன். நான் கொஞ்சம் பாதை மாறி விலகணும்ன்னு முடிவெடுத்தேன். இதுல யாருக்கும் பெரிய நஷ்டமில்லையே.''

''தப்பு, பரந்தாமன். உங்க மனைவியை நீங்க புரிஞ்சுக்கல. கூட இருக்கும்போது நடந்தது, உங்கள பாதிச்சிருக்கலாம். வயசான காலத்துல தான், கணவன் - மனைவி பரஸ்பரம், அன்பு, உதவி தேவைப்படும். அந்த நேரத்துல உங்க மனைவியை அனாதையா விடலாமா, அதுவும் ஒரு பழியோட.''

''பழியா?''

''ஆமாம். எத்தனை நாள் ஊர் வாயை மூட முடியும். நம்ப ஊர்ல கணவனோட ஆயுள்ங்கிறதே மனைவியோட தாலி பலம் தான் காரணம்ன்னு, நம்பிக்கை உண்டு. ஆக, ஒரு தாய்க்கு மகன் மாதிரி, மனைவிக்கு கணவன்; கணவனோட நல்லது கெட்டதுல மனைவியோட பங்கு இருக்கும். நீங்க இப்படி குடும்பத்த விட்டு ஓடி வந்தா, அதுக்கு முக்கிய காரணம் மனைவி தான்னு நினைக்கத் தோணும். இத தடுக்க முடியாது. இதத்தான் பழின்னு சொன்னேன்.''

துணுக்குற்றார், பரந்தாமன். இதை அவர் எதிர்பார்க்கவில்லை.

'நான் நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்றாக அல்லவா இருக்கிறது. என் அருமையை கொஞ்சம் அவள் உணரட்டும் என்று நினைத்தேனே தவிர, விஜயா பழிக்கு ஆளாவதை எதிர்பார்க்கவில்லையே. நான் திரும்ப சென்றால் சரியாகி விடுமோ...

'ஆனால், நான் மீண்டும் குடும்ப சாகரத்தில் நீந்த வேண்டுமே, என்ன இது, எலிப்பொறியில் மாட்டிய கதையாகி விட்டதே. கடவுளே என்ன இது, ராகவன் ஏன் இங்கு வரவேண்டும்? சில ஆண்டுகள் தனிமையாக இருந்ததே போதும் என்றாகி விட்டதோ?' என, நினைத்துக் கொண்டார்.

''சரி, ராகவன்... நீங்க சொன்னதிலும் ஏதோ இருக்கு. நான் என் சுயநலத்தால ஓடி வந்தாலும், அது மத்தவங்கள காயப்படுத்தக் கூடாது. யோசிக்கிறேன். தயவுசெய்து, நீங்க என்னை பார்த்ததா சொல்லாதீங்க,'' கெஞ்சும் தொனியில் கேட்டார், பரந்தாமன்.

''சரி... நல்ல முடிவா எடுங்க,'' விடைபெற்றார், ராகவன்.

அடுத்த மாதத்தில் ஒருநாள், யாரும் எதிர்பாராத, ராகவன் மட்டும் எதிர்பார்த்த சம்பவம் நடந்தது. பரந்தாமன் தன் வீட்டு கதவை தட்ட, திறந்தவள், விஜயா; ஸ்தம்பித்து நின்றாள்.

அவள் பார்வையில் ஏமாற்றம், மன்னிப்பு, பாசம், கோபம் என எல்லாம் கலந்து கண்ணீராக மாறி பொல பொலவென உதிர்ந்தது. சற்று நிலைகுலைந்து கதவுகளை பிடித்துக் கொண்டாள். மனைவியின் தோள்களை கெட்டியாக பற்றினார், பரந்தாமன்.

கணவனின் மார்பில் சாய்ந்தாள், விஜயா. அந்த பாரம், இடைப்பட்ட பிரிவு நாட்களின் சோகங்களின் மொத்த பளுவாக மாறி பரந்தாமன் மீது இறங்கியது. தன் பக்க தவறுகளை உணர்ந்து, அவள் வாயிலிருந்து, ''என்ன மன்னிச்சிடுங்க...'' என்றாள்.

''என்ன நடந்திருந்தாலும், உன்னை தனிமைப்படுத்தி இருக்கக் கூடாது,'' என, நா தழுதழுத்தபடி கூறினார், பரந்தாமன்.

அது... அப்போது, ஒரு முடிவின் தொடக்கம் ஆரம்பமானது.

கீதா சீனிவாசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us