தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தெய்வமே தேடி வந்து...

தெய்வமே தேடி வந்து...

தெய்வமே தேடி வந்து...


PUBLISHED ON : நவ 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கொசு பறக்கும் சத்தம் கூட, சுவாமிக்கு கேட்கும்; நாம் மனதில் நினைப்பதும் சுவாமிக்கு தெரியும். 'தெய்வம் மனுஷ்ய ரூபனே...' என்பதற்கேற்ப, மனித வடிவில் வந்து, அருள் புரியும் தெய்வம்...' என்பார், கிருபானந்த வாரியார்.

கடவுளிடம் நேரில் பேசும் பாக்கியம் பெற்றவர், வில்வமங்கள் சுவாமிகள். இவர், தினமும் இரவில் விஷ்ணு சஹஸ்ர நாமம் பாராயணம் செய்வது வழக்கம். ஒருசமயம், தலயாத்திரையின் போது, அருகில் உள்ள ஊரை சென்று அடைவதற்குள் நன்றாக இருட்டி விட்டது. அப்போது, தூரத்தில், சிறு வெளிச்சம் தெரிய, தட்டுத் தடுமாறி நடந்து, அவ்விடத்தை அடைந்தார். அங்கே, சிறுவன் ஒருவன் கையில், தீப்பந்தங்களை வைத்து, அதை, எதிரில் இருந்த மாமரத்தின் மீது வீசி, விளையாடியபடி இருந்தான்.

'தம்பி... இப்படி நெருப்பை வைத்து விளையாடுகிறாயே... தீயுடன், விளையாடுவது ஆபத்து என்பது உனக்கு தெரியாதா...' எனக் கேட்டார்.

'அதைப்பற்றி உங்களுக்கென்ன... உங்களுக்கு என்ன வேண்டும்; அதை சொல்லுங்கள்...' என்று சீறினான், சிறுவன்.

அமைதியான குரலில், 'இன்றிரவு, தங்குவதற்கு இடம் வேண்டும்; உன் வீடு, அருகில் இருக்கிறதா?' எனக் கேட்டார், வில்வமங்கள்.

அவன், அவருடைய கையைப் பிடித்து, அழைத்துச் சென்று, ஒரு இடத்தை காட்டி, 'இங்கே படுத்து தூங்குங்கள்... இடம் மாறி படுப்பதால், வழக்கமாக பாராயணம் செய்யும் எதையும், விட்டு விடாதீர்கள்; நீங்கள் பாராயணம் செய்யும் மந்திரங்களுக்கு உரியவர், உங்கள் அருகிலேயே இருப்பதாக, நினைத்துக் கொள்ளுங்கள்...' என்று கூறி, மறைந்து விட்டான்.

வில்வமங்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. 'யார் இச்சிறுவன்... நாள்தோறும், நான் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வது, இவனுக்கு எப்படி தெரியும்...' என்று, சிந்தித்தபடியே, தூங்கி விட்டார்.

காலையில் கண் விழித்த போது, தாம் ஒரு திருத்தலத்தில் படுத்திருப்பதை அறிந்தார். மெல்ல அவருக்கு உண்மை விளங்கியது.

'இரவு, தீப்பந்தங்களை, மாமரத்தில் எறிந்து விளையாடி, தனக்கு வழிகாட்டி, அறிவுறுத்தி, படுக்க இடமும் தந்தது, குருவாயூரில் எழுந்தருளியிருக்கும் குருவாயூரப்பன் தான்...' என்பது, அவருக்கு புரிந்தது.

இருளில் தனக்கு வழிகாட்டிய குருவாயூரப்பனுக்கு, அங்கேயே, கோவில் எழுப்பி, நான்கு திருக்கரங்களுடன், பகவான் விஷ்ணுவை எழுந்தருளச் செய்தார், வில்வமங்கள் சுவாமிகள்.

பகவான் குருவாயூரப்பனே, சிறுவனாக வந்து, மாமரத்தில் தீப்பந்தங்களை வீசி விளையாடிய திருநாள், கார்த்திகை மாதம், ஏகாதசிக்கு மறுநாள்! அதை நினைவுறுத்தும் வகையில், இன்றும் ஆலயத்தின் அருகில் உள்ள மாமரத்தில், சிறுவர்களும், பெரியவர்களும் தீப்பந்தம் எறிந்து, விளையாடுவர்.

தன்னை நாடி வந்த பக்தனுக்கு, தெய்வமே தேடி வந்து அருள் புரிந்த வரலாறு இது. துயர இருளில், திசை தெரியாமல் தவிக்கும் நமக்கும், அருள் ஒளியை காட்டி, அருகிலிருந்து காப்பாற்றும்படி, ஆண்டவனிடம் வேண்டுவோம்!

பி.என்.பரசுராமன்

திருவாசகம்!

வளர்கின்ற நின்கருணைக் கையில்

வாங்கவும் நீங்கியிப்பால்

மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்

வெண் மதிக்கொழுந்து ஒன்று

ஒளிர்கின்ற நீள்முடி உத்தர

கோச மங்கைக்கு அரசே...

தெளிகின்ற பொன்னுமின்னும்

அன்ன தோற்றச் செழுஞ்சுடரே!

விளக்கம்: வெண்மையான, ஒளி வீசும் இளம் பிறையை நீண்ட சடை முடியில் சூடிய உத்தர கோசமங்கைக்கு அரசே... பொன்னை விட ஒளி விளங்கும் செழுஞ்ஜோதியே... வளர்கின்ற நின் அருட்கரத்தால், என்னை, நீ வளைத்துக் கொள்ள முயன்றும், அதன் பிடிக்கு அகப்படாமல் விலகி, இவ்வுலகப் பற்றிலேயே ஆழ்ந்து கிடக்கும் என்னை, அப்படியே விட்டு விடுவாயோ!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us