PUBLISHED ON : நவ 27, 2016

சம்பிரதாயங்களில் சரி வர நடந்து கொள்வதன் மூலம், பிறர் மனங்களில், வலுவான சிம்மாசனம் இட்டு, அமர்ந்து விட முடியும்.
இவற்றை அலட்சியப்படுத்தினாலோ, மனத்தாங்கல்கள், பிரச்னைகள் மற்றும் சண்டைகள் என்று, விபரீதம் விளைந்து விடும்.
தமிழகத்தின், பிரபல பேச்சாளர் ஒருவரை, வெளியூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மாலைக் கூட்டம்; காலையில், நான்கைந்து பேர், அவருக்கு துண்டு போர்த்தி, மாலையணிவித்து, தடபுடலாக வரவேற்றனர். கூட்டம் முடிந்ததும், ஒரு ஓட்டுனரிடம் சொல்லி, 'ஐயாவை ரயில்வே ஸ்டேஷ்ன்லே இறக்கி விட்டு வா...' என்று அனுப்பி வைத்தனர்.
அன்றைக்கென்று, ரயில், தாமதமாகி விட, தடுமாறிப் போனார், பேச்சாளர். சென்னை வந்ததும், 'இப்படித் தான் ஒரு வி.ஐ.பி.,யை (?) நடத்துறதா... தடபுடலா வரவேற்றா போதுமா... முறையா வழியனுப்பணும்ங்ற அக்கறை வேண்டாமா... உங்களுக்கு, வேலை முடிஞ்சதுன்னா, இப்படித் தான், கழற்றி விட்டுடுவீங்களா... என்னய்யா அமைப்பு நடத்துறீங்க... கொஞ்சமாவது, மரியாதை வேணாம்...' என, 'காச் மூச்' என்று கத்தி, ஒரேயடியாக குதிக்க, சங்கத் தலைகள், ஆடிப் போயின.
கல்லூரி தோழர்கள் மூவர்; இவர்களுள் ஒருவரது தந்தை இறந்து போனார். 'துக்கம் விசாரிக்கப் போகணும்...' என்று எண்ணிய முதல் தோழருக்கு, ஏனோ, போக முடியாமல் போய் விட்டது. மற்றொரு தோழர் புத்திசாலி; தொலைபேசியிலேயே துக்கம் விசாரித்து, 'போன்ல துக்கம் விசாரிக்கிறது தப்பு; நேரே வந்து பார்க்கிறேன். விஷயத்தை கேள்விப்பட்டதுமே, 'ஷாக்'காகிப் போச்சு... அதான், உடனே, உன்னோட பேசிடலாம்ன்னு பார்த்தேன்...' என்று சொல்ல, பின்னவர், இன்று மேலும் நெருக்கமாகி விட்டார்; முதல் தோழரோ, அந்நியப்பட்டுப் போனார்.
அதுமட்டுமல்ல, இவர்களுக்கிடையிலான நட்பே, கிட்டத்தட்ட விடுபட்டு போய் விட்டது. பூரண சம்பிரதாயங்கள், சாத்தியமாகாத போதும், அரை குறை சம்பிரதாயம், எப்படி எடுபட்டு விட்டது பார்த்தீர்களா?
'மாப்பிள்ளை என்று சொல்லி, ஒரு இலையை கிள்ளிப் போட்டால், அது கூட, துள்ளிப் பார்க்கும்...' என்பர், எங்கள் சிவகங்கை மாவட்டத்தில்! உண்மை தான்; பேரன், பேத்தி பிறந்து விட்டாலும், வீட்டு மாப்பிள்ளை என்றும் மாப்பிள்ளை தான். அவரை, நன்கு நடத்த வேண்டும்.
சம்பந்தி என்றால், அவர்களை சரி வர, நன்கு கவனிக்க வேண்டும். பழகி விட்டனர் என்று நண்பர்களை போல் நடத்தினால், அதில், சில பிழைகள், குறைகள் ஏற்பட்டு விடும்; உறவு விரிசலின் ஆரம்பமே இதுதான்.
பச்சையப்பன் கல்லூரியில், என்னுடன் புகுமுக வகுப்பு படித்த நண்பர் ஒருவர், பின்னாளில், எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் அமைச்சரானார்; விஜயசாரதி என்று பெயர்.
ஒரு சந்திப்பின் போது, அமைச்சர் என்கிற மரியாதையை, அவருக்கு கொடுக்க, 'என்ன நீ... ரொம்ப சம்பிரதாயமா நடந்துக்கிறே... இன்னமும், உனக்கு நான், வாடா போடா தான்...' என்று, அவர் செல்லமாய் கோபிக்க, 'இல்லை நண்பரே... நாம் இருவர் மட்டும் இருக்கும் போது சரி; இன்று, நீங்கள் புடை சூழ இருக்கும் புதுச்சூழலில், அது பொருந்தாது...' என, இதமாக மறுத்தேன்.
'நமக்குள்ள எதுக்கு இந்த, 'பார்மாலிட்டிஸ்' எல்லாம்...' என்று பெரும்பாலோர், ஒப்புக்கு சொல்வரே தவிர, மனித மனங்களின் நீரோட்டமாய், ஒருவித சம்பிரதாய எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும்.
ஒருவரின் மனைவி அமைச்சராகி விட, 'வாடி போடி...' என்று இவரை, பலர் முன்னிலையில், கணவர் அழைக்க, அன்று இரவு செம டோஸ். 'என்னங்க நீங்க... இப்படி எல்லார் முன்னிலையிலும் வாடி போடின்னுக்கிட்டு... வீட்டுக்குள்ளங்கிறது வேற; பொது இடங்களில் இனிமே இப்படிப் பேசாதீங்க. இது, நம்ம ரெண்டு பேருக்குமே அசிங்கம்...' என்று, அமைச்சரம்மா குதிக்க, கணவர், அரண்டு - மிரண்டு அடங்கிப் போனார்.
கால் மேல் கால் போட்டு அமர்வது, மேலைநாடுகளில் தவறு இல்லை; இங்கு அப்படி அல்லவே!
எங்கள் பகுதிகளில், திருமணத்தில் கலந்து கொள்ளும் போது, வேட்டி கட்டியாக வேண்டும். பேன்ட் போட்டால், வார்த்தைகளாலேயே டின்னு கட்டிடுவாங்க.
சம்பிரதாயங்களை, பழமை வாதங்கள் என்று அடியோடு ஒதுக்கி விட முடியாது. அவை, காரணங்களோடு படைக்கப்பட்டிருக்கின்றன. அவை, நம் அறிவிற்கு எட்டாத நிலையில், அர்த்தமற்றவை என்று வகைப்படுத்துவது பொருத்தமாகாது.
வயதிற்கு மரியாதை, சடங்குகளில் நம்பிக்கை, உடல் மொழியில் கவனம் என்று, சம்பிரதாயங்களை ஒட்டி நடந்து கொண்டால், அவை, நம்மை, நாம் கண்ணியப்படுத்திக் கொள்ளக்கூடிய, நல்ல அரண்களாக, அமைந்து விட வாய்ப்பு அதிகம்; நல்ல பாதுகாப்பு அரணையும், இது அமைத்துத் தரும்.
லேனா தமிழ்வாணன்
