PUBLISHED ON : நவ 27, 2016

அன்புள்ள அம்மா —
நான், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த, பெற்றோருக்கு ஒரே பெண்; வயது, 24. உடன் பிறந்தோர் யாரும் இல்லை. 18 வயதில், திருமணமாகி, தற்போது, இரு ஆண் குழந்தைகளுக்கு தாய்.
பெற்றோரை எதிர்த்து, காதல் திருமணம் செய்து கொண்டேன். அதனால், முதலில் என்னிடம் பேசாமல் இருந்த பெற்றோர், நான் கர்ப்பமானவுடன் ஏற்றுக் கொண்டனர். அதேபோன்று, குழந்தை பிறந்து, ஒரு ஆண்டுக்கு பின், அவரது பெற்றோரும் எங்களை ஏற்று கொண்டனர். நான், என் புகுந்த வீட்டில், அவரது சுற்றத்தார் அனைவரிடமும், நல்ல மருமகள் என்றே பெயர் வாங்கியுள்ளேன்.
நானும், என் கணவரும் பள்ளி பருவத்திலிருந்தே ஒன்றாக படித்தவர்கள். விவரம் தெரியாத வயதிலேயே, 'இவர் தான் என் கணவராக வர வேண்டும்...' என்று நினைப்பேன்; அவரும், அப்படியே நினைத்துள்ளார்.
ஒரு கட்டத்தில், வெளிப்படையாக காதலித்து, திருமணமும் செய்து கொண்டோம். அன்று, நேசித்தது போன்றே, இன்றும் அளவு கடந்து அவரை நேசிக்கிறேன். இருப்பினும், இருவருக்கும் இடையே அடிக்கடி சின்னச் சின்ன சண்டைகள் வரும். அப்போதெல்லாம் நான் தான் முதலில் அவரிடம் பேச வேண்டும். எத்தனை நாட்கள் ஆனாலும், அவர் என்னிடம் பேச மாட்டார்.
எப்போதாவது குடிப்பார். அப்போது எல்லாம், காரணமில்லாமல் சண்டை வரும். சில சமயம் அடிக்கவும் செய்வார். ஆனால், அதைப் பற்றி, கவலைப்படாமல், வேலைக்கு கிளம்பி சென்று விடுவார். நானும், அதை மறந்து, அவருடன் பேசுவேன். இயல்பிலேயே எனக்கு கோபம் வராது. எத்தனை தான் என் கணவர் என்னை அவமானப்படுத்தினாலும், சிறிது நேரம் வருந்தி, பின் மறந்து விடுவேன்.
என் கணவர் மிகவும் நல்லவர்; எனக்கு, எந்த குறையும் வைத்ததில்லை. என்னை தவிர வேறெந்த பெண்ணையும் பார்க்க மாட்டார். சிலசமயம், 'நான் அடித்தது தவறு தான்; என்னை மன்னித்து விடு...' என்று அழுவார். என் மீது அவருக்கு பாசம் இருக்கிறது. ஆனால், அதை வெளிக்காட்ட மறுக்கிறார்.
ஒருநாள், என்னை இரவு முழுவதும் வெளியே தள்ளி, கதவை உட்பக்கமாக தாளிட்டு, குழந்தைகளுடன் உறங்கி விட்டார். இரவு முழுவதும், பனியில், 'அவர், கதவை திறக்க மாட்டாரா...' என்ற ஏக்கத்துடன் உட்கார்ந்திருந்தேன்.
விடிந்த பின், ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசாமல், வேலைக்கு சென்று விட்டார். வெளியூரில் இருக்கும் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றால், திரும்பி வர நான்கு நாட்கள் ஆகும். அந்த நான்கு நாட்களும், எனக்கு நான்கு ஆண்டுகளாக தோன்றும். ஆனால், அவருக்கு அத்தகைய உணர்வு எதுவும் இல்லை. நான், அவரது தம்பி உட்பட பிற ஆண்களிடம் பேசினால், அவருக்கு பிடிப்பதில்லை. 'சந்தேகமா...' என்று கேட்டால் 'அப்படியில்ல; ஆனால், நீ பேசக் கூடாது...' என்கிறார். ஒருமுறை, பலமாக என்னை அடிக்க, 'நான் குழந்தைகளுடன் எங்காவது போகிறேன்...' என்று கிளம்ப, 'நீ, என்னை விட்டு போய் விடாதே; என்னை மன்னித்து விடு...' என்று காலை பிடித்து அழுதார்.
அவரின் நம்பகத்திற்குரிய ஒருவர், என்னை வேறொரு ஆணுடன், இணைத்து கூறியிருக்கிறார். அதைக் கேட்ட அவர், என்னிடம் கூறி அழுதார். 'அப்படியில்லை...' என்று கூறி சத்தியம் செய்தேன். ஆனால், மனதுக்குள் என்னை வேறொரு ஆணுடன் இணைத்து பேசியதை, ஜீரணிக்க முடியவில்லை.
என் காதலை புரிந்து கொள்ளாத இவரை விட்டு போய் விடலாமா என்று சிலசமயம் தோன்றுகிறது. ஆனால், இவர் இல்லாமல் என்னால் வாழவும் முடியாது. சிலசமயம் அவர் செய்யும் செய்கைகள், என்னை வெறுப்படைய வைக்கிறது.
என் கவலையெல்லாம், என்னை அவர் நேசிக்கிறாரா, வெறுக்கிறாரா இல்லை நேசிப்பது போல் நடிக்கிறாரா? என் மனக் குழப்பங்களை, தெளிவுபடுத்துங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்களது அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
ஒருவரை மித மிஞ்சி நேசித்தால், ஒரு கட்டத்தில், அவர் மீது வெறுப்பு பூக்கும்; மித மிஞ்சி வெறுத்தாலோ, ஒரு கட்டத்தில், அன்பு மலரும். இது மனதின் இயல்பு. மேலும், தமக்கு பிடித்தவரை, கிள்ளி, அடித்து, உதைத்து, வன்முறையாய் அன்பை பொழிவோரும் உண்டு.
மனித மனம் விசித்திரமானது; உறவுகளை மென்மையாக கையாளாமல், பூ மாலை கிடைத்த குரங்கு போல் சில சமயங்களில் கையாளும்.
காதலிக்கும் ஆண், தன் காதலியை, மனைவியை ஒரு பொருளாகவே கருதுகிறான். காலம் முழுவதும், அப்பொருள் எதிர்கேள்வி கேட்காமல், சுய சிந்தனை இல்லாமல், அவனுடைய பாதுகாப்பில் இருக்க வேண்டும். ஒருவன், தன் மனைவிக்கு எதிராக, குரலை உயர்த்துகிறான், அடிக்கிறான் என்றால், தன் பக்கம் நியாயமில்லாததை மறைக்கிறான் என்று பொருள். மனைவி மீது சந்தேகம் கொள்வது, உச்சபட்ச காதலின், எதிர்மறை வெளிப்பாடு.
உன் கணவன், 50 சதவீத ஆணாதிக்க உணர்வும், 50 சதவீத, 'அக்மார்க்' காதலும் கொண்டவன். ஆணாதிக்க உணர்வு வெளிப்படும் போது, உன்னை அடிக்கிறான். காதல் உணர்வு பீரிடும் போது, உன் காலில் விழுந்து, மன்னிப்பு கேட்கிறான். அவன், உன்னை என்ன செய்தாலும், நீ அவனை விட்டு விலக மாட்டாய் என்பது, அவனுக்கு நன்கு தெரியும். நீ, காதலை காந்தீய வழியில் பொழிந்தால், அவன், ஹிட்லர் வழியில் வெளிப்படுத்துகிறான்.
உன் கணவன், சந்தோஷ மனநிலையில் இருக்கும் போது, 'குடிப்பதை நிறுத்துங்கள்; முடியாவிட்டால், மாதம் ஒரு முறை குடியுங்கள். ஆனால், அச்சமயங்களில் வெளியிலோ, என்னிடமோ சண்டையிடாமல், படுத்து தூங்குங்கள்...' என்று கூறு.
மேலும், 'என்னை அடிக்காதீர்கள்; எக்குதப்பாக அடிபட்டு, நான் இறந்து விட்டால், பின் யாரை அடிப்பீர்கள்...' என்று கேள். அத்துடன், 'உங்களைத் தவிர, வேறு யாரையும் கனவிலும் நினைக்க மாட்டேன். என்னை, எந்த ஆணுடனும் இணைத்து, சந்தேகப்படாதீர்கள். அது, எனக்கு தினம் தினம், நூறு மரணங்களை பரிசளிக்கிறது. துர்போதனை செய்யும், கெட்ட நண்பர்களிடம் சேராதீர்கள்.
'நம்முடைய சண்டை பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்; மனைவி என்பவள் பொம்மை அல்ல; அவளுக்கும் ஆசாபாசம், சுய விருப்பு, வெறுப்பு இருக்கிறது. அவளது இருப்பை அங்கீகரியுங்கள்.
'தாம்பத்யம், ஒரு சங்கீதம்; அதில், அபஸ்வரம் தொனிக்காமல் பாருங்கள். அத்தனைக்கும் மேலாக, நான் சொல்ல விரும்புவது, ஐ லவ் யூ புருஷா!'
- இப்படி சொல்லி பார்; நிச்சயம் மாற்றம் ஏற்படும்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
