PUBLISHED ON : ஜன 15, 2012

சினிமாவே பார்க்கக் கூடாது என்று கண்டித்து வளர்க்கப்படும் குழந்தைகளை, அரசே செலவு செய்து, பிரமாதமாய் விருந்து கொடுத்து, ஒரு நாளைக்கு, மூன்று சினிமா என்று, ஒரு வாரத்திற்கு சினிமா பார்க்க வைத்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?
அடடா... அப்படியா... குழந்தைகள் மனதை, ஏன் இப்படி கெடுக்கின்றனர் என்று, அங்கலாய்க்க வேண்டாம், இதில் பல நல்ல விஷயங்கள் உண்டு.
ஒரே ஒரு வருத்தமான விஷயமும் உண்டு, அதை கட்டுரையின் கடைசியில் பார்க்கலாம்.
உலகம் முழுவதும், குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்படும் திரைப்படங்களை, ஒரு இடத்தில் திரையிட்டு, அதை குழந்தைகளைவிட்டு பார்க்க வைப்பதற்காக நடத்தப்படுவதுதான், குழந்தைகளுக்கான திரைப்பட விழா.
இந்த திரைப்பட விழா, இரண்டு வருடத்திற்கு ஒரு முறை, இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், 'சில்ட்ரன்ஸ் பிலிம் சொசைட்டி' சார்பில், ஏதாவது ஒரு மாநில தலைநகரில் நடைபெறும், இந்த முறை, ஆந்திர மாநில தலைநகர், ஐதராபாத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, 'தங்க யானை' என்று பெயர் வைக்கப்பட்டது.
இந்தியா முழுவதிலும் இருந்து, ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து, எட்டாம் வகுப்பு படிக்கும், நான்கு குழந்தைகள் கலந்து கொண்டனர், சிறப்பு அழைப்பாளர்களாக, உதவும் உள்ளங்கள் அமைப்பை சேர்ந்த, மாற்றுத் திறனாளிக் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.
ஐதராபாத்தில், சைபர் டவர் என்ற இடத்தில் உருவாக்கப்பட்ட திரை அரங்குகளில், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஜப்பான், சீனா மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. குழந்தைகளை மையமாக வைத்து, கல்வி, வீரம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, கடலுக்கு அடியில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை முறை, காட்டிற்குள் நிகழும் அதிசயங்கள், முதலையினத்தின் வாழ்க்கை, சுற்றுச்சூழலை வலியுறுத்தும் படங்கள் என்று, ஏராளமான படங்கள் திரையிடப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட திரைப்படங்களின் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்று, குழந்தைகளுடன் இரண்டறக்கலந்து, அவர்களை உற்சாகப்படுத்தினர்.
மொத்தத்தில், அங்கு திரையிடப்பட்ட படங்கள் யாவும், படங்களாக இல்லாமல், பாடங்களாகவே இருந்தன.
மாலை வேளைகளில், குழந்தைகள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. தமிழக குழந்தைகளுக்கு பொறுப்பாளர்களாக சென்றிருந்த பள்ளி ஆசிரியர்கள், பெலிக்ஸ் கென்னடி, மற்றும் பிரமீளா ஆகியோர், நம்மூர் கலாசார நடனமான, காவடி, கரகம் போன்ற நடனங்களில், குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்து, அழைத்துச் சென்றிருந்தனர். அந்த வகையில், தமிழக குழந்தைகள் அபுபக்கர் சித்திக், அழகேசன், பிரியங்கா, சுமதி ஆகியோரின் பங்களிப்பை, விருந்தினர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
இது போன்ற வாய்ப்பு, மிகவும் அபூர்வம். இதில் கலந்துகொள்ள, வெறும் படிப்பு மட்டும் போதாது, நம்மூர் கலாசாரங்களை தெரிந்து கொண்டு, அதை பிரதிபலிக்கும் வகையில், சிறு சிறு நிகழ்ச்சிகளை நடத்தும், வல்லமை பெற்ற குழந்தைகள், நீங்கள் என்றால், அடுத்த வாய்ப்பு உங்களுக்குத் தான்.
அது சரி அந்த, 'வருத்தமான' தகவல் என்ன என்கிறீர்களா?
இந்த குழந்தைகள் திரைப்பட விழாவில், குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்பட்ட படங்கள், உலகம் முழுவதும் இருந்து வந்திருந்தன, நம் நாட்டிலும், மும்பையில் துவங்கி, கேரளாவில் தயாரிக்கப்பட்ட படங்கள் கூட, திரையிடப்பட்டன, ஆனால், தமிழகத்தில் இருந்து, ஒரு படம் கூட திரையிடப்படவில்லை. காரணம், காதலும், குத்தாட்டமும் இல்லாமல், நம்மால் சினிமா எடுக்க முடியாததுதான்!
***
எம். ராகவேந்தர்