
அன்புள்ள அம்மாவுக்கு —
வணக்கம். நான், 12 ஆம் வகுப்பு படிக்கிறேன். என் நண்பனது குடும்ப பிரச்னையை பற்றிய ஆலோசனை கேட்கவே, நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். அம்மா... என்னுடன் பயிலும், என் நண்பனுடைய தந்தைக்கு, 45 வயது இருக்கும். அவனுடைய தாயார், ஒரு அரசுப் பணியில் உள்ளார். என் நண்பனுக்கு, இரு சகோதரிகள் உள்ளனர். அக்கா ஒரு பொறியியல் கல்லூரியில், இறுதியாண்டு பயில்கிறார். தங்கை தற் போது, 11ம் வகுப்பு பயில்கிறாள்.
அம்மா... அவர்களுடைய பிரச்னை என்ன வென்றால், என் நண்பனின் தந்தை, அதிகமாக மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும் தான். அவருடைய சிறுவயதிலிருந்தே, அவருக்கு மது அருந்தும் பழக்கமும், புகைப் பழக்கமும் இருந்திருக்கிறது. இருப்பினும் இத்தனை நாட்களாக இல்லாத பிரச்னை, இப்போது ஏற்பட்டுள்ளது. அவர், அந்த பழக்கத்தை யார் கூறியும் விட்டபாடில்லை. ஆனால், இத்தனை நாட்களாக, அளவாக குடித்துக் கொண்டிருந்தார். அதனால், யாருக்கும் எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தது.
கடந்த சில மாதங்களாக, அவர் அளவுக்கு அதிகமாக குடிக்கிறார் என்றும், வீட்டில் அவருக்கும், என் நண்பனின் தாயாருக்கும், சில சர்ச்சைகள் ஏற்பட்டன என்பதையும், நான் என் நண்பன் மூலம் அறிந்தேன். என் நண்பன் அவரைப் பற்றியும், அவரது செயல்களைப் பற்றியும், அடிக்கடி கூறுவான். நான் அவனிடம், 'நீ அப்பாவைப் பற்றி கவலைப்படாதே! அவர் விரைவில் மாறி விடுவார். நீயும், அம்மாவும், குடும்பத்தைப் பற்றியும், அக்கா, தங்கையின் படிப்பு, வாழ்க்கை, ஆகியவை பற்றியும் அவருக்கு எடுத்துக் கூறுங்கள். குடும்ப நிலையையும், அவருடைய பொறுப்பு களையும் உணர வையுங்கள்...' என்று கூறினேன்.
ஆனால், அவர், யார் என்ன கூறியும், திருந்து வதாக இல்லை. நான் தற்போது, தங்களுக்கு இந்த கடிதத்தை எழுதக் காரணம், என் நண்பன் சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருப்பதுதான். அவனது தந்தை கடந்த இரண்டு, மூன்று நாட்களாக, தன் சுய நினைவையும் இழக்கும் அளவுக்கு குடித்து விட்டு வந்ததோடு, அதைக் கண்டித்த அவனுடைய தாயாருடன் சசண்டையும் போட்டுள்ளார். அம்மா... அவர், குடும்பத்தைப் பற்றிய அக்கறை, சிறிதும் இல்லாதவராக உள்ளார். ஆனால், தற்போது, அவரே நினைத்தாலும், அவரது குடியை நிறுத்த இயலாது என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால், அவர் குடிக்கா விட்டால், அவரது கைகள் நடுங்க ஆரம்பிக்கின்றன என்று என் நண்பன் கூறினான்.
அவரை மருத்துவமனைக்கு அழைத்தாலும், வர மறுக்கிறார். இதனால், என் நண்பன், அவனது சகோதரிகள் என அனைவரும், தங்களுடைய படிப்பில் கவனத்தைச் செலுத்த இயலாதவர்களாக உள்ளனர். இந்நிலை நீடித்தால், அவருடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என்று, அனைவருக்கும் பயமாக உள்ளது... இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் அம்மா.
— அன்பு மகன்.
அன்புள்ள மகனுக்கு —
நண்பனின் தந்தையின் குடிப்பிரச்னைக்கு தீர்வு கேட்டு, கடிதம் எழுதியிருக்கிறாய்.
நண்பனின் தந்தை, என்ன பணி செய்கிறார் என்பதை, நீ கடிதத்தில் குறிப்பிடவில்லை. பெரும்பாலும் குடிப்பழக்கம், பணி சார்ந்தே ஆரம்பித்திருக்கும்.
திருட்டு சந்தோஷத்துக்காக, சாகசத்துக்காக குடிப்போர் சிலர்.
மன அழுத்தத்தை, பதட்டத்தை குறைப்பதாக நினைத்து குடிப்போர் சிலர்.
வியாபார அபிவிருத்திக்காக, பார்ட்டிகளில் மட்டும் குடிப்போர் சிலர்.
ஒரு மனிதன், குடிநோயாளி ஆகிவிட்டான் என்பதற்கான அறிகுறிகள் இதோ -
* ஒரு நாள் முழுக்க, குடிப்பதையே நினைத்துக் கொண்டிருப்பது.
* வாழ்வின் பிரதானமான மற்ற சந்தோஷங்களை உதாசீனப்படுத்துவது.
* குடியின் தீமையை உணர்ந்தும், விட முடியாமல் தவிப்பது.
* பதட்டம், கலக மனப்பான்மை.
*பொறுப்புகளை தட்டிக் கழிக்க, குடியை பயன் படுத்தல்.
*நேர்மையின்மை, பிரச்னையை மிகைப்படுத்துதல்.
*மிதமிஞ்சிய குஷி, அவமானம், குற்ற உணர்ச்சி, பதட்டம் போன்ற உணர்வுகளுக்கிடையே அல்லாட்டம். இவை அனைத்தும், உன் நண்பனின் தந்தையிடம் காணப்படும். வாழ்க்கையில், ஒரு தடவை குடித்தாலும், அவர் குடிநோயாளிதான்.
உன் நண்பனின் தந்தை விஷயத்தில், கெட்டதில் ஓர் ஆறுதலான விஷயம் இருக்கிறது. நண்பனின் தாய் சம்பாதிக்கிறார். நண்பனின் அக்கா, பொறியியல் படிப்பை முடித்து, வேலைக்கு செல்ல இருக்கிறாள். நண்பன், 12ம் வகுப்பு, நண்பனின் தங்கை, 11ம் வகுப்பு படிக்கின்றனர். மொத்தத்தில், நண்பனின் குடும்பம், தந்தையை சார்ந்து இல்லை.
முதியோர்களின் சில குணாதிசயங்கள், குடிப் பழக்கத்துக்கு சாதகமாக உள்ளன. எல்லா வகை தற்கொலைகளில், 25சதவீதம், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களால் செய்யப்படுகிறது.
குடிநோயாளிகளை குணப்படுத்த மூன்று நடவடிக்கைகள் தேவை.
குடிநோயாளியை இனம் கண்டுபிடித்தல் - சிகிச்சை - புணர்வாழ்வு.
குடிநோயாளியை மீட்க, முதலில் அவரின் இணக்கம், அடிப்படைத் தேவை.
1.ஒரு ஆரம்பக்கட்ட தடுப்பு திட்டம் தயாரித்து, குடியின் தீமைகளை, குடிநோயாளிக்கு விளக்க வேண்டும்.
2.தகுதி வாய்ந்த மருத்துவத்துறை வல்லுனர் களால், குடிப்பழக்கத்துக்கு எதிரான மருத்துவம்.
3.கட்டுப்பாடான சூழ்நிலையில் மருத்துவம். ஹோமியோ மருத்துவமனையில் தங்கியிருந்து மருந்து எடுத்துக் கொள்ளல்.
4.உள்நோயாளி, புறநோயாளிகளுக்கான ஆரம்ப கட்ட சிகிச்சைகள்.
5.மருத்துவத்திற்கு பின் தொடர் கண்காணிப்பு.
6.தனி ஆலோசனை மற்றும் கூட்டு ஆலோசனை.
குடிநோயாளியை திருத்த, குடிநோயாளியின் குடும்ப உறுப் பினர்கள் இணக்கமாக செயல்பட வேண்டும். குடி நோயாளியை குறை கூறாமல், அவருடன் சேர்ந்து, அவரின் மன இறுக்கத்தை, பதட்டத்தை களைந்து, குடியிலிருந்து அவரை மீட்க வேண்டும்.
குடிநோயாளிக்கு தெரிந்தோ, தெரியாமலோ அவரை குடியிலிருந்து மீட்க ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன. குடிநோயாளிகள் நுரையீரல் பாதிப்பிலிருந்து தப்பிக்க, தினம் கீழாநெல்லியில் தயாரிக்கப்பட்ட, 'லிவ்-52' டானிக் குடிக்கலாம். சித்த மருத்துவத்தில், அணிக்கரா சூர்ண மாத்திரை கிடைக்கும். அது, எல்லாவகை வயிற்று உபாதை களையும் போக்கும். தினமும் சாப்பிடலாம். பத்தியமில்லை.
நிலவேம்பு கஷாயம், தினம் வெறும் வயிற்றில், 40 நாட்களுக்கு குடித்தால், குடியினால், ரத்தத்தில் ஏற்பட்ட கசடு நீங்கும்.
நண்பனின் தந்தையை ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லலாம். குடிபோதையிலிருந்து மீண்டோரின் அனுபவம், கேட்க கேட்க, நண்பனின் தந்தை குடியிலிருந்து விலகுவார். குடிநோயாளியின் மகன்கள், குடியில் எளிதில் சிக்குவர். நண்பனை எச்சரிக்கையாக இருக்கச் சொல்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
***