தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ராஜஸ்தானின் ஜிப்சி ராணி!

ராஜஸ்தானின் ஜிப்சி ராணி!

ராஜஸ்தானின் ஜிப்சி ராணி!


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண் குழந்தை என்பதால் பிறந்த உடனே மண்ணில் புதைக்கப்பட்ட ஒருவர், மரணத்தை வென்று, மீண்டு வந்து, பிறந்த மண்ணுக்கு மட்டுமின்றி, இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகிறார். அவர் பெயர், குலாபோ சபேரா.

கலை ஒருவரை உயர்த்தும் என்பதை தன் வாழ்வின் மூலம் மெய்ப்பித்து, இன்று தன் கிராமத்து பெண்கள் பலர் உலகம் முழுவதும் வலம் வரக் காரணமாகத் திகழ்கிறார், குலாபோ சபேரா.

கடந்த, 1960ல், ராஜஸ்தான் மாநிலத்தில், 'கல்பேலியா' எனப்படும் பாம்பு பிடிக்கும் பழங்குடியின சமூகத்தில் பிறந்த இவருக்கு, ஆரம்ப கால வாழ்க்கை மிகவும் துயரமானது.

பெண் குழந்தைகள் பிறப்பது சுமையாக கருதப்பட்ட அக்காலத்தில், அவர் பிறந்த ஒரு மணி நேரத்திலேயே, குடும்பத்தினரால் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டார். உடனடியாக, அவரது தாயும், தாயின் சகோதரியும் ரகசியமாக சென்று, மண்ணைத் தோண்டி, அந்தக் குழந்தையை மீட்டனர். அப்படி மீட்கப்பட்ட அந்தப் பெண் குழந்தை தான் இன்று வளர்ந்து, ராஜஸ்தானின் கலாசார அடையாளமாக திகழ்கிறது.

கல்பேலியா நடனம் என்பது, ராஜஸ்தானின் நாடோடி பழங்குடியின மக்களால் ஆடப்படும் ஒரு கலை வடிவமாகும். இந்த நடன அசைவுகள் பாம்பின் நெளிவு சுளிவுகளைப் போலவே இருப்பதால், இது, 'பாம்பு நடனம்' என்றும் அழைக்கப்படுகிறது. குலாபோ சிறுவயது முதலே இந்த நடனத்தை கற்று திறமையாக ஆடி வந்தார்.

அக்காலத்தில், பொதுவெளியில் பெண்கள் இந்த நடனத்தை ஆடத் தடை இருந்தது. இருப்பினும், ராஜஸ்தான் சுற்றுலாத் துறையினர் இவரது திறமையை கண்டறிந்து வெளி உலகிற்கு அறிமுகப்படுத்திய பின், இவர் உலகப் புகழ்பெற்றார்.

மிகக் குறுகிய இடத்தில் அதிவேகமாக சுழன்று ஆடுவதில் இவர் வல்லவர். இவரால் இந்த நடனத்திற்காக வடிவமைக்கப்பட்ட கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த கருப்பு நிற, 'லெஹங்கா' ஆடையே இன்று, கல்பேலியா நடனத்தின் உலகளாவிய அடையாளமாக மாறிப்போனது. தன் நடனத் திறமையால், உலகம் முழுவதும் வலம் வந்த இவருக்கு, பிரான்ஸ் நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த, 1980-களில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, இசைக்கலைஞர்கள் இவரை, பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு பாரிஸிற்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள மக்கள் இவரது நடனத்தைக் கண்டு வியந்து, இவரை, 'ராஜஸ்தானின் ஜிப்சி ராணி' என்று அழைத்தனர்.

குலாபோ சபேராவின் தொடர் முயற்சியால், 'கல்பேலியா' நடனத்தை, உலகின் கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்த்தது, யுனெஸ்கோ நிறுவனம்.

இவரது கலைச் சேவையைப் பாராட்டி, இவருக்கு, 2016ல், 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்தது, மத்திய அரசு. 65 வயதாகும் இவர், இப்போதும் அதே துடிப்புடன் மேடைகளில் நடனமாடி வருகிறார்.

தன், மூன்று மகள்களையும் நன்கு படிக்க வைத்துள்ள, குலாபோ, அவர்களுக்கும் இந்த நடனக் கலையைக் கற்றுத் தந்துள்ளார். அவர்களும் தாயைப் போலவே புகழ்பெற்று வருகின்றனர். மேலும், 'குலாபோ சபேரா' என்ற நடனப் பள்ளியை நிறுவி, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வாழ்வாதாரம் அமைத்துக் கொடுத்துள்ளார். இவரிடம் பயின்ற பல பெண்கள் இன்று உலகம் முழுவதும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கலைஞராக மட்டுமின்றி, ஒரு சமூகப் போராளியாகவும் திகழ்கிறார், குலாபோ. பெண் சிசுக்கொலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

திறமை இருந்தால் மண்ணுக்குள் புதைக்கப்பட்டாலும், மீண்டெழுந்து ஒருநாள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கலாம் என்பதே, குலாபோ சபேராவின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம்.

எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us