sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நெஞ்சம் மறப்பதில்லை!

/

நெஞ்சம் மறப்பதில்லை!

நெஞ்சம் மறப்பதில்லை!

நெஞ்சம் மறப்பதில்லை!


PUBLISHED ON : டிச 20, 2015

Google News

PUBLISHED ON : டிச 20, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''பானு... நம்மோட ரயில் சினேகிதம், இந்தளவு, நமக்குள்ள நெருக்கத்தை ஏற்படுத்தும்ன்னு நான் நினைச்சுப் பாக்கல,'' என்றான் மோகன்.

''நானும் தான்; ஒரு குழந்தைக்கு தாயாகி, கணவனை பறி கொடுத்த எனக்கு, எப்படி ஆறுதல் சொல்றதுன்னு என் அம்மா மனசொடிஞ்சு போனாங்க. தொடர்ந்து என் அப்பாவின் மறைவும் சேர்ந்து, அடுத்து என்ன செய்யப் போறோம்ங்கிற பரிதவிப்போடு, திருநெல்வேலியில் இருந்து நானும், என் அம்மாவும், என் ரெண்டு தங்கைகளோட ரயிலில் சென்னைக்கு வந்துட்டு இருக்கும் போது, எங்கள மறந்து சிறிது கண்ணசந்த வேளையில, எங்களோட பயண டிக்கெட்டும், உடமைகளும் திருட்டுப் போச்சு. அந்த நேரம் பார்த்து டிக்கெட் பரிசோதகர் வர, டிக்கெட் இல்லாததால, அடுத்த ஸ்டேஷன்ல இறங்கச் சொல்லிட்டாரு.

''பொது இடம்ன்னு கூட பாக்காம எங்கம்மா அழுதுட்டாங்க. அதை, இப்பவும் என்னால மறக்க முடியாது. அப்ப தான், தெய்வம் போல நீங்க வந்து, முன் பின் தெரியாத, எங்க நாலு பேருக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்தீங்க.

''அந்தக் கடன திருப்பிக் கொடுக்க, உங்கள மறுபடி பார்க்க வர, அந்த சந்திப்பே, நமக்குள் காதலாக வளர்ந்தது எல்லாமே, இப்ப கனவு போல் இருக்கு,'' என்றாள் பானு.

''துதி பாடியது போதும்; எப்போ உன் வீட்டில, நம் விஷயத்த பத்தி பேசப் போற?'' என்று கேட்டான் மோகன்.

''என்னைக் கேட்குறீங்களே... உங்க வீட்டில எப்போ நம்ம விஷயத்தைச் சொல்லப் போறீங்க...''

''எங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்க; என் மனைவி இறந்த பின், திருமணமே வேணாம்ன்னு இருந்தேன். வீட்ல எவ்வளவோ வற்புறுத்தினாங்க, நான் தான் சம்மதிக்கல. இப்போ நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா, அவங்க சந்தோஷப் படுவாங்க. அதனால, நீ முதல்ல, உங்க அம்மா கிட்ட கேட்டுட்டு வந்து சொல்லு,'' என்றான்.

''சரி... இன்னிக்கு கேட்கிறேன். எத்தனை நாளைக்குத் தான், நீங்க எங்க வீட்டு வந்து போறதும், நாம கடற்கரையில் சந்திக்கிறதும்... நாலு பேர் பாத்தா நல்லா இருக்காது; நான் இன்னைக்கு எங்கம்மா கிட்ட கண்டிப்பாக பேசுறேன்,'' என்றாள் பானு.

அதன்பின், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, இருவரும் கிளம்பினர்.

இரவு உணவுக்கு பின், பானுவின் குழந்தை மற்றும் அவளது இரு தங்கைகளும் தூங்கப் போயினர். பானு மட்டும் தூக்கம் வராமல், அம்மாவிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தவித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, அவளருகே வந்த அவளது அம்மா, ''பானு... அந்த மோகனப் பத்தி நீ என்ன நினைக்கறே?'' என்று கேட்டாள்.

''ஏம்மா... இப்படி திடீர்ன்னு கேக்கறே?''

''எல்லாம் காரணமாத்தான்; மோகன் நமக்கு செஞ்ச உதவியும், அவரோட பணிவு, பழகும் இங்கிதம் இதெல்லாம் அந்த தம்பி மேல எனக்கு ஒரு தனி மதிப்பை ஏற்படுத்தியிருக்கு. அவர் சம்மதிச்சார்ன்னா, உன்னை, அவருக்கு கல்யாணம் செய்து வைக்கலாம்ன்னு நினைக்கிறேன். நான் கண் மூடறதுக்குள்ள, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா, எனக்கும் நிம்மதியா இருக்கும்.

''நீ ஒருத்தி சம்பாதிச்சுத் தான் நம்ம ஜீவனம் நடக்குது. அதுக்காக, உன்னை இப்படியே விட்டுட முடியுமா... உனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுத்தா தானே எனக்கு நிம்மதி. அதனால நீயும், இதுக்கு சம்மதிக்கணும். எத்தனை நாளைக்குத் தான் நீ இப்படியே இருக்க முடியும்... என் காலத்துக்குப் பின், உன் நிலைமை என்னாகும்...

''அதுவும் மோகன் நமக்கு தெரிஞ்சவர்; உன் மீதும், நம் குடும்பத்து மீதும், ரொம்ப அக்கறையோடு பழகுறார். உன்னை கடைசி வரைக்கும் நல்லா பார்த்துப்பார்ங்கற நம்பிக்கை இருக்கு. உனக்கு சம்மதம்ன்னா சொல்லு; நான் அவர் கிட்ட பேசறேன்,'' என்றாள்.

இந்தப் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறிக் கொண்டிருந்தவளுக்கு அம்மாவே இதைப் பற்றி பேசியதும், சந்தோஷமாக இருந்தது.

''உன் இஷ்டம் போல் நடக்கட்டும்மா,'' என்றாள் பானு.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை

அந்தப் பக்கம் ஒரு வேலையாக வந்த மோகன், பானு வீட்டிற்கு வந்தான். அப்போது, பானுவின் அம்மா, ''மோகன்... என் பொண்ணை உங்களுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்கலாம்ன்னு ஆசைப்படுறேன். நிராதரவா இருந்த எங்களுக்கு, நீங்க பல சமயங்கள்ல உதவி செஞ்சு இருக்கீங்க. என் பொண்ணை நீங்க நல்லா பாத்துப்பீங்கன்னு என் மனசுக்கு படுது; உங்களுக்கு சம்மதன்னா, குடும்பத்தோடு வந்து முறைப்படி பாருங்க,'' என்றாள்.

மோகனும் சந்தோஷத்துடன், ''எனக்கும் பானுவ பிடிச்சிருக்கு; சீக்கிரமா, எங்க வீட்ல பேசிட்டு, எங்க அம்மா, அப்பாவ உங்ககிட்ட வந்து பேசச் சொல்றேன்,'' என்றான்.

சொன்னது போல் அடுத்த இரு வாரத்திற்கு பின், தன் குடும்பத்தாரோடு வந்தான். இரு குடும்பத்தாரும் பரஸ்பரம் விசாரித்து தெரிந்து கொண்டனர். பெண் பார்க்கும் சம்பிரதாயம் முடிந்த பின், மோகனிடம் தனியாக ஏதோ பேசினாள் பானு. விரைவில், தகவல் சொல்வதாக கூறி, வந்தவர்கள் கிளம்பினர்.

ஒரு மாதம் கடந்தது.

அன்று. கடற்கரையில், பானுவும், மோகனும் சந்தித்தனர்.

''மோகன்... நம்மோட கடந்த காலம் ஒரே மாதிரி இருந்தாலும், உங்களோட அணுகுமுறை, பேசும் தன்மை எல்லாம் பிடிச்சதால தான், உங்கள முறைப்படி பெண் பார்க்க வரச் சொன்னேன். ஆனா, அன்னிக்கு நான் போட்ட கண்டிஷனுக்கு, இதுவரை நீங்க எந்த பதிலும் சொல்லல; மூணு வருஷமா, இப்படியே கேள்விக்குறியா, பீச்சிலேயே பேசிக்கிட்டு இருக்கோம். இப்பவும் நீங்க காலம் கடத்தினா எப்படி...'' என்றாள்.

''நான் பதில் சொல்லாததற்கு காரணம், நீ போட்ட நிபந்தனை தான். ஆனா, இன்னிக்கு ஒரு முடிவோட வந்திருக்கேன்.

''நாம ரெண்டு பேரும் வாழ்க்கைத் துணையை இழந்தவங்க. ரயிலில் சந்திச்ச நம்ம நட்பு, காதலா இன்னிக்கு வளர்ந்திருக்குன்னா, அதற்கு காரணம், நான் உன் மீது வைத்த அன்பும், நம்பிக்கையும் தான்,'' என்று அவன் கூறிக் கொண்டிருக்கையிலேயே இடைமறித்த பானு, ''அதெல்லாம் சரி; உங்க வீட்ல தான் அம்மா, அப்பா, அக்கா, தங்கை, பாட்டின்னு ஒரு கும்பலையே சுமந்துகிட்டு இருக்கீங்களே... இதுல என் குழந்தைய எப்படி உங்களால பாத்துக்க முடியும்... நான் ஒண்ணும் ஊர் உலகத்துல நடக்காதத கேட்கலையே... தனிக்குடித்தனம் வருவீங்களான்னு தானே கேட்டேன்.

''வேணும்ன்னா, உங்க குடும்பத்துக்கு மாசா மாசம் ஒரு தொகைய குடுத்துடுங்க; நான் வேண்டாங்கல. ஆனா, அந்த கும்பல்ல வந்து என்னால வாழ்க்கை நடத்த முடியாது சொல்லிட்டேன்,'' என்றாள் கண்டிப்புடன்!

சிறிது நேரம் அமைதியாக இருந்த மோகன், ''இவ்வளவு காலம் பழகிய உங்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல,'' என்று சொல்லிவிட்டு, காரை நோக்கி நடந்தான்.

''அப்ப உங்க முடிவு தான் என்ன?''

நின்று திரும்பியவன், ''உன்னை ரொம்ப உயர்வா நினைச்சிருந்தேன். உன் குழந்தையின் படிப்பு முதல் திருமணம் வரை, ஏன் அதற்கு பின்னாடி கூட, என் குழந்தையாக நினைத்து, எல்லா பொறுப்பும் ஏத்துக்கறேன்னு சொன்னேன். நீ விரும்பினால் வேலைக்குப் போகலாம், உன் வருமானத்த வழக்கம் போல, உன் வீட்டுக்கு குடுக்கலாம். அப்படியே நீ வேலைக்கு போகலைன்னா கூட நான் பாத்துக்கறேன்னு சொன்னேன். உன் மீதுள்ள அன்பால, இந்தளவுக்கு இறங்கி வந்தேன்.

''இதை, என் குடும்பத்தாரும் என் மீதுள்ள அன்பால, பெருந்தன்மையா சம்மதிச்சாங்க. அப்படியிருக்கும் போது, என்னிடம் உனக்கு எதிர்பார்ப்பு இருப்பது போல், எனக்கும், உன்கிட்ட சில எதிர்பார்ப்புகள் இருக்கும்ன்னு உன்னால நினைக்க முடியல. உன் சுயநலத்துக்காக, அவங்கள விட்டு என்னை வரச் சொல்றே. என் குடும்பத்தினரோட பெருந்தன்மைக்கு முன், அவங்கள சுமையா நினைக்கும் நீ, எனக்கு முக்கியமா தெரியல.

''ரயில் சினேகம், வாழ்க்கை பயணமாகத் தொடரும்ன்னு நினைச்சது என் தப்பு தான்,'' என்றவன் காரில் ஏறி சென்று விட்டான்.

இவ்வளவு காலம் பழகிய மோகனிடம் இருந்து, இந்த பதிலை எதிர்பார்க்காத பானு, அதிர்ச்சியில் உறைந்தாள்.

ஒரு நல்லவரின் அன்பை இழந்து விட்டோமே என்ற ஆதங்கத்தில் அவள், நெஞ்சம் கனத்தது.

ஜெயா பத்மநாபன்

சிறுகதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவது இவரது பொழுதுபோக்கு; நல்ல கருத்துள்ள கதைகளை எழுத வேண்டும் என்பதே, தன் விருப்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us