தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/காலத்தினாற் செய்த உதவி...

காலத்தினாற் செய்த உதவி...

காலத்தினாற் செய்த உதவி...


PUBLISHED ON : ஆக 13, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரவுபதியின் திருமணம் முடிந்து, தர்மர், ராஜ சூய யாகத்தையும் முடித்திருந்த நேரம்.

ஒருநாள், நதியில் நீராடிக் கொண்டிருந்தார், கண்ணன்.

பாண்டவர்களும், கண்ணனுடன் சேர்ந்து, நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில், ஒவ்வொருவராகக் கரை ஏறினர். கண்ணன் மட்டும் கரை ஏறவில்லை; தண்ணீரிலேயே நின்று கொண்டிருந்தார்.

கரை ஏறிய ஒவ்வொருவரும், கண்ணனை அவசரப்படுத்தினர்.

கண்ணனோ, அவர்களின் வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொள்ளாதவரைப் போல இருந்தார். காரணம், அவர் இடுப்பில் கட்டியிருந்த ஆடை, நீரில் அடித்துச் சென்று விட்டது. அந்த விபரம் புரியாமல் அவசரப்படுத்தினர், பாண்டவர்கள்.

சற்று நேரத்தில், நீராடப் போனவர்கள் இன்னும் வரவில்லையே என்று, அவர்களை அழைப்பதற்காக அங்கு வந்தாள், திரவுபதி. அவளிடம் புகார் அளித்தனர், பாண்டவர்கள்.

'பாரு, நாங்க எல்லாம் குளிச்சுட்டு கரை ஏறிட்டோம். கண்ணன் மட்டும் வரவே மாட்டேங்கிறான்...' என்றனர்.

பெண்ணறிவு நுண்ணறிவு என்பதற்கு ஏற்ப, கண்ணனின் நிலையை சட்டென்று புரிந்து கொண்டாள், திரவுபதி. உடனே யாரும் அறியாதபடி, தன் புடவையிலிருந்து ஒரு பகுதியைக் கிழித்து, கண்ணனிடம் வீசினாள்.

அதை எடுத்து அணிந்த கண்ணன், கரை ஏறியதும், திரவுபதியிடம் வந்து, 'சகோதரி, நீ செய்த இந்த உதவி, பெரும் உதவி. மறக்கவே மாட்டேன். பன்மடங்கு இதைத் திருப்பிச் செய்வேன்...' என்றார்.

அதன் பின் சூதாட்டம் நடந்து, அதன் விளைவாக திரவுபதி, சபை நடுவில் அவமானப் படுத்தப்பட்ட போது, கண்ணன், புடவையை அளித்து, காத்த நிகழ்வு நடந்தது.

திரவுபதி செய்த நல்லது, பன் மடங்காகப் பெருகி, அவளை கட்டிக் காத்தது.

காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்... மூல நுாலில் இல்லாத இக்கதை, கர்ண பரம்பரை கதையாக வந்துள்ளது.

இது சொல்லும் உண்மையை உணர வேண்டுமே தவிர, 'இதெல்லாம் ஆரம்பத்தில் கிடையாது. பின்னால் வந்தது. ஏற்க முடியாது...' என, வாதம் செய்வது, வாழ்க்கைக்கு உதவாது. வாதங்களைத் தவிர்ப்போம், பேதங்கள் தாமே தவிர்ந்து போம்!

பி. என். பரசுராமன்

ஆன்மிக தகவல்கள்!

கொடி மரம், நந்தி, பலிபீடம் இவைகளுக்கு குறுக்காக சென்று பிரதட்சணம் செய்யக்கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us