தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/துணைக்கொரு துணை!

துணைக்கொரு துணை!

துணைக்கொரு துணை!


PUBLISHED ON : ஆக 13, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடிக்கடி பக்கவாட்டில் திரும்பி, வனிதாவைப் பார்த்துக் கொண்டே இருந்தாள், தேவகி.

வனிதாவின் முகத்தோற்றம் அவளுக்குள் காலையிலிருந்து உறுத்திக் கொண்டேயிருந்தது. கலகலப்பானவள், கவிதையாய் பேசுபவள், காவியமாய் சிரிப்பவள், ஓவியமாய் அழகு முகம் காட்டுபவள், மின்மினிப் பூச்சியை சுற்றி ஒளி வட்டம் இருப்பதைப் போல், அவளை சுற்றிய சூழ்நிலையை ஒளியூட்டுபவள், வனிதா.

பேராசிரியை பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, புத்தகத்தில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தாள். எழுத்தாகவும் இல்லாமல், ஓவியமாகவும் இல்லாமல் வெறும் கிறுக்கலாய் கண்ணில் பட்ட கோடுகள், வனிதாவின் மனக் குழப்பத்தை சொல்வதைப் போல் இருந்தன.

முகத்தில் மண்டிக்கிடந்த சோகம், எதையோ இழந்த மவுனம், ஏதோ ஒன்று அலைக்கழித்துக் கொண்டிருப்பதை போலிருந்தது, அவளது செயல்.

கொஞ்ச நாளாகவே, வனிதா, முருகனைப் பார்ப்பதும், அவன், இவளைப் பார்ப்பதும், பாடத்தில் சந்தேகம் சொல்லிக் கொடுக்கிறேன் பேர்வழி என, இருவரும் விரித்து வைத்த புத்தகத்தின் மீது, முகம் கவிழ்ந்து கிடப்பதும்... யார், யாருக்கு சந்தேகம் சொல்லிக் கொடுக்கின்றனர் என தோன்றும்.

நட்பா, காதலா என, முடிவுக்கு வர முடியாவிட்டாலும், 'எதிர்காலத்தில், இது காதலில் போய் முடியும்...' என, நண்பர்கள் ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

காதலாக கனிய இருந்த நட்பில் ஏதாவது பிரச்னையா அல்லது காதலை அவனிடம் சொல்ல யோசித்து, குழம்பிக் கொண்டிருக்கிறாளா?

உணவு இடைவேளையின் போது, இருவரும் வழக்கமாக சாப்பிடும் மரத்தடியில் உணவு டப்பாக்களுடன் வந்தமர்ந்தனர். கொண்டு வந்த தயிர் சாதத்தை விரல்களால் அலைந்துக் கொண்டிருந்தாள், வனிதா.

''என்னடி... காலையிலிருந்து ஒரு மாதிரியா, எதையோ இழந்த மாதிரி இருக்கிற?'' என்றாள், தேவகி.

''ப்ச், வாழ்க்கையே வெறுப்பாயிருக்குடி,'' அலுத்துக் கொண்டாள், வனிதா.

''இப்பத்தான் காலேஜ் இரண்டாவது வருஷமே படிக்கிறோம். இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருக்கு. மேற்படிப்பு படிக்கணும், வேலைக்குப் போய், கை நிறைய சம்பாதிக்கணும். அதுக்குள்ளயே வாழ்க்கை வெறுத்துட்டுதுங்கறே?'' என, சிரித்தபடியே தான் கொண்டு வந்த புளி சாதத்தை கொஞ்சம் எடுத்து, அவள் டப்பா மூடியில் வைத்தாள், தேவகி.

''எனக்கென்னமோ நான் டிகிரியையே முடிக்க மாட்டேன்னு தோணுது. எங்கேயிருந்து மேற்படிப்பு, வேலை ம்க்கும்...'' அலுத்துக் கொண்டாள்.

''டிகிரியையே முடிக்க மாட்டியா, என்னாச்சு?''

''எங்கம்மா எனக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்காங்க,'' என்றாள், வனிதா.

''என்னது... கல்யாணத்துக்கு என்ன இப்ப அவசரம். படிப்பை முடிக்க வேண்டாமா?'' என அதிர்ந்தாள், தேவகி.

''இதையேத் தான் நானும் கேட்டேன். மாப்பிள்ளை சொந்தமாம், துபாய் வேலை, நிறைய பணமிருக்காம். இப்ப விடுமுறையில் வந்திருக்காராம். கல்யாணம் முடிச்சு பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டுப் போயிடுவாராம்.

''அதனால, இவரை விட்டா அப்புறம், நல்ல மாப்பிள்ளைக் கிடைக்காதுன்னு, ஒத்தக்கால்ல நிக்கிறாங்க. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், கேட்கலை. அப்பா இல்லாத உன்னை இப்படி வளர்த்தேன். அப்படி வளர்த்தேன்னு சொல்லி அழுது அழுது காரியத்தை சாதிக்கலாம்ன்னு பார்க்குறாங்க, எங்க அம்மா,'' என்ற வனிதா, சுற்றியிருப்பவர்கள் பார்த்துவிடக் கூடாதென, கண்களில் துளிர்த்த நீரை துப்பட்டாவால் துடைத்தாள்.

அவளை பாவமாகப் பார்த்தாள், தேவகி.

''பச்... மனசுல எவ்வளவு கனவு கண்டேன், எவ்வளவு லட்சியம் வளர்த்தேன்? நிறையப் படிக்கணும், பெரிய வேலைக்குப் போகணும். எல்லாம் வேஸ்ட்,'' சாப்பிட பிடிக்காமல், பட்டென்று டப்பாவை மூடினாள்.

வனிதாவின் அம்மா மேல், தேவகிக்கு ஆத்திரமாக வந்தது.

''இதப்பார், உங்கம்மா என்ன சொன்னாலும் நீ கேட்காத. பிடிவாதமா இப்ப கல்யாணம் வேண்டாம், படிப்பு தான் முக்கியம்ன்னு சொல்லு. படிப்பை பாதியில நிறுத்தி, கல்யாணம் பண்ணிக்காத. நாம நம்ம கால்ல நிற்கணும்.

''படிப்பு இல்லாம, வேலையில்லாம எல்லாத்துக்கும் புருஷனோட கையை எதிர்ப்பார்த்து நிற்கறதைவிட அசிங்கம், வேறு எதுவுமில்லை. அப்படி நாம நின்னா, அதுதான் அவங்களுக்கு நம்மை அடிமைப்படுத்தற ஆயுதம். என்ன ஆனாலும் கல்யாணத்துக்கு ஒத்துக்காதே,'' என்றாள், தேவகி.

''பேசறதுக்கு நல்லாயிருக்கும், எங்கம்மாக்கிட்ட எதுவும் செல்லுபடியாகாது. எல்லாம் என் தலையெழுத்து வேற என்ன சொல்ல?'' என்ற வனிதாவின் விழிகள், கூட்டமாக வரும் நண்பர்களின் மத்தியில், துாரத்தில் நடந்து வந்த முருகனை பார்வையால் வருடின.

ஏக்க பெருமூச்சு சூடாய் எதிர்ப்பட்டு தேவகியை சுட்டது. மனதிற்குள் மழைத்துளி விழுந்த தளிராய் துளிர்க்க துவங்கியிருந்த காதல் செடியையும், அவள் கிள்ளி எறிய வேண்டியதை நினைத்து வெளிப்பட்ட அனல் காற்று அது என, தேவகிக்கு புரிந்தது.

வெறுப்பும், மறுப்புமாய் எதை எதையோ பேசிக் களைந்தனர்.

கல்லுாரி விட்டதும், பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தனர், இருவரும். வனிதாவின் மொபைல்போன் சிணுங்கியது. பார்த்ததும், அலட்சியமாய் புறக்கணித்தாள்.

''யாருடி?'' என்றாள், தேவகி.

''அம்மா...'' என்றாள்.

''என்னன்னு கேளு, எதுக்கு போன் பண்றாங்கன்னு தெரியும்!''

''எதுக்கு... காலையிலயே காலேஜ் போக வேண்டாம்ன்னு சொன்னாங்க.''

''ஏன்?''

''இன்னைக்கு மாப்பிள்ளை வீட்லயிருந்து பொண்ணு பார்க்க வர்றாங்க. அதனால, காலேஜ் போக வேண்டாம்ன்னு சொன்னாங்க. நான் கேட்காம வந்துட்டேன். அதான் போன் பண்ணி, சீக்கிரமா வீட்டுக்கு வரச்சொல்லி கூப்பிடுறாங்கன்னு நினைக்கிறேன்,'' என்றாள்.

அம்மா வேம்பரசியின் அழைப்பு விடாமல் வந்து கொண்டேயிருந்தது.

''என்னன்னு தான் கேளேன்டி,'' கோபப்பட்டாள், தேவகி.

''ம்... சொல்லு,'' என்றாள், வனிதா.

''மாப்பிள்ளை வீட்ல சொந்தத்துல யாருக்கோ உடம்பு சரியில்லையாம். அவங்களைப் பார்க்கப் போயிட்டதால, இன்னைக்கு வரலையாம். நாளைக்கு வராங்களாம்,'' என்றாள், அம்மா.

''நல்லதாப் போச்சு...'' என, நிம்மதி மூச்சு விட்டாள்.

''அதனால, உன் ஜாதகத்தையும், மாப்பிள்ளை ஜாதகத்தையும் எடுத்துக்கிட்டு, பொருத்தம் பார்க்க, நாகேஸ்வரம் வரைக்கும் போறேன். சாவியை பக்கத்து வீட்ல கொடுத்துருக்கேன். வாங்கிக்க,'' என்றாள், அம்மா.

சரி என்று சொல்லாமல், தொடர்பை துண்டித்தாள்.

''பொண்ணு பார்க்க இன்னிக்கு வரலை. அதுக்குள்ள ஜாதகத்தை எடுத்துக்கிட்டு பொருத்தம் பார்க்க போவுதாம் எங்கம்மா. போற வேகத்தைப் பார்த்தா பத்து நாள்லயே கல்யாணத்தை முடிச்சிடும் போலிருக்கு,'' எரிச்சலடைந்தாள், வனிதா.

தேவகி செல்ல வேண்டிய பேருந்து வந்ததுமே அவள் போய்விட, தனித்து தவித்துப் போனாள், வனிதா.

'உடன் படிக்கும் தோழியை பிரிந்த இந்த ஒரு கணமே, தனிமை தாக்குகிறதே. எப்படி இந்த கல்லுாரி படிப்பை பாதியிலேயே விட்டுட்டு போகப் போறேன்? வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய துணை கல்வி தானே. அந்த துணையை இழந்த பெண்ணுக்கு, கணவன் என்ற துணை எப்படி நிறைவை தந்துவிட முடியும்?' பலவாறாக யோசித்தபடி, பேருந்திற்காக காத்திருந்தாள், வனிதா.

திருநாகேஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய வேம்பரசி, அங்குள்ள பிரசித்திப் பெற்ற அகத்தியன் ஜோதிட நிலையத்தை நோக்கி நடந்தாள்.

கோவிலை ஒட்டியிருந்த அந்த ஜோதிட நிலையம், கிட்டத்தட்ட ஒரு பெரிய அலுவலகம் போல் இருந்தது. பெரிய ஹாலில் இருபுறமும் இருக்கைகள் போடப்பட்டிருந்ததில், மனிதர்கள் ஆக்கிரமித்தனர்.

காலியான இருக்கையை தேடி அமர்ந்தாள், வேம்பரசி.

சில நிமிடங்களில் உள்ளிருந்து வந்த ஒருவர், அவளிடமிருந்த ஜாதகங்களை வாங்கி, தன்னிடமிருந்த நோட்டில் எழுதி, ஒரு டோக்கனை கொடுத்துச் சென்றார்.

இவர் உதவி ஜோசியர். எல்லாவற்றையும் பார்த்து குறிப்பெடுத்து வைத்ததும், தலைமை ஜோசியர் பார்த்து, பலன் சொல்வார்.

ஒவ்வொருவரும் தங்களின் எதிர்காலம், திருமணம், கல்வி, வேலை வாய்ப்பு, வீடு வாங்கும் திட்டம் என, ஏதேதோ கவலையோடு அமர்ந்திருந்தனர்.

டோக்கன் முறைப்படி, அழைப்பு வந்ததும், தெய்வத்தை தேடி ஓடுவதைப் போல் தலைத் தெறிக்க ஓடினர். தங்களின் முழு வாழ்க்கையுமே அந்த ஜோசியர் சொல்லப் போகும் வார்த்தைகளில் தான் இருக்கிறது என்பதைப் போல் இருந்தது, அந்த ஓட்டம்.

வேம்பரசியின் முறை வந்தது, பெரும் படபடப்புடன் தான் உள்ளே சென்றாள்.

இருபுறமும் உதவி ஜோசியர்கள் அமர்ந்திருக்க, ஜாதகங்களைப் பார்த்து ஏதேதோ எழுதியும், கிறுக்கியும், அடித்தும், வாய்க்குள்ளேயே முணுமுணுத்தபடி இருந்தார், தலைமை ஜோசியர்.

அவரின் எதிரே பவ்யமாக அமர்ந்து, ''சாமி, ரெண்டு ஜாதகத்துக்கும் பொருத்தம் இருக்கான்னு நல்லா பார்த்து சொல்லுங்க,'' என்றாள், வேம்பரசி.

''ம்...'' என்று கம்பீரமாக கர்ஜனை குரல் கொடுத்தவர், அவளைப் பற்றிய விபரங்களை கேட்டவாறே சில நிமிடங்கள் ஏதேதோ கணக்குகளைப் போட்டுப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார்.

''ரெண்டு ஜாதகத்திற்கும் கொஞ்சமும் பொருத்தம் இல்லை.''

''சாமி, என்ன சொல்றீங்க?'' என, அதிர்ச்சியுடன் கேட்டாள், வேம்பரசி.

''ஆமாம்மா. ரெண்டு ஜாதகத்துக்கும் பொருத்தம் இல்லை. மீறி கல்யாணம் செய்தா ஒரு மாசத்துலயே பிரிஞ்சுடுவாங்க,'' என்றார்.

''ஐய்யோ...''

''அதுமட்டுமில்ல, இப்ப பெண்ணோட ஜாதகத்துல கிரகங்கள் சரியில்லை. அஞ்சு வருஷத்துக்கு கல்யாணம் செய்ய கூடாது. மீறி செய்தா, அவ வாழாவெட்டியா வந்துடுவா...'' என சொல்லி, ஜாதகத்தை அவள் கையில் கொடுத்தார்.

பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள், வேம்பரசி.

அவள் வெளியே போனதும், தலைமை ஜோசியரைப் பார்த்து, ''ஐயா... அந்த ரெண்டு ஜாதகமும் பொருந்தி தானே இருக்கு. நீங்க ஏன் அப்படி சொன்னீங்க? பாவம் அந்தம்மா முகம் வாடி போறாங்க. நல்ல இடம், வசதியான மாப்பிள்ளைன்னு ரொம்ப சந்தோஷமாய் இருந்தாங்க,'' என்றான், உதவி ஜோசியன்.

''பொருத்தம் இருந்தது தான். ஆனா, பெண்ணோட வயசை கவனிச்சியா? காலேஜ்ல ரெண்டாவது வருஷம் படிச்சுக்கிட்டிருக்குன்னு, அந்தம்மா சொல்லுச்சே. படிக்கிற பெண்ணை புடிச்சு கட்டி வச்சு, அவ வாழ்க்கையை வீணாக்கப் பார்க்குது.

''நல்லா படிச்சு வேலைக்குப் போனா, இதைவிட நல்ல மாப்பிள்ளை எல்லாம் வருவான். ஒரு பெண்ணுக்கு படிப்பு முக்கியம். அதுதான் சிறந்த துணை. அந்த படிப்பு தான் போற இடத்துல, புருஷனுக்கே ஒரு பிரச்னைன்னாலும் துணையா நிற்கும்.

''துணைக்கே துணையாகிற கல்வி, ஒரு பெண்ணுக்கு கிடைச்சே ஆகணும். அதனால தான் அப்படி சொன்னேன். ஒரு நல்லது நடக்கணும்ன்னா, இப்படி பொய் சொல்றதுல தப்பே இல்லை,'' என்று சொல்லி, தலைமை ஜோசிரியர் சிரிக்க, உதவி ஜோசியர்களும் அவரின் அறிவை எண்ணி சிலிர்த்தனர்.

ஆர். சுமதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us