PUBLISHED ON : ஆக 21, 2011

போருக்கு புகழ் பெற்ற வியட்நாமில், அதிசயங்களுக்கும் பஞ்சம் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அங்கு <<உருவாக்கப்பட்ட குகை, தற்போது, பிரிட்டன் ஆராய்ச்சி யாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப் பகுதி யில், யாருடைய கண்களுக்கும் தட்டுப்படாத, இந்த அதிசய குகை, 4.5 கி.மீ., நீளமுடையது. உலகின் மிகப் பெரிய குகைப் பாதையாக, இது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் உயரம், 80 மீட்டர்; அகலமும், 80 மீட்டர். ஓங்கி உயர்ந்து நிற்கும், மலைகளை குடைந்து, இந்த குகை உருவாக்கப் பட்டுள்ளது. இந்த குகைக்குள், பல அதிசயங்கள் நிரம்பியுள்ளன. சல, சலத்து ஓடும் சிறிய ஆறு, திரும்பும் பக்கம் எல்லாம், பச்சைப் போர்வை போர்த்தியது போல் காணப்படும் புல்வெளிகள், அடர்ந்த மரங்கள், பேரிரைச்சலுடன் விழும் அருவி என, இந்த குகையின் அழகு, பரவசப்படுத்துகிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பே, உள்ளூர்வாசி ஒருவர், இந்த குகையின் நுழைவாயிலை கண்டு பிடித்துள்ளார். உள்ளே நுழைய முயற்சித்த போது, குகைக்குள் இருந்து வந்த மர்ம ஒலியைக் கேட்டு, பயந்து ஓடி வந்து விட்டார். இதற்கு பின், யாருமே அந்த குகை இருக்கும் பக்கம் போவது இல்லை. தற்போது, பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள், இந்த குகையின் முழு விவரத்தையும், உலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர்.
— ஜோல்னா பையன்.