PUBLISHED ON : ஏப் 30, 2023

ஒரு கிராமத்தில், ஒரு பொது நுாலகம் இருப்பதே அதிசயம். ஆனால், இந்தியாவில் ஒரு கிராமத்திலுள்ள பெரும்பாலான வீடுகள், பொது நுாலகமாக செயல்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!
மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள பிலார் கிராமம் தான் அது. அதை, 'புத்தகங்களின் கிராமம்' என்கின்றனர்.
இந்தியாவின் முதல் புத்தக கிராமமான இது, மகாராஷ்டிரா மாநிலத்தில் புகழ் பெற்ற பஞ்சகனி மற்றும் மகாபாலேஸ்கர் மலைப்பகுதியின் இடையே உள்ளது. அதிகளவில் இங்கு ஸ்ட்ராபெரி பழங்கள் விளைவது குறிப்பிடத்தக்கது.
இந்த கிராமத்தில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதில், 90 சதவீதம் பேர், விவசாயிகள் மற்றும் புத்தக பிரியர்கள்.
இங்கிலாந்து நாட்டில், வாயே ஆறு பாயும் பகுதியில், தேஹ.ஆன்.வாயே என்ற அழகிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகள் நிறைய உள்ளன. இதனால், பல்துறை மக்கள் புத்தகம் வாங்க இங்கு குவிவர்.
இதை பார்த்த மகாராஷ்டிரா கல்வி அமைச்சர், வினோத் தாங்டே, அதைப் போலவே ஒரு கிராமத்தை அமைக்க நினைத்து, உருவானது தான், இந்த புத்தக கிராமம்.
இந்த கிராமத்தில், 2017ல் மூன்று கோவில்கள், இரண்டு பள்ளிகள் மற்றும் ஏழு வீடுகள் என, 25 இடங்களில் நுாலகங்கள் அமைக்கப் பட்டன. தற்போது, 35 வீடுகளில் நுாலகங்கள் இயங்கி வருகிறது. அதில், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் மராத்தி, குஜராத்தி மற்றும் ஆங்கில மொழியில் புத்தகங்கள் உள்ளன. குழந்தைகள் படிக்கும் காமிக்ஸ் முதல் பெரியவர்கள் படிக்கும் நாவல்கள் வரை உள்ளன.
நுாலகமாக செயல்படும் வீடுகளின் முகப்பில், அழகான ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. இது மலைப்பிரதேசம் என்பதால், சுற்றுலா பயணிகள் நிறைய பேர் இங்கு வந்து, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.
கோவீ. ராஜேந்திரன்
