PUBLISHED ON : ஏப் 30, 2023

அன்பு சகோதரிக்கு —
அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற, 63 வயது பெண்மணி நான். மணமான நாள் முதல் மாமனார், மாமியார், நாத்தனார் கொடுமையை அனுபவித்தவள்.
கணவரும் தன் வீட்டாரை விட்டுக் கொடுக்காமல், என்னையே குற்றவாளியாக்கி புண்படுத்துவார். என்னுடைய பேச்சு எடுபடாது. இதுபற்றி என் பிறந்த வீட்டார் தட்டிக் கேட்டபோது, அவர்களை அசிங்கமாக திட்டி, அவமானப்படுத்தியதால், ஒதுங்கி விட்டனர்.
குழந்தை பிறந்தால், நிலைமை சீராகும். எனக்கும் ஒரு பற்று கிடைக்கும் என்று நினைத்து, காத்திருந்தேன். ஆனால், அந்த பாக்கியமும் கிடைக்கவில்லை.
டாக்டரிடம் பரிசோதிக்க என்னையும் அனுப்பவில்லை; அவரும் முன்வரவில்லை. அதுபற்றி கேட்டால், அடி, உதை தான் மிஞ்சியது.
இப்படியே காலம் ஓடி விட்டது. பணி ஓய்வுக்கு பின்தான், நான் வாழ்வில் எவ்வளவு சந்தோஷங்களை இழந்துள்ளேன் என்று தெரிகிறது.
பொறுத்தது போதும் என்று, கணவரை எதிர்க்க துணிந்தேன்.
'யார் கொடுத்த தைரியத்தில், என்னை எதிர்க்கிறாய்...' என்று கேட்டு, பணியின்போது, என் மேலதிகாரியாக இருந்தவருடன் என்னை தொடர்புபடுத்தி அசிங்கமாக பேசுகிறார்.
இப்போது, மாமனார் - மாமியார் காலமாகி விட்டதும், நாத்தனாருடன் சேர்ந்து, தொடர்ந்து என்னை, 'டார்ச்சர்' செய்து வருகிறார்.
நாத்தனாருக்கு திருமணமாகியும், மாதத்தில் பாதி நாட்கள், தன், 'உதவாக்கரை' கணவருடன் எங்கள் வீட்டில், 'டேரா' போட்டு விடுவார். என் கணவரிடம், இல்லாததையும், பொல்லாததையும் கூறி, சண்டை மூட்டி விடுவது வழக்கம்.
இவ்வளவு கொடுமைக்கு பிறகும், இங்கு இருக்க வேண்டுமா என்று தோன்றுகிறது.
'என் பெற்றோர் காலமான பின், தம்பி மற்றும் அண்ணன் பராமரிப்பில் இருக்க வேண்டுமா...' என்ற தயக்கம் ஏற்படுகிறது.
இதிலிருந்து விடுதலை பெற, என்ன செய்யட்டும் சகோதரி.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு
உனக்கு திருமணமாகி, 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என யூகிக்கிறேன். மருத்துவ பரிசோதனைக்கு வர மறுத்த கணவர் தான், குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லாதவர் என, கணிக்கிறேன்.
கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் கொடுமைகளை மூன்று ஆயுள் தண்டனைகள் அளவுக்கு அனுபவித்து இருக்கிறாய்.
தேள் ஒரு தடவை கொட்டுகிறது என்றால், ஒன்று: தேளை அடித்து கொன்று விட்டு, கடிகாயத்துக்கு மருந்திட வேண்டும் அல்லது கொட்டும் தேளிடமிருந்து வெகுதுாரம் விலகி போய் மருந்திட வேண்டும். மீண்டும் மீண்டும் தேளிடம் கையை நீட்டி கொட்டு வாங்கி இருக்கிறாயே, நியாயமா?
இப்போதும் ஒன்றும் கெட்டு போய் விடவில்லை. கீழ்க்கண்டவைகளை செய்து, மீதி ஆயுட்கால நிம்மதி பெறு...
* கணவர் மற்றும் நாத்தனாரின் அவதுாறு நடத்தைகளை வீடியோ பதிவு செய். முறைப்படி விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய். வெகு சீக்கிரமாக விவாகரத்து கிடைத்து விடும்
* நீ, பழைய ஓய்வூதிய திட்டத்தில் தான் இருப்பாய். உனக்கு கணிசமான தொகை ஓய்வூதியமாக கிடைக்கும் என, நம்புகிறேன். உன் பெற்றோர் உயிரோடு இருக்கும் வரை அவர்களுடன் தங்கு. அவர்கள் காலத்துக்கு பின், தம்பி அல்லது அண்ணன் பராமரிப்புக்கு போகாதே. மாதம் பணம் கட்டி தங்கும் முதியோர் இல்லத்தில் தங்கு. துணைக்கு துணை, சிறப்பான மருத்துவம், சத்தான உணவு, பொழுதுபோக்குகள் அங்கு கிடைக்கும்
* முழு உடல் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை பெறு. அடுத்து, 25 ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்து
* ஆன்மிக சுற்றுலாக்களுக்கு சென்று வா
* உன் பிறந்தநாளை கொண்டாடும் விதமாய், முதியோர் இல்லத்தின் ஒரு நாள் செலவை, 'ஸ்பான்சர்' செய்
* பரிசு மற்றும் இனிப்புகளுடன் அண்ணன் - தம்பி வீடுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சென்று வா. அண்ணன், தம்பிகளின் பேரக் குழந்தைகளை கொஞ்சி விளையாடு
* பத்திலிருந்து பனிரெண்டு வயதுள்ள ஒரு பெண் குழந்தைக்கான கல்வி செலவை முழுமையாக, 'ஸ்பான்சர்' செய்
* மீதி வாழ்நாளில் செய்ய விரும்பும் பத்து விஷயங்களை அட்டவணைப்படுத்து. பத்தில், ஆறு விஷயங்களை நிறைவேற்றினாலும் ஆத்ம திருப்தி கிடைக்கும்
* கதாகாலட்சேபம், வில்லுப்பாட்டு கேள். நகைச்சுவை சேனல்களில் நகைச்சுவை, 'கிளிப்பிங்'குகள் பார்.
* யோகா தியானம் கற்றுக் கொண்டு, ஆன்மிகத்தில் கரைந்து போ. பால்ய கால தோழிகளை சந்தி. முகநுாலில் கணக்கு திற. விரும்பின பதார்த்தங்களை சுவை பார்.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.
