PUBLISHED ON : ஏப் 28, 2023

எஸ்.ராஜவேலு எழுதிய, 'முயற்சி எனும் அரிய பொக்கிஷம்' நுாலிலிருந்து:
இந்திய பிரதமராக, 1966 - 1977 மற்றும் 1980 - 1984 வரை, இரண்டு முறை பிரதமர் பதவியில் இருந்தார், இந்திரா.
முஜிபுர் ரஹ்மான் தலைமையில், கிழக்கு பாகிஸ்தான் உருவாக காரணமாக இருந்தவர், இந்திரா. அதன் காரணமாக, பாகிஸ்தான் பலம் பாதியாக குறைந்து, இந்தியாவிற்கு சாதகமாயிற்று.
பஞ்சாப் பொற்கோவிலில் பதுங்கிய புரட்சியாளர்களை ஒடுக்க, அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
அப்போது, பஞ்சாபில் உள்ள பொற்கோவில் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தபோது, 'என்னுடைய மரண சாசனத்தில் நான் கையெழுத்திடுகிறேன் என்பது, எனக்கு நன்கு தெரியும்...' எனக் கூறி கையெழுத்திட்டார், இந்திரா.
அவர் மேற்கொண்ட முடிவு, இந்திய வரலாற்றில் சிறப்பானதொரு இடத்தை பெற்றாலும், அதுவே அவரது வாழ்விற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.
***
அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக இருந்த, ஜார்ஜ் வாஷிங்டன், 1775 - 1783 வரை, எட்டு ஆண்டுகள் நடைபெற்ற அமெரிக்க புரட்சியை, படைத் தலைவராக இருந்து வழி நடத்தினார். அமெரிக்காவின் தந்தை என அழைக்கப்பட்டவர்.
அமெரிக்கர்களுக்கும், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் இடையில் மோதல் அதிகரித்த காலத்தில், வர்ஜினியா பிரதேசத்தின் பிரபல தலைவர்கள் மற்றும் முக்கிய அமெரிக்க பிரமுகர்கள், ஜார்ஜ் வாஷிங்டனை, விடுதலை ராணுவத்திற்கு தலைமை ஏற்று நடத்தும்படி வேண்டி கேட்டுக் கொண்டனர்.
அதன்படி, தலைமை ஏற்று நடத்தியபோது, ஒரு பாதையை சீரமைக்க வேண்டி சிப்பாய்களை, வேலை வாங்கிக் கொண்டிருந்தனர், இரண்டு கர்னல்கள். குறுக்கே விழுந்து கிடந்த ஒரு மரத்தை, சிப்பாய்கள் சிரமப்பட்டு அகற்றிக் கொண்டிருந்தனர்.
கர்னல்களில் யாராவது ஒருவர் கை கொடுத்தால் போதும், அந்த வேலை சுலபமாக முடிந்து விடும். ஆனால், இரண்டு கர்னல்களும் சிப்பாய்களை விரட்டிக் கொண்டிருந்தனரே தவிர, கை கொடுத்து உதவ முன்வரவில்லை.
அப்போது, அந்த வழியாக குதிரை மீது வந்தார், ஜார்ஜ் வாஷிங்டன். அவர், சிப்பாய்கள் சிரமப்படுவதை பார்த்து, உடனே இறங்கி உதவி செய்து, மரத்தை அகற்றினார்.
பின், கர்னல்களை பார்த்து, 'உங்களுக்கு வேறு ஏதும் உதவி வேண்டும் என்றால், எனக்கு சொல்லி அனுப்புங்கள். என் பெயர் ஜார்ஜ் வாஷிங்டன். சுதந்திரப்படையின் தலைமை தளபதியாக இருக்கிறேன்...' என்றார்.
அதைக்கேட்டு வெட்கித் தலை குனிந்தனர், கர்னல்கள் இருவரும்.
***
'சிரிக்க வைக்கிறார், கி.வா.ஜ.,' நுாலிலிருந்து:
ஆரம்ப காலத்தில், சென்னை, திருவேட்டீஸ்வரன் பேட்டையில் குடியிருந்தபோது, கி.வா.ஜ., வீட்டில், விசாலம் என்ற பணிப்பெண் வேலை செய்து வந்தார். கொஞ்சம் பருமனாக இருந்ததால், 'உனக்கு, சரியாகத்தான் பெயர் வைத்திருக்கின்றனர்...' என்று பரிகாசம் செய்வார், கி.வா.ஜ.,
ஒருநாள், அன்பர் ஒருவருடன் அமர்ந்து சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார், கி.வா.ஜ., அருகில், விசாலம் துடைப்பத்துடன் நின்று கொண்டிருந்தார். பேச்சு சுவாரஸ்யத்தில், இவர் அதை கவனிக்கவில்லை.
'என்ன இது, விசாலம் பெருக்க வேண்டும். நீங்கள் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்களே...' என்றார், கி.வா.ஜ.,வின் மனைவி.
'விசாலம் இன்னுமா பெருக்க வேண்டும்...' என்றார், கி.வா.ஜ., இதைக் கேட்டதும், அந்த விசாலமே, 'பக்'கென்று சிரித்து விட்டார்.
- நடுத்தெரு நாராயணன்
