PUBLISHED ON : ஏப் 30, 2023

காட்டுல ஒரு சாது இருந்தார். அவருக்கு, பல சீடர்கள். ஒருநாள், அவங்களையெல்லாம் கூப்பிட்டு உபதேசம் பண்ணினார்...
'இந்த உலகத்துல இருக்கிறது எல்லாமே கடவுளுடைய வடிவங்கள். அதை நீங்க எல்லாரும் நல்லா புரிஞ்சுக்கணும். அப்படி புரிஞ்சுக்கிட்டு எல்லாரையும் வணங்கணும்...' என்றார்.
எல்லா சீடர்களும் ரொம்ப அக்கறையா அதை மனசுல வாங்கிக்கிட்டாங்க.
ஒருநாள், ஹோமம் வளர்க்கிறதுக்காக, விறகு எடுக்க காட்டுக்கு போனான், சீடன் ஒருவன்.
அந்த சமயத்துல, 'யார் எங்கே இருந்தாலும் ஓடிப் போயிடுங்க. மதம் புடிச்ச யானை ஒண்ணு வந்துக்கிட்டிருக்கு...' என, யாரோ ஒருவர் பலமாக கத்தினார்.
இதைக் கேட்டதும், அங்கே இருந்தவங்க ஆளுக்கு ஒரு பக்கமா ஓடிப்போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. சிலர், கிடுகிடுன்னு மரத்துல ஏறி உட்கார்ந்துக் கிட்டாங்க. ஆனா, இந்த சீடன் மட்டும் நகரவே இல்லை.
'நான் எதுக்காக ஓடணும்? நானும் கடவுள், இந்த யானையும் கடவுள்...' என, நினைச்சுக்கிட்டு அந்த இடத்துலயே அசையாம நின்னுட்டான்.
யானை கிட்டத்துல வந்துட்டுது. இவன் அசையவே இல்லை. இருந்த இடத்துலயே நின்னுக்கிட்டு கை ரெண்டையும் மேலே துாக்கி, துதிப் பாடல் ஒன்றை பாட ஆரம்பிச்சான்.
அங்கிருந்த மாவுத்தன், 'ஓடிப் போயிடு ஓடிப் போயிடு...' என, கத்தினான்.
அந்த சீடனுக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. அவன் பாட்டுக்கு, முணுமுணுத்துக்கிட்டே இருந்தான்.
இவன் வேணும்ன்னா, அந்த யானையை கடவுளா நினைக்கலாம். ஆனா, அந்த யானை, இவனை கடவுளா நினைக்கணுமே... துதிக்கையால அவனை சுருட்டி வளைச்சு துாக்கியெறிஞ்சுட்டு போயிட்டுது.
'அம்மாடி...' என, கத்திக்கிட்டே போய் விழுந்தான். பலமான காயம். இதை கேள்விப்பட்டு ஓடி வந்து, அவனை துாக்கிக்கிட்டு ஆசிரமத்திற்கு போயினர், சீடர்கள். மெதுவா கண்ணை திறந்து பார்த்தான்.
'யானை வந்தது தான் உனக்கு தெரியுமே, நீ ஏன் அங்கே இருந்து ஓடலை...' என, கேட்டான், ஒரு சீடன்.
'உலகத்துல இருக்கிறது எல்லாம் கடவுளுடைய வடிவங்கள்ன்னு நம் குருதேவர் தானே சொன்னார். அதனால, யானையை பார்த்ததும், கடவுள் தான் வர்றார்ன்னு நினைச்சுட்டேன்...' என்றான்.
இதைக் கேட்டுக்கிட்டே அங்க வந்த குருநாதர், 'அது சரிப்பா... நீயும் கடவுள் தான். யானையும் கடவுள் தான். ஆனா, அங்கிருந்த மாவுத்தனும் கடவுள் தானே...
'அந்த கடவுள், 'ஓடிப் போ'ன்னு எச்சரிக்கை குடுத்துதே... அந்த வார்த்தையில உனக்கு ஏன் நம்பிக்கை வரலே...' என, கேட்டார்.
வேதத்தை சரியா புரிஞ்சுக்காததுனால வந்த விளைவு இதுன்னு, அப்பத்தான் அவனுக்கு புரிந்தது.
இதிலிருந்து என்ன தெரிகிறது...
கடவுள் எந்த ரூபத்திலாவது வந்து எச்சரிக்கை செய்வார். நாம்தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
பி.என்.பி.,
