PUBLISHED ON : ஆக 21, 2022

'சீரைத் தேடின் கீரை தேடு' என்பது பழமொழி. உடல் நலம் சீராக இருக்க, கீரை உணவு அவ்வளவு முக்கியமானது. இதில் நிறைய சத்துகள் உள்ளதால் தான், 'கீரை, வைத்தியரின் கைப்பெட்டி' என்று, ஆங்கிலத்தில் ஒரு பழமொழியே உள்ளது.
கீரைகளில் உள்ள சத்துக்களில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து முக்கியமானவை. நம் உடலை வளப்படுத்துவது இரும்புச்சத்து; குடலை வளப்படுத்துவது, நார்ச்சத்து. நம் உடலின் நலத்துக்கும், வளத்துக்கும் கனிமச்சத்துக்கள், உயிர் சத்துகள் தவிர, நார்ச்சத்தும் மிக முக்கியம்.
புற்றுநோய் மற்றும் சர்க்கரை, கொழுப்பு சத்துக்கள் முழுமையாக உடம்பில் சேராமல் தடுக்கிறது. ரத்தத்தில் கொழுப்பு சத்தை குறைக்கிறது; நீரிழிவை கட்டுப்படுகிறது; ரத்த அழுத்தம் சீராகவும், பித்த நீரையும் கட்டுப்படுத்துகிறது, நார்ச்சத்து.
அனைத்து வகை கீரைகளிலும் நிறைய நார்ச்சத்து இருக்கிறது. அவரை, கொத்தவரை, பீன்ஸ், வெண்டைக்காய் போன்ற காய்கள்; அன்னாசி, மாம்பழம், பேரீச்சை போன்ற பழங்கள்; துவரை, உளுந்து, முந்திரி, பிஸ்தா போன்ற பருப்புகள்; முழு தானியங்கள் மற்றும் தவிடு ஆகியவற்றிலும் நார்ச்சத்து இருக்கிறது.
தினமும் கீரை என்று இல்லாமல், ஒருநாள் கீரை, மறுநாள் அவரைக்காய், அடுத்தநாள் வாழைத்தண்டு, பழங்கள் என்று மாற்றிச் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஒரு நாளைக்கு, 40 கிராம் அளவுக்கு நார்ச்சத்து எடுத்து கொள்வது அவசியம்.