
கவலை படர்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கும் அப்பா சோமசுந்தரத்தின் கன்னத்தை கிள்ளினாள், ஆனந்தஜோதி.
''என்ன மிஸ்டர் சோமசுந்தரம்... நீங்க விட்ட கப்பல், இந்தியப் பெருங்கடல்ல கவிழ்ந்திருச்சா?''
ஆனந்தஜோதிக்கு, வயது: 25. ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறாள். முதுகலை கணினி பொறியியல் படித்தவள். மைக்ரோசாப்ட்டில் பணிபுரியும் ராம்பிரசாத்தை அடுத்த மாதம் திருமணம் செய்யப் போகிறாள்.
''ஜோதி, நீ எங்களின் ஒரே மகள். நீ கல்யாணம் பண்ணி போயிட்டா, நானும், உன் அம்மாவும் ஆறு கால்களும், கொடுக்குகளும் முறிக்கப்பட்ட நண்டு போல், துடிதுடித்து கிடப்போம். வரப்போகும் பிரிவுத்துயரின் நிழல் இப்போதே எங்கள் மீது படிகிறது.''
''விடுங்கப்பா... தினம் இரண்டு முறை போனில் பேசிக் கொள்வோம். மாதம் ஒருமுறை, நீங்க எங்களை வந்து பாருங்கள். எங்களுக்கு லீவு கிடைக்கிறப்ப, நாங்க வந்து உங்களை பார்க்கிறோம்.''
சமாதானம் ஆனது போல் சிரித்து, சமாளித்தவர், ''நீ சொல்றது சரிதான். இனி, முழு மூச்சா கல்யாண காரியத்தில் இறங்கணும்,'' என்றார், சோமசுந்தரம்.
அம்மா சீதாலட்சுமி வந்து நின்றாள்.
''ஜோதி, உனக்கு அஞ்சு லட்ச ரூபாய் மதிப்புள்ள சீர் சாமான்கள் வாங்கித் தர்றதா இருக்கோம்... உனக்கென்ன வேணும்ன்னு ஒரு லிஸ்ட் கொடு.''
''நானும் சம்பாதிக்கிறேன்; எனக்கு வரப்போகிற புருஷனும் சம்பாதிக்கிறான். எங்களுக்கு வேணும்ங்கிற சாமான்களை நாங்களே வாங்கிக்குவோம். நீங்க ஒண்ணும் வாங்க வேணாம், விடுங்க.''
''எங்க திருப்திக்கு சில சாமான்களை வாங்கி தர விரும்புறோம். எதிர்த்து, வாயாடாம வாங்கிக்க.''
''அப்படின்னா, என்னை கேட்காதீங்க... நீங்க விரும்புனதை வாங்கிக் கொடுங்க!''
''குறிப்பா, நீ ஆசைப்படுகிற சில பொருட்களை சொல்லு, எங்க பட்டியல்ல சேர்த்துக்கிறோம்,''
கண்களை குறுக்கி யோசித்தாள், ஆனந்தஜோதி. 30 நொடி கரைசலில், ''எனக்கு ஒரு பொருள் மீது ஆசை. சொன்னா தப்பா நினைக்கக் கூடாது!''
''ஒரு யானை வேணுமா, சொல்லு... வாங்கி உன் வீட்டு வாசல்ல நிறுத்தறோம்.''
''இது வேற.''
''எது வேணாலும் தயங்காம சொல்லுடி செல்லம்.''
''எனக்கு, இரும்பு டிரங்க் பெட்டி தேவை. 36 அங்குலம் நீளம், 12 அங்குலம் உயரம் இருக்கணும். பெட்டி, முழுக்க பச்சை நிறத்தில் பெயின்ட் பண்ணி, பெட்டியின் மேல்புறத்திலும், பக்கவாட்டுகளிலும் நீலமும், சிவப்பும் கலந்த பூக்கள் வரையப்பட்டிருக்கணும். பெட்டியின் மூலைகளில் வயலட் நிறம் பூசப்பட்டிருக்கணும். டிரங்க் பெட்டியை பூட்ட, திண்டுக்கல் பூட்டு இருக்கணும்.''
முதலில், சீதாலட்சுமி சிரித்தாள். அடுத்து, பெரிதாய் சிரித்தார், சோமசுந்தரம்.
''ஜோக்தான அடிக்கிற?''
''இல்லப்பா... எனக்கு, ரொம்ப நாளா டிரங்க் பெட்டி மேல ஒரு கண்ணு. டிரங்க் பெட்டி பெயின்ட்டிங்ல ஒரு புராதன தன்மை வழியணும்.''
''டிரங்க் பெட்டியை, எங்கப்பனும், எங்காத்தாவும் சீரா கொடுத்தாங்கன்னு, நீ புகுந்த வீட்டுக்கு துாக்கிட்டு போனா, அவங்க கேலி பண்ணப் போறாங்க,'' என்றாள், சீதாலட்சுமி.
''அடுத்தவங்களை பத்தி எனக்கு கவலையில்லை. ரசனை எனக்கு முக்கியம்.''
''சூட்கேஸ் விற்கிற கம்பெனிகள் நுாறு இருக்கு. சக்கரம் வச்ச ட்ராலி சூட்கேஸ்கள் குவிஞ்சு இருக்கு. முன்னாடி எல்லாம் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிற பசங்களுக்கு, டிரங்க் பெட்டி வாங்கித் தரதை பார்த்திருக்கேன்... இப்ப, டிரங்க் பெட்டிகளை எவன் விக்கிறானோ?''
''ஆசையா கேட்கிறாள்ல... விசாரிங்க, கிடைக்கும்.''
மறுநாளே உள்ளூர் கடைகளில் விசாரித்தார், சோமசுந்தரம்.
''சாரி சார்... நம்ம கடையில டிரங்க் பெட்டி எல்லாம் விக்கிறது கிடையாது.''
''வேற எங்க கிடைக்கும்?''
''தெரியாது, கேட்டுப் பாருங்க,'' என்றார்.
''இதே ஊர்ல, 30 - 40 வருஷத்துக்கு முன்ன, நாலஞ்சு டிரங்க் பெட்டி தயாரிக்கிற கம்பெனிகள் இருந்துச்சு. படிப்படியாக குறைஞ்சு இப்ப ஒருத்தரும் டிரங்க் பெட்டி செய்யிறதில்லை. இப்பல்லாம் யார் சார் டிரங்க் பெட்டி வாங்குறா... கிராமத்துலேர்ந்து வர்றவங்க கூட, 4,000 - 5,000 ரூபாய்ல, சக்கரம் வச்ச சூட்கேஸ் தான் வாங்குறங்க.
''வரியில்லாத குடிசை தொழிலா, டிரங்க் பெட்டி தயாரிப்பை, அரசாங்கம் அனுமதிச்சா பரவாயில்லை... டிரங்க் பெட்டிகளுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., அதை தயாரிச்சவங்கல்லாம் வேற தொழிலுக்கு தாவிட்டாங்க,'' என்றார், ஒருவர்.
''சார்... நான் ஒரு ஐடியா சொல்றேன்... அமேசான்ல டிரங்க் பெட்டி விக்கிறான்க... டிரங்க் பெட்டி பெயின்டிங்கை ரொம்ப மாடர்னா பண்ணிருக்கான்க,'' என்றார், இன்னொருவர்.
''சார், நான் ஒண்ணு சொன்னா கேட்கறீங்களா... மதுரை கோரிப்பாளையத்துல, டிரங்க் பெட்டி தயாரிக்கிற யூனிட் ஒண்ணு இருக்கு. அட்ரஸ் தரேன், அங்கே போய் பாருங்க... நீங்க விரும்பின மாதிரி டிரங்க் பெட்டிகள் கிடைக்கும்,'' என்றார், மற்றொருவர்.
காரில் கிளம்பி, கோரிப்பாளையத்தில் உள்ள அந்த கடையை கண்டுபிடித்தார், சோமசுந்தரம்.
வலைத்தொப்பி அணிந்த கடைக்கார பாய், 'இந்த காலத்துல, டிரங்க் பெட்டியை தேடி, ஒரு கஸ்டமரா?' என, அதிசயித்தார்.
டிரங்க் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி உருள்வது, சங்கீதமாய் சோமசுந்தரம் காதுகளில் கேட்டது. 20க்கும் மேற்பட்ட டிரங்க் பெட்டிகளை காட்டினார், பாய்.
''பிடிச்சிருக்கான்னு பாருங்க... பிடிக்கலேன்னா, உங்களுக்கு பிடிச்ச மாடல் சொல்லுங்க... சும்மா, 'நச்'ன்னு செஞ்சு தரேன்.''
''சரி... ஒரு டிரங்க் பெட்டி, 'ஆர்டர்' தரேன். பெட்டியில எல்லா கான்ட்ராஸ்ட் கலரும் இருக்கணும். பூக்கள் படம் மட்டுமல்ல, மயில், யானை, ஒட்டகச் சிவிங்கி, குரங்குகளின் படம் வரையப்பட்டு இருக்கணும்... மொத்தத்துல பார்த்தா, அது ஒரு அபூர்வ, 'ஆன்ட்டிக் கலக் ஷன்'ற, உணர்வு கிடைக்கணும்.''
''நாலாயிரம் ரூபா ஆகும்; பரவாயில்லையா?''
''நோ ப்ராப்ளம்!''
''அட்வான்ஸ் 1,000 ரூபா குடுங்க, போதும். அடுத்த வாரம் வந்து நீங்க, 'ஆர்டர்' பண்ணின டிரங்க் பெட்டியை எடுத்துக்கலாம்.''
பணத்தை நீட்டி, மீண்டும் விருதுநகருக்கு திரும்பினார்.
பரணுக்கு போக ஒரு மர ஏணி சாத்தப்பட்டிருந்தது. குண்டு பல்பை உயிர்ப்பித்தாள். ஏணியில் ஏறி, பரணுக்கு போனாள், ஆனந்தஜோதி.
தொடர்கதை வந்த பக்கங்களை தனியே எடுத்து, பைண்டிங் செய்திருந்தாள், அம்மா.
ஜாவர் சீதாராமனின், உடல் பொருள் ஆனந்தி; கிருஷ்ணகுமாரின், மறுபடியும் தேவகி; 'குமுதம்' சித்திரக்கதை, நந்துசுந்துமந்து; பாக்கியம் ராமசாமியின், அப்புசாமியும் சீதாப்பாட்டியும் கதைகள் மற்றும் ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் என, எல்லாவற்றையும் முகத்தில் கர்ச்சிப் கட்டிக் கொண்டு, ஆராய ஆரம்பித்தாள்.
சீனக்களிமண் பொம்மைகள், கண்ணாடி பாத்திரங்கள், கை உரலும் குழவியும். பார்த்துக் கொண்டே வந்தவளின் கண்கள் ஒரு பொருளில் நிலைத்தது.
ஓ... பழைய பழுதான, பேட்லாக் உடைந்த, பெயின்ட்டிங் உரிந்த டிரங்க் பெட்டி. சிரமப்பட்டு, திறந்து, தட்டிப் பார்த்தாள். உலோக ஓசை, காதில் தேன் வார்த்தது. டிரங்க் பெட்டியை உருட்டி உருட்டி, பார்த்தாள்.
தலையாட்டியபடியே ஏணியிலிருந்து இறங்கினாள்.
''அம்மா...'' கூவியவாறே சமையலறை சென்று, ''பரண் மேல பழைய டிரங்க் பெட்டி இருக்கே, யாருடையதும்மா?''
''என்னோடது தான். எங்கம்மா கல்யாணத்துல, அம்மாவுக்கு, என் பாட்டி சீரா கொடுத்தது; அம்மா எனக்கு கொடுத்தா; 'டேமேஜ்' ஆனதால, அதை பரண்ல போட்டு வச்சிருக்கேன்.''
''என்னம்மா நீ, அதை பழுது பார்த்து புதுசாக்கிடலாமே.''
''புதுசாக்கி?''
''புதுசாக்கி, எனக்கு சீரா கொடுத்துடு.''
வீட்டுக்குள் பிரவேசித்தபடியே, மகளிடம், ''அலைஞ்சு திரிஞ்சு, ஒரு டிரங்க் பெட்டிக்கு 'ஆர்டர்' கொடுத்துட்டேன்ம்மா,'' என்றார், சோமசுந்தரம்.
''தேவையில்லப்பா... பரம்பரை பரம்பரையா வர்ற அம்மாவின் டிரங்க் பெட்டியை பழுது பார்த்துக் கொடுத்துடுங்க... நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.''
''இதில் ஒன்றும் மாற்றமில்லையேம்மா.''
''இந்த டிரங்க் பெட்டி தான், எனக்கு நீங்க தரும் பெஸ்ட் சீர்...'' பூரித்தாள், ஆனந்தஜோதி.
வெகுவிமரிசையாக, ஆனந்தஜோதி - ராம்பிரசாத் திருமணம் நடந்து முடிந்தது.
ஒரு பூஞ்சோலையில், 20க்கும் மேற்பட்ட காட்டு மிருகங்கள் வரையப்பட்ட டிரங்க் பெட்டியை, சீர் வரிசைக்கு நடுவே பார்த்து விட்டான், ராம்பிரசாத்.
''என்ன டார்லிங்... வித்தியாசமா இருக்கு இது?''
நடந்ததை விவரித்தாள், ஆனந்தஜோதி.
''பெக்கூலியர்... ஹனி, என் ரிஸ்ட் வாட்ச்சை பாரு,'' இடது மணிக்கட்டை காட்டினான்.
''இது ஸீகோ குவார்ட்ஸ் வாட்ச். தங்க முலாம் பூசினது. எங்கப்பாவுக்கு, தாத்தா கல்யாணப் பரிசா கொடுத்தது. ரிப்பேராகி வீட்டுல கிடந்தது. எடுத்து, 'சர்வீஸ்' பண்ணி கட்டியிருக்கேன்.''
''வாவ்!'' என்றாள், ஆனந்தஜோதி.
''இளைய தலைமுறைக்கு பழமை சார்ந்த விஷயங்கள் பிடிக்காது என, எவன் சொன்னது? பழமை இல்லாமல் புதுமை இல்லை என்ற உண்மை, நமக்கு நன்றாக தெரியும். பழமையில் சில ரத்னகற்கள் கிடைத்தால், எடுத்து நகாசு பண்ணி எங்களின் புதிய மோதிரத்தில் பதிப்போம். காலசக்கரத்தில் பழைமையும் புதுமையும் மாறி மாறி சுழலும்...'' என்று கூறியவாறே, மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான், ராம்பிரசாத்.
ஆர்னிகா நாசர்