தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (19)

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (19)

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (19)


PUBLISHED ON : ஜூன் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் கொலை செய்யப்பட்டதற்கான, 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'டை கொடுத்து கிளம்பினார், டாக்டர் சுகன்யா. மருத்துவமனையில் புவனேஷை பார்க்க வந்த தருணிடம், அவன் உடல் நிலை மோசமாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தாள், நர்ஸ் -

'குட் ஹோப் ஹாஸ்பிடல்' சீப் டாக்டர் நாராயணமூர்த்தி முன், கவலை தோய்ந்த பார்வைகளோடு உட்கார்ந்திருந்தனர், அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர் செழியனும், தருணும். அவர், தன் கையில் வைத்திருந்த, 'ஸ்கேன் ரிப்போர்ட்'களை பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தார்.

''புவனேஷை ஐ.சி.யூ.,விலிருந்து நார்மல் வார்டுக்கு கொண்டு வந்து, இரண்டு நாட்கள் ஓய்வாய் இருக்க வைத்து, வீட்டுக்கு அனுப்பிடலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தோம். இந்த நேரத்துல, இப்படியொரு சம்பவம் நடந்தது எனக்கு ஆச்சரியமாகவும், அதே நேரத்துல அதிர்ச்சியாகவும் இருக்கு.''

''புவனேஷோட உடல்நிலை இப்போ எப்படியிருக்கு டாக்டர்?'' என்றார், செழியன்.

''கொஞ்சம் சீரியஸ்ன்னு தான் சொல்லணும். இன்னொரு முக்கியமான, 'ஸ்கேன்' மற்றும் 'ப்ளட் ரிப்போர்ட்'டும் அரை மணி நேரம் கழிச்சுதான் கைக்கு வரும். அந்த முடிவை பார்த்த பின்தான் அடுத்தகட்ட சிகிச்சையை பத்தி யோசிக்க முடியும்.''

டாக்டரின் பேச்சில் தருண் குறுக்கிட்டு, ''நான் புவனேஷை போய் பார்க்கலாமா, டாக்டர்?''

''சாரி... 'கிரிட்டிகல் கேர் யூனிட்'ல, டாக்டர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை. புவனேஷோட உடல்நிலை இப்போ எப்படியிருக்குன்னு தெரிஞ்சுக்க, 'சி.சி.யூ., நர்ஸ் ரிப்போர்ட் ஷீட்'டைப் பார்த்தாலே போதும்,'' என்ற டாக்டர், தனக்கு முன் இருந்த கம்ப்யூட்டருக்கு உயிர் கொடுத்து, திரையை வெளிச்சமாக்கி, 'கீ போர்டில்' விரல்களை ஓட விட்டார்.

'சி.சி.யூனிட்' என்ற வார்த்தைக்குக் கீழே நோயாளிகளின் பெயர்கள் வரிசையாய் பளிச்சிட்டு நகர்ந்தன. புவனேஷின் பெயரை டாக்டர், 'டிக்' செய்ய, 'நர்ஸ் ரிப்போர்ட் ஷீட்' ஒன்று, 'ஜூம்' செய்யப்பட்டு, கம்ப்யூட்டர் திரை முழுவதும் பரவியது.

'எம்.சி.ஜி., ஸ்கோர் ரேன்ஞ்ச் லெவல் 1, மாடரேட்லி சிவியர், பேதாலஜிகல் கண்டிஷன்ஸ், ஈ.சி.ஜி., ட்ரேசஸ்' என்று, ஆங்கில மருத்துவ வார்த்தைகள் வரிவரியாய் ஓடிக்கொண்டிருந்தது.

''புவனேஷ், இன்னமும் மாடரேட்லி சிவியர் என்ற, 'கண்டிஷன்'லதான் இருக்கார். இது லெவல் 1. இதுவே லெவல் 2 ஆக இருந்தால், சிவியர். அதுவே, 3 ஆக இருந்தால், வெரி சிவியர். இப்ப இருக்கிற நிலைமை கொஞ்சம் சிக்கலானாலும், புவனேஷைக் காப்பாத்தறது எங்களுக்கு பெரிய சவாலாயிருக்கும்,'' என்றார், டாக்டர்.

டாக்டர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, லேப் டெக்னீஷியன் ஒருவர், கதவை தள்ளியபடி கையில் பெரிய பிரவுன் கவரோடு உள்ளே வந்தார். லேசாய் முகம் மலர்ந்தார், டாக்டர்.

''வாங்க ஆனந்த்... புவனேஷோட, 'ஸ்கேன்' மற்றும் 'ப்ளட் ரிப்போர்ட்' தயாராயிடுச்சுன்னு நினைக்கிறேன்.''

''எஸ் டாக்டர்.''

''புவனேஷ் ரிபோர்ட்டில் ஏதாவது மாறுதல் தெரிந்ததா?'' சீப் டாக்டர் கேட்க, பதில் சொல்லாமல் மவுனமாய், செழியனையும், தருணையும் மாறி மாறி பார்த்தார், லேப் டெக்னீஷியன் ஆனந்த்.

''நான் உங்ககிட்டே பேசிட்டிருக்கேன். நீங்க பதில் சொல்லாம அவங்களைப் பார்த்துட்டிருந்தா என்ன அர்த்தம்?''

''இந்த ரிப்போர்ட்டைப் பத்தி கொஞ்சம் தனியா பேசணும், டாக்டர்.''

தன் முகத்திலிருந்த கண்ணாடியை அதிர்ச்சியோடு கழற்றியபடி ஆனந்தை ஏறிட்டார், டாக்டர்.

''தனியா பேசணுமா?''

''ஆமா டாக்டர்.''

''அப்படித் தனியாய் பேச வேண்டிய அவசியமில்லை, ஆனந்த். இவர், அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர்; இவர், புவனேஷோட நண்பர். இவங்க ரெண்டு பேருக்கும் பிரச்னை என்னன்னு தெரியறதுல, எந்த ஒரு தப்பும் இல்லை. மொதல்ல இப்படி உட்காருங்க,'' தனக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியைக் காட்டினார், டாக்டர்.

தயக்கத்தோடு உட்கார்ந்தார், ஆனந்த்.

''ரிப்போர்ட்ஸ்ல அப்படியென்ன இருக்கு?''

''நீங்களே பாருங்க டாக்டர்.''

பிரவுன் கவருக்குள் இருந்த நான்கைந்து தாள்களை எடுத்து டாக்டரிடம் நீட்டினார், ஆனந்த். கண்ணாடியைப் பொருத்தி படிக்க ஆரம்பித்தார், டாக்டர். பத்து விநாடிகளுக்குப் பின், அவருடைய முகத்தில் மாற்றம் தெரிந்தது.

ஆனந்தை கலவரத்தோடு பார்த்தார்.

''ஸீம்ஸ் டு பி எக்ஸ்ட்ராவேசேஷன் ஐ.வி?''

''அதேதான் டாக்டர்.''

''எப்படி சாத்தியம்?''

''தெரியலை... அதுதான் குழப்பமாய் இருக்கு. சோதனை முடிவை உறுதி செய்ய, மறுபடியும் ஒரு தடவை புவனேஷை, 'டெஸ்ட்'டுக்கு உட்படுத்தி பார்த்துட்டேன், டாக்டர்.''

''புவனேஷ் ஐ.சி.யூ.,வில் இருந்தபோது, அந்த நேரத்தில் அங்கேயிருந்த டியூட்டி டாக்டர்ஸ் யாரு?''

''டாக்டர் சதானந்த், குருசந்தர், விஸ்வநாத் மூணு பேர் இருந்திருக்காங்க. ஸ்டாப் நர்ஸ் ஞானத்துக்கு கீழே ஏழு நர்ஸ், டியூட்டி பார்த்து இருக்காங்க.''

''அவங்களுக்கு இந்த ரிப்போர்ட் விஷயம் தெரியுமா?''

''தெரியாது.''

''இனிமேலும் சொல்ல வேண்டாம். அந்த டியூட்டி டாக்டர்ஸ் மூணு பேரையும், உடனடியாய் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க.''

''எஸ் டாக்டர்,'' என்ற ஆனந்த், அந்த அறையிலிருந்து வெளியேறினார்.

''புவனேஷுக்கு என்ன பிரச்னை டாக்டர்?'' கேட்டார், செழியன்.

டாக்டர் நாராயணமூர்த்தி வியர்வையில் மினுமினுத்த தன் நெற்றிப் பரப்பை கர்ச்சீப்பால் ஒற்றியபடி, உலர்ந்து போன உதடுகளோடு பேச ஆரம்பித்தார்...

''எக்ஸ்ட்ராவேசேஷன் ஐ.வி., என்ற மெடிக்கல் வார்த்தையை, நீங்க கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பொதுவா நோயாளிகளுக்கு, 'ட்ரிப்ஸ்' மூலமா மூணு வகையான, ஐ.வி., ப்ளூயிட்சை நரம்புகள் வழியாக உடம்புக்குள்ளே செலுத்துவோம்.

''இந்த மூணுமே பொதுவான, பாதுகாப்பான, ஐ.வி., ப்ளூயிட்ஸ். ஆனா, 'வெசிகன்ட்ஸ்'ன்னு சொல்லப்படுகிற ஒரு வகையான காஸ்டிக் மருந்துக்களை ஐ.வி.,யில் செலுத்தக் கூடாது. அப்படி செலுத்தறது அந்த நோயாளியின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம். இம்மாதிரியான ஒரு சட்ட விரோத மருத்துவ சிகிச்சைக்குப் பேர் தான் எக்ஸ்ட்ராவேசேஷன் ஐ.வி.,''

பதட்டம் நிறைந்த குரலில், ''டாக்டர்... யூ மீன் இந்த எக்ஸ்ட்ராவேசேஷன் ஐ.வி., புவனேசுக்கு கொடுக்கப்பட்டிருக்குன்னு சொல்ல வர்றீங்களா?'' கேட்டான், தருண்.

''எஸ்... ரத்த பரிசோதனையிலும், 'ஸ்கேன்' ரிப்போர்ட்'லேயும், 'வெசிகன்ட்ஸ்' என்ற அந்த வார்த்தை உறுதி செய்யப்பட்டிருக்கு.''

''இதனால என்ன பிரச்னைகள் ஏற்படும்?''

''உடம்பில் இருக்கிற திசுக்கள் பாதிக்கப்பட்டு, செல்கள் சிதைவடைஞ்சு, உள்ளுறுப்புகள் செயல் இழக்கும். அடுத்த இரண்டு மாதத்திற்குள் மரணம் நிச்சயம். மரணம் வரைக்கும் கோமா நீடிக்கும்.''

தருணும், செழியனும் திகைத்துப் போய் உட்கார்ந்திருக்க, சில விநாடிகள் மவுனமாய் இருந்து, பேச்சைத் தொடர்ந்தார், டாக்டர்...

''நல்லவேளையாய் ஸ்டாப் நர்ஸ் ஞானம், புவனேசுக்கு பொருத்தியிருந்த ஐ.வி., செட்டை மாத்தப் போன போது, 'கான்ஷியஸ்' இல்லாமல் இருந்ததையும், மூக்கிலிருந்து ரத்தம் வடிந்ததையும் பார்த்ததால, உடனடியாய், 'கிரிடிக்கல் கேர் யூனிட்'டுக்கு, 'ஷிப்ட்' பண்ணி, சிகிச்சை கொடுக்க முடிஞ்சுது.

''அப்படி சிகிச்சை கொடுத்தும், புவனேஷ் இன்னமும் அபாயக் கட்டத்தை தாண்டலை. மூணு மணி நேரத்துக்கு ஒரு தடவை, எல்.எஸ்.டி., போட வேண்டியிருக்கு. புவனேஷோட அண்ணனும், அண்ணியும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. சிகிச்சையை தொடரும்படி சொன்னதால, மருத்துவ சிறப்பு குழு ஒன்றை நியமிச்சு, 'மானிட்டரிங்' பொறுப்பை அவங்ககிட்ட ஒப்படைச்சுட்டேன்.''

''புவனேஷ் உயிர் பிழைக்க முடியும்ங்கிற நம்பிக்கை, உங்களுக்கு இருக்கா டாக்டர்?''

தன்னுடைய தோள்பட்டைகளை மெல்ல, 'ஜெர்க்' செய்து, உதட்டைப் பிதுக்கினார், டாக்டர்.

''இந்த நிமிஷம் வரைக்கும் இல்லை. இனி வரப்போகும் நிமிஷங்களில் புவனேஷ் எப்படி இருப்பார்ன்னு என்னால சொல்ல முடியாது.''

தருண் பேச முயன்ற விநாடி, அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்த மொபைல்போன், 'வைபரேஷனில்' உறுமியது. அழைப்பது யாரென்று எடுத்துப் பார்த்தான். இக்பாலின் பெயர் நகர்ந்து கொண்டிருந்தது.

முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் செழியனிடம் திரும்பி, ''வங்கியிலிருந்து போன் பண்றாங்க சார்,'' என்றான்.

''ஏதோ முக்கியமான விஷயம் இருக்கப் போய்த்தான் கூப்பிடறாங்கன்னு நினைக்கிறேன். போய் பேசிட்டு வாங்க.''

நிதான நடையில் அறையை விட்டு வெளியேறி, காரிடார் ஏரியாவுக்கு வந்து, யாரும் இல்லாத இடமாகப் பார்த்து நின்று, மெல்ல குரல் கொடுத்தான், தருண்.

''சொல்லு இக்பால்.''

''என்ன... உன் நண்பன் புவனேஷைப் பார்த்தியா... எப்படி இருக்கான்?''

''அவன் இப்போ, 'கிரிடிக்கல் கேர் யூனிட்'ல அனுமதிக்கபட்டிருக்கான்.''

''அட... பரவாயில்லையே. ஐ.சி.யூ.,விலிருந்து சி.சி.யூ.,விற்கு இவ்வளவு சீக்கிரத்துல, 'பிரமோஷன்' கிடைச்சிருக்கு... ஏன் என்னாச்சு?''

''டியூட்டி டாக்டர்ஸ் யாரோ, தவறான சிகிச்சை கொடுத்திருக்காங்க.''

மறுமுனையில் சிரித்தான், இக்பால்.

''அது, தவறான சிகிச்சை இல்லை. சரியான சிகிச்சை தான். 'எக்ஸ்ட்ராவேசேஷன் ஐ.வி.,' இப்ப நான் சொன்ன மெடிக்கல் வார்த்தை சரியா... டாக்டர் சொல்லி இருப்பாரே?'' திடுக்கிட்டான், தருண்.

''இது எப்படி உனக்கு...''

''தெரியும்ன்னு கேட்கறியா... எல்லாமே என்னோட ஏற்பாடு தான்.''

சுற்றும் முற்றும் பார்த்து, குரலைத் தாழ்த்தினான், தருண்.

''நம்ம திட்டத்துல புவனேஷை தீர்த்துக் கட்டற விஷயமே இல்லையே?''

''இல்லை தான். ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி நான் தான், அதைச் சேர்த்துக்கிட்டேன். முகிலா காணாம போனதுக்குக் காரணம் நானோ, ஜோஷோ இருக்கலாம்ன்னு புவனேஷ் எந்த நிமிஷம் ஊகிச்சானோ அந்த நிமிஷத்திலிருந்தே அவன் தண்ணி பாம்பு கிடையாது; விஷப்பாம்பு.

''உங்கிட்ட விஷயத்தை சொன்ன மாதிரி, அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர் செழியன்கிட்ட சொல்லமாட்டாங்கிறது என்ன நிச்சயம்? அதான், 'எக்ஸ்ட்ராவேசேஷன் ஐ.வி.,'க்கு ஏற்பாடு பண்ணிட்டேன். அவன் உயிரோடு இருக்கப்போறது இன்னும் ஒரு வாரமோ, பத்து நாளோ தான். அதுவரைக்கும், 'கோமா ஸ்டேஜ்' தான்.''

''இந்த ஆபத்தான ஐ.வி., விஷயத்தில் உனக்கு உதவி பண்ணின டாக்டர் யாரு?''

''எனக்கு உதவி பண்ணினது அந்த ஹாஸ்பிடலில் இருக்கிற டாக்டரோ, நர்சோ கிடையாது.''

''அப்புறம் வேற யாரு?''

தருண் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் முதுகுப் பின், யாரோ நிற்பது போன்ற உணர்ச்சி; திரும்பிப் பார்த்தான். தீப்தி.

தொடரும்

ராஜேஷ்குமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us