தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தமிழகத்தின் ஓணக் கோவில்!

தமிழகத்தின் ஓணக் கோவில்!

தமிழகத்தின் ஓணக் கோவில்!


PUBLISHED ON : ஆக 27, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆகஸ்ட் 29 - ஓணம்

மகாபலி மன்னனை, திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆட்கொண்ட நன்னாள், திருவோணம். கேரள மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும், தமிழகத்துக்கும், ஓணத்துக்கும் நிறையவே தொடர்பிருக்கிறது. 27 நட்சத்திர தேவதைகளை, சந்திர பகவான் திருமணம் செய்ததாக வரலாறு கூறும்.

இதில், ரோகிணி என்பவள் மீது, அதிக அக்கறை செலுத்தினான், சந்திரன். இதனால் வருத்தமடைந்த மற்ற தேவிகள், தங்கள் தந்தை தட்சனிடம் புகார் கூறினர். சந்திரனின் அழகு அழிந்து போக சாபமிட்டான், தட்சன்.

இந்த சாபம் அவனுக்கு தேவை தான் என, மற்ற தேவிகள் ஆறுதல் கொண்டாலும், திருவோண நட்சத்திர தேவிக்கு மட்டும் மனம் கேட்கவில்லை. சந்திரனின் அழகை மீட்டுத்தரும்படி, பெருமாளை வேண்டி, தவமிருந்தாள்.

பெருமாள் அவள் முன் தோன்றி, சந்திரனுக்கு மீண்டும் அழகை தந்தார். இதன்படி, '15 நாட்கள் வளரும் ஒளியுடனும், 15 நாட்கள் தேயும் ஒளியுடனும் அவன் திகழ்வான்...' என்றார். திருவோண தேவி மகிழ்ந்தாள். அவளது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை மனதில் கொண்டு, அந்த நட்சத்திரத்தையே தனதாகக் கொண்டார்.

இந்த நிகழ்வின் அடிப்படையில், வேலுார் மாவட்டம், திருப்பாற்கடல் கிராமத்தில், பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில் எழுந்தது. இங்கே, சிவலிங்கத்திற்குரிய ஆவுடையார் மீது, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது விசேஷத்திலும் விசேஷம். இதை வேறு எங்கும் காண முடியாது.

அது மட்டுமல்ல, மற்ற கோவில்களில், ஏகாதசியன்று, சொர்க்கவாசல் வழியே வெளியே வருவார், பெருமாள். இங்கே சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் உள்ளே சென்று, பெருமாளைத் தரிசிப்பர்.

ஏற்கனவே இந்தக் கோவிலில் இரண்டு வாசல்கள் உள்ளன. ஆக, மூன்று வாசல்கள் வழியாக கோவிலுக்குள் சென்று, பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பக்தர்களுக்கு கிடைக்கும்.

திருமால் பக்தரான புண்டரீக மகரிஷி, இந்தக் கோவிலுக்கு வந்தார். கருவறையில், சிவலிங்கத்திற்குரிய ஆவுடையார் இருப்பதைக் கண்டதும், தவறுதலாக வேறு கோவிலுக்கு வந்து விட்டோமோ என, வெளியே கிளம்பினார்.

அப்போது, ஒரு முதியவர் அவரைத் தடுத்து, இது பெருமாள் கோவில் தான் என்றவர், கருவறைக்குள் சென்று, ஆவுடையார் மேல் ஏறி நின்று, பெருமாளாக காட்சி தந்தார். அத்துடன் சயன நிலையிலும், அமர்ந்த நிலையிலும் காட்சி தந்து, 'முனிவரே, திருப்பாற்கடலில் மட்டுமே இத்தகைய காட்சியைக் காண இயலும். எனவே, இந்த தலம், திருப்பாற்கடல் என வழங்கப்படும்...' என்றார்.

திருவோண நட்சத்திரத்தன்று, இந்தக் கோவிலுக்கு வந்து பூஜித்தால், பக்தர்களின் தோஷங்கள் நீங்கும். பூலோகத்தில் காண முடியாத, 107வது திவ்யதேசமான திருப்பாற்கடலை, இந்தக் கோவிலைக் காண்பதன் மூலம் நிறைவு செய்யலாம்.

வேலுார் - சென்னை சாலையில், 20 கி.மீ., துாரத்தில் காவேரிப்பாக்கம் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ., துாரத்தில், திருப்பாற்கடல் உள்ளது. இவ்வளவு விசேஷமான தலத்தை வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிப்பது நல்லது.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us