PUBLISHED ON : ஆக 27, 2023

விதைக்குள்
விருட்சம் இருக்கும்
மகத்துவத்தை
மண் அறிந்து கொள்கிறது!
பாறைக்குள்
சிலை இருக்கும்
அற்புதத்தை
உளி அறிந்து கொள்கிறது!
மேகத்திற்குள்
மழை இருக்கும்
ஆச்சரியத்தை
வானம் அறிந்து கொள்கிறது!
வண்ணத்திற்குள்
ஓவியம் இருக்கும்
அழகை துாரிகை
அறிந்து கொள்கிறது!
மழைத் துளியே
முத்தாகும் அதிசயத்தை
சிப்பி அறிந்து கொள்கிறது!
சிறு பிறையேபவுர்ணமியாக
வளர்ச்சியடைவதை
இரவு அறிந்து கொள்கிறது!
கட்டித் தங்கத்திற்குள்
ஆபரணம் மறைந்திருப்பதை
நெருப்பு அறிந்து கொள்கிறது!
தோல்விக்குள் தான்
வெற்றியின் முகவரி
இருப்பது புரியாமல்
மானிடா நீ புலம்புகிறாய்!
உலகம் திறந்திருக்கும்
புதையல் நீ
கண்களை மூடிக்கொண்டு
ஒன்றுமில்லை
என்று வருந்துகிறாய்!
முத்து மிதந்து வராது
மூழ்கி தான் எடுக்க வேண்டும்!
முயற்சி செய்பவனுக்கேஇமயமும் படி கல்லாகும்
வானமும் அவன் கையில்
வசப்படும்!
— கு. வைரச்சந்திரன், திருச்சி.
